காமராசர் முதலமைச்சரான பிறகு ஒருமுறை அன்னை சிவகாமி அவரைக் காண சென்னைக்கு வந்தார்கள் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கினார்கள். அங்கேதான் சாப்பிட்டார்கள். அவர்களுடைய காரிலேயே அந்தக் குடும்பத்தாருடன் ஏறிக்கொண்டு காமராசரைக் காண வந்தார்கள். ஆனால், காமராசர் வழக்கம் போல் வீட்டில் இல்லை.
அன்னை அவர்கள் மகனைக் காண ஆவலோடு எப்பொழுது வந்தாலும் அவர் வீட்டில் இருப்பது அபூர்வம்தான். வழக்கம்போல் அன்றும் அவர் வீட்டில் இல்லை சமையற்காரர் வைரவன் வந்த விருந்தாளிகளுக்கு காப்பிகூட கொடுக்கவில்லை. தன் மகனைக் காண தன்னுடனே வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன்னுடைய மகன் வீட்டிலேயே அதுவும் முதலமைச்சராக இருக்கும் போதே எவ்விதமான உபசாரமும் இல்லாததைக் கண்டு அன்னை சிவகாமியின் கண்களில் கண்ணீர் மல்கிற்று!
இந்த சேதியை அன்னை அவர்கள் என்னிடம் கூறியபோது நானே மிகவும் ஆத்திரமடைந்தேன்.நான் சென்னைக்கு சென்ற போது சமையற்காரர் வைரவனை கடுமையாகக் கோபித்துக் கொண்டேன். ஆனால் வைரவன் சொன்ன பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. வைரவனிடம் தலைவர் காமராசர் பத்து ரூபாய்தான் கொடுத்து வைத்திருப்பாராம். அது பூராவும் செலவழித்த பிறகுதான் மீண்டும் பத்து ரூபாய் கொடுப்பாராம்! அன்னை தலைவரைக் காணச் சென்ற போது வைரவனிடம் போதுமான காசு இல்லையாம்!
நான் தலைவர் காமராசரைச் சந்தித்து அன்னையின் மனத்துயரத்தைப் பற்றி அவரிடம் சிறிது கடுமையாகவே பேசினேன். ஆனால், அவரோ என்னைவிட மிகவும் கடுமையாக பதிலளித்தார்.
"அவர்கள் ஏன் இங்கே வருகிறார்கள்? நான் என்ன இங்கே குடும்பமா நடத்திக்கொண்டு இருக்கிறேன் இங்கே வருபவர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிப்பதற்கு?'' என்று காமராசர் அவர்கள் கடுமையாகப் பேசினார்.
"உங்கள் இருதயம் கல்லாக இருக்கிறது. ஆனால் அன்னையோ அளவு கடந்த பாசத்தினால் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையா?' என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நான் அவரைக் கேட்டேன்!
அவர் புன்முறுவலையே பதிலாகத் தந்தார்.
"நீங்கள் ஏன் இன்னும் கொஞ்சம் அதிகமாக அம்மாவுக்கு பணம் அனுப்பக் கூடாது' என்று நான் கேட்டேன்.
"நான் ஆரம்பத்தில் நூறு ரூபாய் கொடுத்தேன். இப்பொழுது 120 ரூபாய் கொடுக்கிறேன்'' இதற்குமேல் என்னால் தர முடியாது. நான் என்ன பிசினஸ் மேனா? வேலைவெட்டி பார்த்து சம்பாதிக்கிறேனா? எனக்கு வேறு கடமைகளே இல்லையா? ரொம்ப கஷ்டமாக இருந்தால் வீட்டை விற்றுச் செலவழிக்கும்படி அம்மாவிடம் சொல்லுங்கள்'' என்று காமராசர் என்னிடம் கூறிவிட்டார்.
"பெற்ற தாயைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, பிறந்த தாய் நாட்டைப் பற்றியே எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அதிசய மனிதரை, தன்னலமற்ற தலைவரை, அரசியல் துறவியைப் பார்த்து ஒருபுறம் பூரிப்பும் பெருமையும் அடைந்தேன். மறுபுறத்தில் எல்லையற்ற வேதனையும் அடைந்தேன்.'
(தியாகி பழனிக்குமாருபிள்ளை கூறியது. – செய்தி – 15-9-75) |