மதுரை திருவள்ளுவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழா மதுரையில் மிகச்சிறப்பாக சனவரி 14 முதல் 18 வரை நடைபெற்றது. சனவரி 18ஆம் நாள் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு பொ.தி.ரா. கலை விசயராசன் தலைமை தாங்கினார். கழக ஆட்சித் தலைவர் முனைவர் இராம. பாண்டுரங்கன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் பழ.நெடுமாறன், சுந்தர.மோகன்காந்தி, தா.இரா. தினகரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பவளவிழா மலரை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், திருக்குறள் செம்மல் இரா. இளங்குமரனார், அருள்செல்வர் சங்கர சீத்தாராமன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். ஆ. சிவராமகிருட்டிணன், கரு. இராசேந்திரன், கா. கருப்பையா, வி. வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
பழ.நெடுமாறன் அவர்களுக்கு "தனித்தமிழ்க் காவலர்' என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழநிவேல் தியாகராசன் அவர்கள் வழங்கினார். சுந்தர.மோகன் காந்தி அவர்களுக்கு திருமுறை இசைக் காவலர் என்னும் விருதும் தா.இரா. தினகரன் அவர்களுக்கு குறள்நெறி நூற்பாலை வித்தகர் என்னும் விருதும் வழங்கப்பட்டன.
விருதினை ஏற்று பழ.நெடுமாறன் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
'21-05-1941இல் திருவள்ளுவர் கழகத்தை மதுரையில் தமிழவேள் பி.டி.இராசன் அவர்களும் எனது தந்தையார் அறநெறி அண்ணல் கி.பழநியப்பனார் அவர்களும் தோற்றுவித்தார்கள். திருக்குறள் அட்டாவதானி தி.ப.சுப்பிரமணியதாசு அவர்கள் கழக ஆசிரியராகத் தொண்டாற்றினார். நானும் எனது தம்பி ஆறுமுகமும் சிறுவர்களாக இருந்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கழகத்திற்குச் சென்று தாசு அய்யா அவர்களிடம் திருக்குறள் கற்று வருமாறு எங்கள் தந்தை அனுப்பிவைத்தார். எனக்குத் தாய்வீடு போன்ற இக்கழகத்தில் எனக்கு விருது அளிப்பது பெரும் மகிழ்ச்சியை ஊட்டுகிறது.
எனக்கு ஆசிரியர்களாக விளங்கிய கார்மேக கோனார், அவ்வை துரைசாமிப்பிள்ளை, சுப. அண்ணாமலை, நா. பாலுசாமி, அ.கி. பரந்தாமனார் போன்ற பலருக்கு விருது வழங்கி பெருமைப்படுத்திய திருவள்ளுவர் கழகம் அவர்களின் மாணவர்களாக இருந்த எனக்கும் விருது வழங்கியுள்ளது. இப்பெருமை முழுவதும் எனது ஆசிரியர்களையும் இக்கழகத்தின் நிறுவனராக விளங்கிய எனது தந்தை அவர்களையுமே சாரும்.
உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பைபிள், குரான், திருக்குறள் ஆகியவையே அவையாகும். இவற்றில் முதலிரண்டும் சமயம் சார்ந்த நூல்கள். திருக்குறள் ஒன்றுதான் இலக்கிய நூலாகும். உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியநூல் திருக்குறள் என்ற பெயர் அதற்குரியது.
கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியர் வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தமிழ் அழியாமல் தடுத்து நிறுத்தினார்.
வடவர் பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தமிழர் பண்பாடு அழியாமல் பாதுகாத்த பெருமை திருவள்ளுவரையே சாரும்.
தம்முடன் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்நாட்டை ஒட்டி வாழ்ந்த வேறு சில மொழி நிலப்பகுதியையும், செவிவழி கேள்வியுற்ற பிறநாடுகளையும் தமது நாட்டில் வாழ்ந்த அயல்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களையும் உள்ளத்தில் கொண்டு திருக்குறளை திருவள்ளுவர் உருவாக்கியிருக்க வேண்டும். திருக்குறளில் சமயம், இனம், மொழி பற்றிய குறிப்புகள் இல்லை.
தான் வாழ்ந்த நாட்டின் ஆறுகள், மலைகள், ஊர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோரை அடையாளம் காட்டும் பகுதிகளை மறைமுகமாகக்கூட திருவள்ளுவர் தமது நூலில் சுட்டிக்காட்டவில்லை.
வாய்ப்பும், தேவையும் நேரும் இடங்களில் உலகு, உலகம் என்றே கூறுகிறார். 20க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு குறித்துள்ளார். ஆக திருவள்ளுவர் உலகக் கண்ணோட்டத்துடன்தான் குறளை இயற்றினார். எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எம்மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் உரிய அற நூலாகத் திருக்குறளை அவர் படைத்தார். அதனால்தான் திருக்குறள் உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு கேடுகளை சுட்டிக்காட்டி அவற்றை அகற்ற வலியுறுத்துகிறார். இந்தக் கேடுகள் தமிழ்ச் சமுதாயத்தில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும், சமுதாயங்களிலும் நிலவின.
இரவச்சம், கயமை, கள்ளுண்ணாமை, கொல்லாமை, சிற்றினம் சேராமை, சூது, புலால் மறுத்தல், ஆள்வினையுடைமை, பெண்வழிச் சேரல், வரைவின்மகளிர், பிறனில் விழையாமை ஆகிய சமூகக் கேடுகளுக்கெதிராக புரட்சித் தீயை மூட்டியவர் வள்ளுவர்.
குறிப்பாக பிறனில் விழையாமை என்னும் அதிகாரம் பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது என அறிஞர் க.ப. அறவாணன் கருதுகிறார். இக்கருத்து தமிழிலக்கியங்களில் பேசப்படவேயில்லை. இதை வள்ளுவர் முன்னெடுத்துப் பேசுவதற்கு தனிக்காரணம் இருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இக்கருத்தை வள்ளுவர் முதன் முதலாக கூறியுள்ளது சிந்திக்கத் தக்கதாகும். இது குறித்து அறிஞர்கள் மேலும் ஆராய வேண்டும். ஆரியர்களின் வேள்விகளை வள்ளுவர் கடுமையாகச் சாடினார்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று
- என்று கூறினார்.
ஆரிய தர்ம சாத்திரங்களின்படி உழவுத் தொழில் மிகத் தாழ்வான தொழிலாகும். சூத்திரர் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும். உயர் சாதியினர் ஈடுபடக்கூடாது. ஆனால், வள்ளுவர் உழவுத் தொழிலை அனைத்துத் தொழிலுக்கும் மேலான தொழிலாகக் கூறினார்.
உழுதுண்டு வாழ்பவருக்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்
- என்றும் கூறினார்.
பார்ப்பனரல்லாதாருக்கு பொருள் உரிமையை ஆரிய தர்ம சாத்திரங்கள் மறுத்தன. ஆனால், வள்ளுவரோ அனைவருக்கும் பொருள் உரிமை உண்டு என்பதை வற்புறுத்துகிறார்.
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - என்று கூறுகிறார்.
பிறப்பால் குலமுறை பேணி மணமும் அறமும் உணவும் விதிப்பது ஆரிய தர்ம சாத்திரம். ஆனால் வள்ளுவரோ
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடி பிறந்தார் - என்கிறார்.
தொழில்களை மாந்தருக்கு வருணமுறையால் வகுப்பது தர்ம சாத்திரம். ஆனால் வள்ளுவரோ
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை - என்கிறார்.
ஆரிய சாத்திரங்களின் தாக்கம் தமிழரிடையே படியாதவாறு தடுக்கவே திருக்குறள் இயற்றப்பட்டது. தமிழர் பண்பாட்டை திருவள்ளுவர் காத்து நிலை நிறுத்தினார். வள்ளுவர் வழியை தமிழர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.''
புலவர் ஆ. ஆறுமுகம் நன்றியுரை ஆற்றினார். புலவர் சுப. இராமச்சந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். |