கருநாடக முதலமைச்சரைத் தண்டிக்க வேண்டும்! - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:38

தமிழகத்திற்கு சூலை 11ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், கடந்த 2016 டிசம்பர் 15, 2017 சனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில் உச்சநீதிமன்றம் இதைப்போல தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த மூன்று தடவையும் உத்தரவை நிறைவேற்ற கருநாடகம் மறுத்துவிட்டது. இப்போதும் உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க முடியாது  என கருநாடக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 

உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் தனிநபர் யாராவது மீறினால் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தனது ஆணைகளை  மீறிவரும் கருநாடக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

உடனடியாக கருநாடக முதலமைச்சரை உச்சநீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தனது ஆணையை மீறியதற்காக அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் உச்சநீதிமன்றத்தின் மதிப்பும், அதிகாரமும் நிலைநிறுத்தப்படும். இல்லையென்றால் ஒவ்வொரு மாநிலமாக உச்சநீதிமன்ற ஆணைகளை நிறைவேற்ற மறுக்கும் நிலை உருவாகிவிடும் என எச்சரிக்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.