"ஒரு மூத்த அதிகாரி அறைக்குள் நுழைந்தார். மீன் சந்தையில் மீன்களை தேர்ந்தெடுப்பதைபோல தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்குமாறு அவர் அழைக்கப்பட்டார். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு என்னை தேர்ந்தெடுத்தார். என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்று என்னை வன்புணர்ந்தார்.
வன்புணர்வு முகாம்களில் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை இராணுவம் வைத்திருப்பதைக் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் அய்க்கிய நாடுகள் அவையிடம் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 20--02--2017 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project (ITJP)) என்ற அமைப்பு மூன்று பெண்களின் வாக்குமூலங்களை அளித்துள்ளது. இந்தப் பெண்கள் தாங்கள் மேலும் பல பெண்களுடன் நீண்ட காலம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
"ஒரு குழுவாக ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த இராணுத்தினரும் தேர்ந்தெடுத்து அருகில் உள்ள அறைக்கோ அல்லது கூடாரத்திற்கே அழைத்துச்சென்று வன்புணர்வு செய்யுமாறு இருந்ததாக இரண்டு பெண்கள் விவரிக்கின்றனர்'' என்று (ITJP) அமைப்பு கூறுகிறது.
"மூன்றாவது பெண், முழுமையான இருளடைந்த ஒரு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றாலும் அடுத்த அறையில் பிறபெண்கள் அலறுவதை அவரால் கேட்க முடிந்தது''
தலைநகரில் முகாம்
அவர்கள் நான்கு தனித்தனியான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா அருகில் ஒன்று, புத்தளம் அருகில் ஒன்று, கொழும்பிலேயே ஒன்று மற்றும் கொழும்பிற்கு வெளியே ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ அல்லாத இடத்தில் ஒன்று.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய். நா. குழுவிடம் (CEDAW) ITJP அமைப்புதான் கண்டறிந்தவைகளை சமர்ப்பித்துள்ளது. இந்த அய். நா. குழு இலங்கையின் அதிகாரப்பூர்வ குழுவினரை இந்த வாரம் சந்திக்கிறார்கள்.
இராணுவம் மற்றும் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பிற வன்கொடுமைகளையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
அரசின் பிடியில் சித்ரவதைகளையும் மிககொடூரமான பாலியல் வன்கொடுமைகளையும் விவரிக்கும் 55 பெண்களின் விரிவான வாக்குமூலங்களின் அடிப்படையில் தனது அறிக்கையை உருவாக்கியுள்ளதாக அமைப்பு (ITJP) கூறுகிறது.
குற்றவாளிகளின் விவரங்கள்
பாதிக்கப்பட்டவர்களில் 48 பேர் மகிந்த இராஜபக்ச தலைமையிலான முந்தைய அரசின்கீழ் தடுத்துவைக்கப்பட்டனர். 7 பேர் புதிய மைத்ரி பாலசிறீசேனா அரசின் ஆட்சியில் தடுத்து வைக்கப்பட்டனர்.
வன்புணர்வு மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டவர்கள் என ஒரு மேஜர் மற்றும் ஒரு லெப்டினன்ட் கர்னல் உட்பட 6 இராணுவத்தினரை (ITJP) அமைப்பு அடையாளம் காட்டி அவர்களின் விவரங்களை அளித்துள்ளது.
"ஜெனிவாவில் 22 பிப்ரவரி அன்று சந்திக்கும்போது பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய். நா.வின் குழு நாங்கள் திரட்டி தந்துள்ள இந்த விவரங்களை இலங்கை அரசிடம் அளித்து, இந்த ஆறு அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யவும் நம்பிக்கைக்குரிய ஒரு விசாரணையை நடத்தவும் கோர வேண்டும்'' என (ITJP) அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின்சூகா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் அரசு தொடர்ந்து எங்களிடம் கேட்டு வருகிறது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய்.நா.வின் குழுவிடம் அளித்துள்ளோம். உண்மையிலேயே அரசு நீதியின்பால் அக்கறை கொண்டுள்ளதா என்பதை பார்ப்போம். அவர்கள் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அறிக்கை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இந்த செயற்பாடுகளை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய்.நா.வின் குழு மேற்பார்வையிடலாம்.
"சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்புவிப்பது என்பது இலங்கையில் திட்டமிட்டதாகவும் ஊறிப்போனதாகவும் உள்ளது. ஏனெனில் இந்த தனிநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு அரசியல் உறுதி இல்லை' என தனது அறிக்கையில் அந்த அமைப்புக் கூறியுள்ளது.
18 நிகழ்வுகள் மட்டுமே – இலங்கை அரசு
திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைகளில் தனது ஆயுதப்படையினர் ஈடுபட்டுள்ளதான செய்தியை இலங்கை மறுக்கிறது.
2007 தொடங்கி போர் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்முறை நிகழ்வுகள் 18 மட்டுமே நடந்துள்ளதாக இலங்கை அரசு அய். நா. விடம் தெரிவித்துள்ளது.
"போர் நடைபெற்ற காலமான ஜனவரி 2007 தொடங்கி மே 2009 வரை வடக்கு மற்றும் கிழக்கில் 12 பாலியல் வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டதாக 7 பாதுகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு உள்ளது. போருக்குப் பின்னான காலத்தில் மே 2009 முதல் மே 2012 வரையில் வடக்கில் 6 பாலியல் வன்முறை நிகழ்வுகளில் பாதுகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு உள்ளது' என இலங்கை அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த நிகழ்வுகளில் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதா என்பதை குறித்தோ குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா என்பது குறித்தோ எவ்வித தெளிவும் அறிக்கையில் இல்லை.
எனினும் இலங்கையின் ஆயுதப் படையினரின் பாலியல் வன்முறைகள் மிக அண்மைக் காலமான 2016 வரை தொடர்வதை தாங்கள் பதிவு செய்துள்ளதாக (ITJP) அமைப்புக் கூறுகிறது.
(தமிழில் : பூங்குழலி) |