நம்பிக்கையூட்டும் மக்கள் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:45

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகைப்பட்ட நிலங்கள் தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்திருப்பதால் தமிழகம் நானிலம் என அழைக்கப்பட்டது.
பாலை என்பது தமிழ்நாட்டில் தனி நிலமாக அமையவில்லை. காடு சார்ந்த முல்லை நிலமும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும் வளம் குன்றி வறண்ட நிலையே பாலை என வழங்கப்பட்டது.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்''
- என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
வளமான தமிழகத்தைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராகத்தான் நெடுவாசல் மக்கள் போராடி வருகிறார்கள். நிலத்தடி நீரைக் கொண்டு நெல், வாழை, தென்னை, மிளகு போன்றவற்றைச் சாகுபடி செய்யும் உழவர்கள் நிறைந்த வளமான பகுதி நெடுவாசல் பகுதி. இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிடைப்பதாக 2008ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. காவிரி ஆற்றுப் படுகையில் நெடுவாசல், குத்தாலம், கீழ்வேலூர், நன்னிலம் ஆகிய நான்கு இடங்களில் இவை கிடைப்பதாக மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநர் ஜெனரல் அலுவலகம் அறிவித்தது.
ஹைட்ரஜன் அணுவுடன் சேரும் கார்பன் அணுவின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் பெயர்கள் மீத்தேன், ஈத்தேன், புரோபேன் என அழைக்கப்படுகின்றன. அனைத்துமே ஹைட்ரோ கார்பன்கள்தான்.
ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து மரபு வழிப்பட்ட ஹைட்ரோ- கார்பனான கச்சா எண்ணெயை மரபு வழி அல்லாத ஹைட்ரோ - கார்பன்களாக, ஷேல் எண்ணெய், மீத்தேன், ஈத்தேன், புரோபேன் ஆகியவை இந்தியாவில் கிடைக்கும் 44 நான்கு இடங்களைக் கண்டறிந்துள்ளன. இவற்றில் காவிரிப் படுகைப் பகுதியில் கிடைக்கும் ஹைட்ரோ-கார்பன்தான் முதல் தரமானது என கண்டறியப்பட்டுள்ளதால் இந்திய அரசின் கவனமும், பெரும் நிறுவனங்களின் பேராசையும் அங்கு திரும்பியுள்ளன.
காவிரிப் படுகைப் பகுதியில் காரைக்கால், நெடுவாசல் உள்பட 28 இடங்களையும் தமிழகத்தை ஒட்டியுள்ள கடலில் 16 இடங்களையும் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது என இந்திய அமைச்சரவையின் பொருளாதாரக் குழு 15-2-15இல் தலைமை அமைச்சரின் தலைமையில் கூடி முடிவு செய்தது.
இவற்றில் இருந்து 40 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெயையும், 22 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவையும் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
புதுச்சேரிக்கு அருகே உள்ள பாகூரில் தொடங்கி மன்னார்குடி வரை காவிரிப் படுகையில் நிலக்கரி படிமங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கும் பணியை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சுத் துறை ஒப்படைத்துள்ளது.
எரிவாயு 32 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை எடுக்கப்படும். நீரியல் விரிசல் என்ற தொழில் நுட்ப முறை இதற்குப் பயன்படுத்தப்படும். இது மிகவும் ஆபத்தானது. நிலத்தில் இரண்டாயிரம் அடி வரை துளையிட்டு குழாய் இறக்கி அங்கிருந்து பக்கவாட்டில் பூமிக்கு அடியிலிருந்தே இரண்டு கிலோ மீட்டர் வரையிலும் அனைத்து திசைகளிலும் குழாய்களை செலுத்தி பூமிக்கடியில் உள்ள நிலக்கரி பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கியிருக்கும் மீத்தேன் எரிவாயுவை நீரோடு உறிஞ்சி எடுத்து எரிவாயுவை பிரித்தெடுக்க வேண்டும். இம்முறையில் உள்ளே செலுத்தப்படும் வேதிக் கலவையில் 30% மட்டுமே மீண்டும் வெளியே எடுக்கப்படும். மீதி 70% நிலத்திற்குள்ளேயே தங்கிவிடும். நிலத்தில் உள்ள நீர்த்தொகுப்பு முழுவதையும் இது நச்சாக்கும். நிலக்கரி படிமத்திற்கு மேல் அழுத்திக் கொண்டிருந்து வெளியேற்றப்படும் நீர் கடல் நீரைவிட 5 மடங்கு உப்பானதாகும். இதை விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள பாசனக் கால்வாய்களைப் பயன்படுத்தி வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அக் கழிவு நீர் பாயும் நிலப்பகுதி எல்லாம் பொட்டல் காடாகிவிடும். இதன் விளைவாக விளை நிலங்கள் பாழாகும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் நச்சு நீரின் விளைவாக புற்றுநோய், மரபணு மாற்றக் கோளாறுகள், தோல் நோய், கண்பார்வை இழப்பு போன்ற கொடிய நோய்கள் உருவாகும்.
மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட இருக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மொத்தம் 23 வட்டங்களும், அவற்றில் வாழும் 53 இலட்சம் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். பல இலட்சம் கால்நடைகளும் பல்லாயிரம் கோடி தாவரங்களும் முற்றிலுமாக அழிந்துபோய்விடும். நீரையும் எரிவாயுவையும் வெளியேற்றுவதால் உருவாகும் வெற்றிடத்தில் கடல் நீர் உட்புகும். காரைக்காலில் கடல் 5 கிலோ மீட்டர் அருகில் இருப்பதால் கடல் நீர் உள்ளே புகுந்து விவசாய விளைநிலங்கள் பாழாகிவிடும். ஒவ்வொரு எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் இடத்தில் 5 முதல் 7 ஏக்கர் வளமான நிலம் பாழ்பட்டுப்போகும். இதன் விளைவாக நிலம் உள்வாங்கும் மேற்பரப்பில் கட்டப்பட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், வீடுகள், கோவில்கள் ஆகியவற்றுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இத்திட்டத்தில் தனியார் நிறுவனம் செய்யும் முதலீடு ரூ.3600 கோடி மட்டுமே. ஆனால், இந்த நிறுவனம் எடுக்க இருக்கும் எரிவாயுவின் குறைந்த பட்ச மதிப்பு ரூ.6 இலட்சம் கோடி ஆகும். காவிரிப் படுகையை பாலைவனமாக்கி அந்நிய நிறுவனம் கொள்ளை இலாபம் அடிக்க வழிகோலும் இந்த வஞ்சகத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் மூன்றாண்டு காலத்திற்கு மேலாகப் போராடி அதை தடுத்து நிறுத்தினர்.
இப்போது நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகத்தான் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை முதல் நெடுவாசல் வரை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமங்கள் 2019 ஆண்டுடன் காலாவதி ஆகிவிடும். எனவே இந்தப் பணிகள் இப்போது அவசரம் அவசரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஆற்றுப்படுகைகளில் ஹைட்ரோ-கார்பன் கிடைக்கும். காவிரி ஆறு குடகு மலையில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக பாய்ந்தோடி தமிழகத்தில் நுழைகிறது. தமிழகக் காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோ-கார்பன் புதைந்து கிடப்பதைப் போல கர்நாடகத்தில் காவிரிக் கரைகளிலும் ஹைட்ரோ-கார்பன் உள்ளது. ஆனால், அங்கு இதற்கான முயற்சி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் ஹைட்ரோ-கார்பன் படிவப் பாறைகள் கங்கைச் சமவெளியில் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால், அங்கு இந்த அகழ்வாய்வுகள் நடைபெறவில்லை. நடத்தும் திட்டமும் இந்திய அரசிடம் இல்லை. கங்கைப் படுகைப் பகுதியை பாதுகாக்கும் இந்திய அரசு காவிரிப் படுகைப் பகுதியை அடியோடு பாழ்படுத்த முற்படுகிறது.
தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு அரசிற்கு அளித்த அறிக்கையில் மீத்தேன் திட்டம் ஏன் கூடாது என்பதற்காக கூறியுள்ள காரணங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அப்படியே பொருந்தும். இத்திட்டத்தின் விளைவாக வளமான மருத நிலங்கள் பாலையாகும்.
வளமிகுந்த காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோ-கார்பன் குவிந்து கிடக்கும் அளவைவிட தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலிலும், அந்தமான் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் பல ஆயிரம் மடங்கு அதிகமான அளவில் ஹைட்ரோ-கார்பன் கிடைக்கிறது. வேளாண்மைப் பகுதிகளை அழிவுக்குட்படுத்தாமல் கடல் பகுதியில் ஹைட்ரோ-கார்பன் எடுக்க முடியும். ஆனால், அதற்கு செலவு அதிகமாகும்.
சமதளத்தில் ஆழ்குழாய் கிணறு அகழ்வு செய்வதற்கு ரூ.25 கோடி தேவைப்படும். கடல் பரப்பில் ஒரு கிணற்றுக்கு ரூ.100 கோடி தேவைப்படும். ஆழ்கடல் பகுதியானால் ரூ.400 கோடி தேவைப்படும். எனவேதான் தனியார் நிறுவனங்கள் குறைந்த செலவில் நிறைந்த ஆதாயம் அடைவதற்காக சமவெளிப் பகுதியில் ஹைட்ரோ-கார்பன் எடுக்க விரும்புகின்றன. அதற்கு மத்திய அரசு துணைபோகிறது.
சென்னை திருவள்ளூரிலிருந்து வேலூர் வழியாக பெங்களூர் வரையிலும், எண்ணூரிலிருந்து மதுரை வரையிலும் உள்ள விவசாய நிலங்களில் எரிவாயு குழாயை பதிக்கும் திட்டங்களின் ஆய்வுப் பணிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. எரிவாயு குழாய்களை சாலையோரங்களில் பதிப்பதால் செலவு கூடும் என்பதற்காக குறுக்கு வழியில் விவசாய நிலங்களில் பதித்துக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலங்களில் உள்ள கிணறுகள் பாதிக்கப்படும். இத்திட்டத்தின் விளைவாக இலட்சக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருமாற்றப் பாறைகள் அதிகம். இப்பாறைகளோடு உருவான கனிமங்கள் மழை நீரால் இழுத்து வரப்பட்டு பல்வேறு ஓடைகள் மூலம் ஆற்றில் கலக்கின்றன. ஆற்றங்கரைகளில் இக்கனிமங்கள் ஓரளவு படிந்தாலும் வெள்ளம் வரும்போது அடித்துவரப்பட்டு கடலில் சேருகின்றன. அலைகளால் அவைகள் முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த கனிமங்கள் மட்டும் கரையோரம் வந்து படிகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு தொடர்ந்து படிந்து தாதுமணல் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இத்தகைய தாது மணல் குன்றுகள் கடலோரம் உள்ளன. இவற்றில் இலிமனைட், ரூடைல், கார்னெட், சிலிகான், மோனோசைட் போன்ற தாது உப்புகள் ஒளிர்கின்றன. உலகச் சந்தையில் ஒரு டன் தாது மணல் கார்னெட் ரூ.20 ஆயிரம், இலிமனைட் 79 ஆயிரம், சிலிகான் 1,32,000 ஆயிரம், ரூடைல் 1,80,000, மோனோசைட் 5 இலட்சம் என விலை போகிறது. இதில் இல்மனைட் அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களிலும், ரூடைல் போர் விமானம் மற்றும் விண்வெளி உபகரணங்களிலும், சிலிகான் அணுமின் நிலையங்களிலும், மோனோசைட் அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படுகின்றன. இவை அணு ஆற்றல்களை உள்ளடக்கிய அதி முக்கியத் தாது மணல்களாகும்.
விலை மதிக்க முடியாத இந்த தாது மணல் குமரி முதல் தூத்துக்குடிவரை அள்ளப்பட்டுவிட்டதால் கரையின் பரப்பு குறைந்து கடற்கரை என்பதே இல்லாமல் போய் கடலும் ஊரும் ஒன்றாகிவிட்டன. கடலோரமாக இருந்த மணற் குன்றுகள் தனியார் நிறுவனங்களால் சூறையாடப்பட்டு விட்டதால் புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது. நெய்தல் நிலமும் பாலையாக மாறி வருகிறது.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் இயற்கை வளம் நிறைந்திருந்த முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்களை மெல்ல மெல்ல பாலையாக மாற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது முன்னோர் காலங்காலமாக பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டுப் போன வளமான தமிழகத்தை நமது சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் நெடுவாசல் மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சல்லிக்கட்டுக்காக சென்னை முதல் குமரி வரை மாணவர்களும்-இளைஞர்களும் அணி திரண்டு நடத்திய பண்பாட்டுப் பாதுகாப்புப் போராட்டம் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியுள்ளது. நமது மண்ணை, நமது வளத்தை காக்க நாமேதான் போராடியாக வேண்டும் என்ற உணர்வு மக்களுக்குப் பிறந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது.
நன்றி : தினமணி 2-3-17

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.