காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

சல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து சென்னை முதல் குமரி முனை வரை நடத்திய போராட்டம் இதுவரை தமிழகம் காணாத போராட்டம் ஆகும்.

மிகுந்தக் கட்டுப்பாட்டுடனும் அமைதியாகவும் எத்தகைய வன்முறைக்கும் இடமளிக்காமலும் மாணவர்கள் நடத்திய போராட்டம் ஒருவார காலம் வரை அனைவருமே பாராட்டும் வகையில் நடைபெற்றது.

 

ஆனால், 23-1-2017 திங்கட்கிழமை அன்று மாலையில் சல்லிக்கட்டு விளையாட்டிற்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கும் சட்டத்தை இயற்றுவதற்காக சட்டமன்றம் கூடியுள்ளது. மாணவர்கள் விரும்பியபடி நிரந்தரச் சட்டம் நிறைவேற்றப்படும் நேரம் வரை பொறுத்திராமல், அன்று அதிகாலையிலேயே கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களை வெளியேற்ற காவல் துறை முற்பட்டது ஏன்?

சட்டம் நிறைவேற்றப்பட்ட செய்தி மாணவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அவர்களாகவே போராட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டிருப்பார்கள். அதற்கு இடமளிக்காமல் காவல்துறை கையாண்ட அடக்குமுறைகளின் விளைவாக வன்முறை வெடித்துவிட்டது. இதற்கான முழு பொறுப்பையும் காவல்துறையே ஏற்க வேண்டும். கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் கடலுக்குள்ளேயே இறங்க வேண்டிய நெருக்கடியை காவல்துறை ஏற்படுத்திவிட்டது. அதன் காரணமாக பல மாணவர்கள் கடலில் மூழ்கி இறக்கக்கூடிய அபாயம் உருவானது. ஆனாலும் மாணவர்கள் உறுதி குலையாமல் உயிரை இழப்பதற்கும் தயாராகி கடலுக்குள் நின்றவாறே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

கரையோரம் இருந்த குப்பங்களில் நுழைந்து ஓடிய மாணவர்களை விரட்டிய காவலர்கள் குப்பத்தில் இருந்த அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாரையும் விட்டு வைக்காமல் மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். இதன் விளைவாக சென்னை நகரமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து முற்றுகைப்போராட்டங்களை நடத்தினார்கள். போக்குவரத்து முழுமையாக நின்று போனது.

பல்வேறு மாவட்டங்களிலும் போர்க்களங்களில் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு எதிராகவும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. ஆக தமிழகம் முழுவதும் கலவர சூழ்நிலையை காவல்துறைதான் உருவாக்கிற்று என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனால் வேண்டாத எதிர் விளைவுகளும் ஏற்பட்டன.

காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களும் நானும் வெளியிட்ட அறிக்கை எந்த இதழிலும் வெளிவராதபடி தடுக்கப்பட்டது.

அன்று மாலையில் நானும் அவரும் தோழர் மகேந்திரன், முத்தமிழ்மணி ஆகியோருடன் இராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று படுகாயமடைந்தவர்களைப் பார்த்தோம். மிகக்கொடூரமான தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டு, கை, கால்கள் முறிந்து கிடப்பதை பார்த்து கண் கலங்கினோம். அவர்களுக்கு ஆறுதல் கூறினோம். அப்பாவி ஏழை, எளிய தொழிலாளிகளும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

எத்தகைய வன்முறையிலும் இறங்காமல், அறவழியில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் மீது திடீரென கொடூரமான தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது? மத்திய அரசின் நெருக்குதலா? அல்லது வழக்கம்போல காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமா? இந்தக் கேள்விகளுக்குரிய விடையை தமிழக அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களாலும் இந்த அடக்குமுறை கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மாணவர்களும் பொது மக்களும் தங்கள் வசம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். தாக்கப்பட்டவர்களும் மனித உரிமை ஆணையத்திடம் தங்களின் மனுக்களை அளிக்கலாம். எதிர்காலத்தில் இதைப் போன்ற கொடுமை நடைபெறாமல் தடுக்க இவை உதவும்.

படுகாயமைடைந்த தோழர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவும் அரசு முன்வரவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.