குமுறிக்கொண்டிருந்த எரிமலை பொங்கி வெடித்துவிட்டது. சென்னை முதல் குமரி வரை சிற்றூர்களிலிருந்து நகரங்கள் வரை மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். போராடும் தங்களின் புதல்வர்கள், புதல்விகள் ஆகியோருக்கு ஆதரவாக மக்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
சென்னை கடற்கரையில் மாணவமணிகள் அணிதிரண்டு கடும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் கூடியிருந்து கட்டுப்பாடாக போராடும் காட்சி கண்டோர் உள்ளங்களை நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, மாணவிகள் எதையும் பொருட்படுத்தாமல் கடற்கரையையே பாசறையாக மாற்றியிருக்கிறார்கள்.
சென்னையில் மட்டுமல்ல, அனைத்து ஊர்களிலும் இரவு பகலாக மாணவர்களும், இளைஞர்களும் கைகோர்த்து கட்டுப்பாடாகவும், எத்தகைய வன்முறைக்கும் இடம் கொடுக்காமலும், பசி, தூக்கம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு கர்மமே கண்ணாகப் போராடுகிறார்கள்.
எதற்காக இந்தப் போராட்டம்? ஏன் இந்த கொதிப்புணர்வு? தலைமை தாங்குவோர் யார்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் உளவுத்துறை திகைக்கிறது, திணறுகிறது.
மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்பதை உணர வேண்டியவர்கள் இன்னமும் உணரவில்லை. திடீரென்று இந்தப் போராட்டம் வெடிக்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டு காலமாக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும், இந்த வஞ்சனை மாறாமல் தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஈழப் பிரச்சினை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் ஆகியவற்றில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியிலும் அதே துரோக வரலாறு தொடர்கிறது. இவற்றைக்கண்ட மாணவர்கள், இளைஞர்களின் கொதிப்பு பொங்கி வெடித்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கெதிராக இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து 2 இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காங்கிரஸ் ஆட்சி துணை நின்றது. இப்போதும் சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி பயிற்சி கொடுக்கிறது. எதிர்காலத்திலும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உதவுகிறது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவோ அல்லது தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவோ அன்று இருந்த காங்கிரசு அரசும், இன்று இருக்கும் பா.ஜ.க. அரசும் முன்வரவில்லை. இதன் விளைவாக காவிரி சமவெளிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மதிக்க மறுக்கிறது. பவானி, சிறுவாணி ஆகிய ஆறுகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க முற்படுகிறது. மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது.
தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க காங்கிரஸ் அரசு முயன்று தோற்றது. இதை உணராமல் இப்போது பா.ஜ.க. அரசு சமற்கிருதத்தைத் திணிக்க முற்படுகிறது. இவைகளுக்கெதிராகப் பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் போராடிய போதிலும் அப்போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டன. அதைப்போல இப்போதும் சல்லிக்கட்டுக் கெதிராகப் பொங்கியெழுந்திருக்கும் போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.
சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்பது தமிழகத்தில் பழங்காலம் தொட்டே இருந்து வரும் வீர விளையாட்டாகும். சங்க இலக்கியங்கள் இவ்விளையாட்டை கொல் ஏறு தழுவல் என போற்றுகின்றன. முல்லை நிலத்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடிய இவ்விளையாட்டுத் தமிழகம் முழுவதிலும் பரவி இன்று வரை நிலைத்து நிற்கிறது. மேகங்கள் தவழும் கார்கால மாலைப் பொழுதில் பழந்தமிழர்களால் கொண்டாடப் பெற்ற விழாவே ஏறு தழுவல் விழாவாகும்.
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளையொட்டி மாட்டுப் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது தமிழ் உழவர்களின் பாரம்பரிய பழக்கமாகும். அந்நாளில் மாடுகளுக்குப் பொங்கலிட்டு வணங்கி அதைப் போற்றுவது தமிழர் பண்பாட்டில் ஊறியதாகும். இதையொட்டியே சல்லிக்கட்டும் நடத்தப்படுகிறது. மாட்டை வணங்கும் மக்கள் அதற்குத் துன்பம் இழைக்க ஒருபோதும் துணியமாட்டார்கள். காளையைத் தழுவி அதைக் கட்டுக்குள் கொண்டுவர இளைஞர்கள் செய்யும் முயற்சியே ஏறுதழுவுதல் ஆகும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அந்த அரசில் அங்கம் வகித்த தி.மு.க. போன்ற கட்சிகள் கூட இதை எதிர்க்கவில்லை. இதன் விளைவாக பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு சல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை வாங்கிவிட்டது. இதற்குப் பின்னணியில் பெரும் சதி வலை விரிக்கப்பட்டுள்ளது.
1980-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட பீட்டா அமைப்பு விலங்குகள் நல அமைப்பு என தன்னைக் கூறிக்கொண்டாலும் வாணிபத்தை நோக்கமாகக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்புக்குப் பின்னணியில் பணம் கொழிக்கும் வணிக நோக்கம் உள்ளது. நமது நாட்டு மாடுகளை அடியோடு அழிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். ஏனெனில், நமது நாட்டு மாடுகள் இயற்கையாக விளைந்த செடி, கொடி, புல் ஆகியவற்றை மேய்ந்து, காளைகளுடன் இணை சேர்ந்து கன்றுகளை ஈன்றெடுக்கின்றன. இந்தக் காளைகளின் வீரியம் குறைந்து விடாமல் இருக்கத்தான் சல்லிக்கட்டுப் போன்ற வீர விளையாட்டுகளை நடத்தி வருகிறார்கள். இத்தகைய காளைகள் இருக்கும் வரை நாட்டு மாடுகள் இனத்தை அழிக்க முடியாது. இவற்றை அழித்து, செயற்கை கருத்தரித்தல் மூலம் ஜெர்சி போன்ற சீமை மாட்டினத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. அதிக விலைக்கு விற்கப்படும் வெளிநாட்டுக் காளைகளின் விந்தை வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்படும்.
ஏற்கெனவே விவசாயத் துறையில் இயற்கை உரங்களை ஒழித்து அன்னிய உரங்களை வாங்கும் நிலையை ஏற்படுத்தி நமது நிலத்தையும் நஞ்சாக்கி, விளையும் பயிர்களையும் நஞ்சாக்கி நமது உணவையும் நஞ்சாக்கிவிட்டனர். அதைப்போல இப்போது நாட்டு மாடுகளையும் அடியோடு அழிக்க செய்யப்படும் முயற்சியின் முதல் கட்டம்தான் சல்லிக்கட்டுத் தடையாகும்.
நமது நாட்டு மாடுகள் 32 வகை இனம் இருந்தன. இப்போது 6 வகை இனம் மட்டுமே மிஞ்சியுள்ளன. அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. மாட்டினத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. தமிழர் பண்பாடு, பழக்க வழக்கங்கள், பாரம்பரிய விழாக்கள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதே இத்தடையின் நோக்கமாகும். இவற்றிற்கெதிராக நமது பண்பாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டுக்குத் தடை விதித்து 32 மாதங்களாகி விட்டன. ஆனால், இத்தடையை நீக்குவதற்கான மனுவை விசாரிப்பதை உச்சநீதிமன்றம் தள்ளிப் போடுவதைத் தடுக்கவோ அல்லது தடையை நீக்க அவசரச் சட்டம் கொண்டு வரவோ மத்திய அரசு தயாராக இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது தடைப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டதை நீக்கும் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் போதும். ஆனால், அதைச் செய்வதற்கு பா.ஜ.க. அரசு முன்வர மறுக்கிறது.
பழம் மரபு, பழம் பண்பாடு, பழைய பழக்கம், பழம் சிந்தனை ஆகியவைப் புரட்சிகர சிந்தனைக்கு எதிரானவை, அவற்றை அழிக்கவேண்டும் என்பதற்காக 1966ஆம் ஆண்டு சீனாவில் கலாச்சாரப் புரட்சி தொடங்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். 1976ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி தியானன் மென் சதுக்கத்தில் 20 இலட்சம் மக்கள் கூடி எதிர்ப்புக்குரல் எழுப்பினர். இராணுவ ஒடுக்குமுறை ஏவிவிடப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். ஆனால், 1981ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்டுக் கட்சி தனது தவறை உணர்ந்தது. கலாச்சாரப் புரட்சியால் மக்களுக்கும், நாட்டுக்கும், கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது என பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. கலாச்சாரப் புரட்சி நடத்தி சீனா கற்ற பாடம் புதிய பண்பாட்டுப் புரட்சி நடத்த முற்படுபவர்களுக்குப் புரியவேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டைக் காப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் போராடும் நமது இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் நடத்திய போராட்டம் நாடெங்கும் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் சிறிதளவுகூட வன்முறைக்கு இடமின்றியும் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி! |