அன்னை சிவகாமி அம்மையார் மரணப் படுக்கையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துத் தலைவர் காமராசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து காரில் விருதுநகர் பயணமானார். பெற்றதாய் நமனின் பிடியிலே சிக்கித் தவிக்கிற அந்த நிலையிலும் அவரிடம் எவ்வித சலனமும் காணப்படவில்லை. உடன் பயணம் செய்த என்னிடம் அரசியல் பிரச்னைகள் குறித்துப் பேசிக்கொண்டே வருகிறார். எவ்விதப் பரபரப்போ பதட்டமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே வந்தது கண்டு அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தேன்.
விருதுநகரில் தலைவர் வீட்டருகே பெருங்கூட்டம். எப்போதும் ஆரவாரமாகத் தலைவரை வரவேற்பார்கள். ஆனால் அன்று அமைதியாக வழிவிட்டனர். எங்கும் அமைதி நிலவிற்று. அன்னை சிவகாமி அம்மையாரின் உடல் நிலை அனைவரையும் அமைதி காக்கச் செய்தது.
வீட்டினுள் நுழைந்து தன் தாயார் அருகே தலைவர் அமருகிறார். மயங்கிய நிலையில் அன்னை இருக்கிறார். அருகே தலைவரின் சகோதரி அம்மா அண்ணன் வந்திருக்கிறார் எனக்கூவுகிறார்.
திடுக்கிட்டு விழித்த அந்தத் தாயின் விழிகளில் ஒளி பரவுகிறது. தனது அருமருந்தன்ன புதல்வனைப் பாசமுடன் பார்க்கிறது. மறுகணம் அணை உடைந்த வெள்ளமென விழிகளில் நீர் பெருகியோடுகிறது.
"தன் தவப் புதல்வனைப் பார்ப்பது இதுவே இறுதிமுறை' என்பது அந்த அன்பு அன்னைக்குத் தெரிகிறது.
"தாயைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை' என்பது அந்தத் தனயனுக்கும் புரிகிறது.
நெஞ்சை உருகச் செய்யும் இந்தக் காட்சியினைப் பார்த்தவுடன் சுற்றிலும் நின்றவர்களின் கண்கள் குளமாயின.
ஆனால் தலைவரோ எவ்விதச்சலனமும் இன்றி அமர்ந்திருந்தார். அருகே நின்ற சகோதரியிடமும் மற்றவர்களிடமும் மருந்து,உணவு ஆகியவை பற்றி இரண்டொரு வார்த்தை விசாரிக்கிறார்.
ஆனால் அன்னையின் உள்ளம் அதிலே செல்லவில்லை. ஏதோ சொல்ல அவரது உதடுகள் துடிக்கின்றன. தலைவர் அதைக் கவனிக்கவில்லை.
அவசர அவசரமாகப் புறப்பட முயலுகிறார். வந்து ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை.
"அப்போ நான் வரட்டுமா? உடம்பைப் பார்த்துக்கொள்' எனக்கூறி விட்டு எழுகிறார்.
"தம்பி, ஒருவாய் சாப்பிட்டு விட்டுப்போ'' தாயின் வாயிலிருந்து குழறிக்குழறி வார்த்தைகள் வெளிவருகின்றன.
"வேண்டாம், நான் மதுரையில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்' எனக்கூறிவிட்டு எழுந்து விடுகிறார் தலைவர்.
அன்புத் தாயின் விழிகள் மறுபடியும் குளமாகின்றன. அதைக் கவனித்த தலைவர் என்ன நினைத்தாரோ? "சரி எடுத்துவை' என்கிறார்
மறுபடியும் அன்னை குழறிக்குழறிப் பேசுகிறார். "அடுக்களையில் உட்கார்ந்து சாப்பிடப்பா' என்கிறார்.
தனது அன்புக் கட்டளையை மகன் ஏற்பாரோ ஏற்கமாட்டாரோ என்னும் ஏக்கம் ததும்ப மகனைப் பார்க்கிறார் தாய்.
மரணப் படுக்கையில் இருக்கும் தாயின் இறுதி ஆசை இது. இனி அவர் தன்னிடம் எதையும் கேட்க மாட்டார். கேட்க முடியாத தூரத்திற்குப் பிரிந்து விடுவார் என்பதைத் தலைவர் உணர்ந்தாரோ என்னவோ? தயக்கத்துடன் அந்த வேண்டுகோளை ஏற்று அடுக்களையில் நுழைகிறார்.
சகோதரியும், சகோதரியின் புதல்விகளும் பரபரப்புடன் பரிமாறினார்கள். பெயருக்கு எதையோ அள்ளிப்போட்டுக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்தார் தலைவர். ஒருகணம் கூடத் தாமதிக்கவில்லை.
அப்போ நான் வரட்டுமா எனக் கரங்கூப்பினார். கடைசிமுறையாக மகனைப் பார்க்கிறோம் என்பதையும் மறந்து மகன் தன் வீட்டில் சாப்பிட்ட மகிழ்ச்சி முகத்தில் பரவ மகராசனாய்ப் போய்வா என வாழ்த்துகிறார் அன்னை.
கார் விருதுநகர் எல்லையைத் தாண்டுகிறது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் தலைவர்.
தயங்கித் தயங்கி அவரிடம் ஒன்று கேட்டேன். "வீட்டில் நீங்கள் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?' என்றேன்.
திடும் எனப் பிறந்த எனது இந்தக் கேள்வி தலைவரைப் புன்னகைக்க வைத்தது. "என்ன? ஒரு 25 அல்லது 30 வருடம் ஆகியிருக்கும்' என்றார்.
காரில் இருந்த அனைவரும் அளவு கடந்த திகைப்பில் மூழ்கினோம். அப்படியிருந்துமா சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டினார்?
மரணப் படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசை. அதுவும் மிகச் சாதாரண ஆசை. அதை நிறைவேற்றக்கூட யோசித்தாரே?
பாசமறுத்தல் என்று சொல்கிறார்களே அதை அன்றைக்குத்தான் பார்த்தேன். முற்றும் துறந்த முனிவருக்குக்கூட இந்த மனப்பக்குவம் வருமோ என்னவோ?
தோளில் துண்டை உதறிப்போட்டுக் கொண்டு என்றைக்குத் தேசத் தொண்டிற்குப் புறப்பட்டாரோ அன்றைக்கே வீட்டை மறந்தார்.பெற்ற அன்னையைத் துறந்தார். தமிழ்நாடு காங்கிரசுக் குழுவின் தலைவராகி அவர் சென்னை வாசியாக மாறினார். முதலமைச்சரானார்; அகில இந்திய காங்கிரசுக் குழுத் தலைவரானார். ஆனாலும் தன்னைத்தவிர வேறு திக்கற்ற தன் தாயைத் தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நினைப்பு அவருக்கு ஒருபோதும் எழுந்ததில்லை.
தள்ளாத பருவத்துடன் தடுமாறும் அன்னையை அருகே வைத்துப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் அறவே எழாதது வியப்பிலும் வியப்பாகும். ஒரே மகன். அதுவும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் மகன். நாடு போற்றும் மகன். அப்படிப்பட்ட மகன் அருகில் இருந்து வாழவேண்டும் என்றுதானே அந்தத் தாய் விரும்பியிருப்பார்? மணக்கோலத்துடன் மகனைப் பார்க்க வழியில்லை. பேரன் பேத்திகளை எடுத்துக் கொஞ்ச வகையில்லை. மகன் அருகே இருந்து அவனுக்கு விருப்பமானதைச் செய்துகொடுக்க மருமகளும் இல்லை. தான் அருகே இருந்தாவது மகனுக்கு வேண்டியதைச் செய்யலாமே என அந்தத் தாயின் உள்ளம் துடித்திருக்காதா? உறுதியாகத் துடித்திருக்கும். ஆனாலும் மகனின் துறவிக் கோலத்தை எண்ணி எண்ணி மனங்கசிந்து விருதுநகரில் குறுகிய சந்தில் உள்ள சின்னஞ்சிறு வீட்டில் தன் வாழ் நாளைக் கழித்த அந்த அன்னையின் தியாகத்திற்கு ஈடு இணை ஏது? அந்தத் தியாகம் பெரிதா? அல்லது பெற்ற தாயைப் பிரிந்து தேசத்தாயின் தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தனயனின் தியாகம் பெரிதா? அன்புக் கணவரை இழந்த நிலையில் அந்தத் தாய்க்குத் தன் ஒரே மகன் தானே சகலமும். அந்த ஒரே மகனையும் நாட்டிற்காகத் தியாகம் செய்யவேண்டிய நிலை வந்தபோது அதையும் செய்து விட்டு மகனை நினைத்து நினைத்து உருகி உருகி மறைந்து போன அந்த அன்னையின் அன்புக்கு ஈடு உண்டோ?
காந்தியடிகளுக்குக்கூட அன்னை கஸ்தூரிபாவின் துணை இருந்தது. நேருவிற்கு அன்பு மனைவி கமலாவின் துணையும் அவருக்குப்பின் மகள் இந்திராவின் துணையுமிருந்தது.
இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற, அமைதிப் படுத்த காந்தியடிகளுக்கும் நேருவிற்கும் அன்பு உயிர்கள் அருகே இருந்தன.
ஆனால் தலைவர் காமராசர் அவர்களுக்கு அப்படி யாரும் அருகே இல்லை. இருந்த அன்னையும் முந்நூறு மைல்களுக்கு அப்பால் மைந்தனை நினைத்து வாடியபடியே இருந்தார்.
காந்தியடிகளின் சீடரான காமராசர் இந்த விஷயத்தில் குருவையும் மிஞ்சியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சனக மகாராசனை இராசரிஷி என்று கூறுவார்கள். மன்னனாக இருந்தாலும் முனிவனாக வாழ்ந்தவன் அவன். வேதாந்தத்தில் கரைகண்ட சனகன் கூடத்தான் பெறாத புதல்வியான சீதை விஷயத்தில் பாசத்தால் துடித்தானாம்.
ஆனால் பாசத்தளையால் பிணைக்கப்படாத ஒரே மனிதராகத் தலைவர் காமராசர் அவர்கள் விளங்கினார்.
தாயின்பாசமோ, தமக்கையின் அன்போ உற்றார் உறவினரின் நேசமோ அவரை என்றும் கட்டுப்படுத்தியதேயில்லை.
பாசமறுத்த பெருமைக்குரிய பெருந்தலைவர் அவரே. பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிப் பேணி வளர்த்துத் தாயகத் தொண்டிற்கு அளித்த பெருமை மட்டுமே சிவகாமித் தாய்க்கு உண்டு. தேச சேவையில் ஈடுபட்டகணம் முதல் தேசத்தாயின் புதல்வனாக மாறிய தலைவர் காமராசர் இறுதி வரை அப்படியே வாழ்ந்தார்.
ஒருதாய் வயிற்றில் பிறந்து மற்றொரு தாயின் தொண்டிற்குத் தன்னை ஒப்படைத்த விந்தை மனிதர் தலைவர் காமராசர்.
(பழ.நெடுமாறன் எழுதி விரைவில் வெளிவர விருக்கும் "பெருந்தலைவரின் நிழலில்' என்னும் நூலில் இருந்து...) |