நிலத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை அதன் அளவுகூடப் பிசகாமல் வானத்தில் சுற்றும் செயற்கைக்கோ ள்களால் கண்டறியும் யுகம் இது. பூமியில் இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் நேரத்தை மிகத் துல்லியமாய் வானத்தில் பறக்கும் செயற்கை கோள்களால் படம் பிடித்துக் காட்டக்கூடிய காலமிது. இந்த யுகத்தில்தான் சுமாராக ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வகைதொகையின்றி இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால் சுட்டும், விமானக் குண்டுகள் வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் கண்களைக் கட்டிவிட்டு இதனைச் செய்ய முடியாது. இவ்வினப்படுகொலைகளை வல்லமைப் படைத்த அனைத்து நாடுகளின் செயற்கைக் கோள்கள் மட்டுமன்றி அந்நாடுகளின் உளவு நிறுவனங்களும் சிறிதளவும் பிசகாமல் கண்டறிந்திருக்க முடியும். அப்படி இருந்தும் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் மட்டுமன்றி ஐநா சபைக்கும் இவை தெரிந்திருக்க முடியாதவை அல்ல. மொத்தத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களின் படுகொலையில் மேற்படி அனைத்து பெரிய நாடுகளும், ஐநாவும் தம் பொறுப்பில் இருந்து தவறிவிட்டன என்பதிலும் அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றத் தவறிவிட்டன என்பதிலும் சிறிதளவும் ஐயமில்லை.
இதன்பின்பு உண்மைகள் வெளிவரத் தொடங்கவே ஐநா தாம் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொள்ளும் நிலையும் உருவானது. இதனடிப்படையில் ஐநா உள்ளக விசாரணையில் ஈடுபட்டது. அந்த உள்ளக விசாரணை அறிக்கையின்படி 70,000 மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் என வகைதொகையின்றி சிங்கள இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
பக்க சார்பற்ற இந்த ஓர் அறிக்கை மட்டுமே போதும் - அங்கு இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதை நிரூபித்து அதன் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அதன் மூலம் பிரிந்து செல்லவும் முடியும். "இனப்படுகொலைக்குத் தீர்வு பிரிந்து செல்லல் மட்டுமே' என்ற கூற்று இங்கு மிகவும் சரியானது, நேர்மையானது. போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிபதிகள் மூலம் இதுவரை இலங்கை அரசு நடத்தாத நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்காமல் ஐநா மனித உரிமைகள் ஆணையமானது தனது 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் அதனை அப்படியே ஐநா பேரவையிடம் ஒப்படைத்து அதன் வாயிலாக ஐநா பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி ஒரு அனைத்து நாட்டு விசாரணையை ஐநா பாதுகாப்புக் குழு வாயிலாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதில் மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒரு விசாரணை நடக்கும் போது மேற்படி ஐநா உள்ளக விசாரணை அறிக்கை, சேனல்-4இன் 3 ஆவணப் படங்கள், அந்த ஆவணப் படங்களில் உள்ள நேரடி களநிலை படுகொலைக் காட்சிகள் அடங்கிய காணொளிப் படங்கள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் என்பன அனைத்தும் பொய்யற்றவை அல்ல என்றும், அவை உண்மையானவை என்றும் ஐநா தொழில் நுட்பக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் போதும் இலங்கையில் நடந்தேறியது இனப்படுகொலைதான் என்பதை அனைத்து நாடுகளின் நீதி விசாரணை அமைப்புக்கள் முன் நிரூபிப்பதற்கு.
இவற்றிற்கும் அப்பால் இலங்கை இராணுவம் 55 "பாலியல் வதை முகாம்களை'' வைத்திருப்பதாகவும் அதில் 48 இராசபக்சே காலத்தில் உருவானவையாகவும், மீதி 7 இன்றைய சிறிசேன அரசாங்கத்தின் கீழ் உருவானவையாகவும் உள்ளன. இம் முகாம்களில் சரணடைந்த பெண் போராளிகள் வைக்கப்பட்டு இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும், சந்தையில் இறைச்சி, மீன் வகைகளை தெரிவு செய்வதைப் போல இராணுவ அதிகாரிகள் இம் முகாங்களில் பெண்களை தேர்ந்தெடுத்துப் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவதாகவும் அனைத்து நாடுகளின் உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பின் இயக்குனர் யாஸ்மின் சுக்கா இம்மாதம் 2ஆம் தேதி ஐநா பேரவையிடம் ஓர் அறிக்கை அளித்துள்ளார் என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இதுவும் விசாரணைக்குரிய ஒரு சான்றாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்திய தேசத்தில் வாழ்கின்ற தமிழ்நாட்டு மீனவர்கள் எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கடலுக்குள் வைத்து ஈவு இரக்கமின்றிசுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கைக் கடலோர காவற்படை. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கூட பிரிட்ஜோ என்கின்ற திருமணமாகாத இருபத்தோரு வயது மீனவ இளைஞனை கொடூரமாக கொன்றிருக்கிறது இலங்கை அதிகார வர்க்கம்.
இந்நிலையில் - தற்போது அமெரிக்காவும், பிரித்தானியாவும் தமக்கு சாதகமான இன்றைய இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக காலநீட்டிப்பிற்கு ஆதரவு அளித்து காலப் போக்கில் விசாரணையை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் தந்திரத்திற்கு உதவுவது மிகப்பெரும் குற்றமாகும்.
அன்று 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறிய இந்த அரசுகள் இப்போது குறைத்த பட்சம் நீதியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய மறுத்து இலங்கை அரசின் தந்திரத்திற்குத் துணை போகின்றன.
இந்நிலையில் உலகெங்கும் வாழும் நீதியை நேசிக்கும் நீதிமான்களும், மக்களும், தமிழக மக்களும், உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் நீதிக்காக பாடுபட வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளனர்.
பெருவல்லரசுகளே, உலகச் சமூகமே, தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதி. இதனை நிறைவேற்றுவதற்காக ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஏற்ப அந்த தீர்மானத்தை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசுக்கு எதிராக ஐநா பொதுச்சபை மூலம் - இறுதியில் ஐநா பாதுகாப்புச் சபை வாயிலாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய தலைமைத் தளபதி சரத் பொன்சேகா மீது தமிழ் மக்களினதும், மனித உரிமையாளர்களினதும் குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கும் போது அந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இந்த அரசாங்கம் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி கெளரவித்திருப்பதுடன் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கும் நிலையில் இந்த அரசாங்கம் நீதியின் மீது எந்தவித அக்கறையும் அற்ற அநீதியைக் காக்கும் அரசாங்கம் என்ற வகையில் இந்த அரசாங்கம் நீதிவிசாரணை நடத்தும் என்று நம்பவும் முடியாது; இந்த அரசாங்கத்திடம் நீதி விசாரணையை ஒப்படைக்கவும் முடியாது.
இலங்கை அரசு கோரும் மேலும் 2 ஆண்டுகால காலநீட்டிப்பிற்கு வாய்ப்பளிக்காமல் உடனடியாக ஐநா பொதுச்சபையிடம் மேற்கூறப்பட்டவாறு சமர்ப்பித்து ஒரு அனைத்து நாட்டு விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
மனிதர்களைக் காக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும்தான் ஐநா பேரவையும், உலக நீதிமன்றங்களும். எங்களைக் கொன்றொழித்த, தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அதிகார வர்க்கத்திற்கு தண்டனை தருவதற்குப் பதிலாக இதற்கு மேலும் காலநீட்டிப்பு தருவதென்பது நேர்மையற்ற ஒன்று என்பதை இங்குள்ள நீதிமான்களும், மனித உரிமை பாதுகாவலர்களும் இனியாவது உணர வேண்டும்.
சிங்கள அதிகார வர்க்கம் அன்றும், இன்றும் தமிழர்களை, மனிதர்களைக் கொன்றார்கள் - கொன்று கொண்டிருக்கிறார்கள். தாங்கள் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக் கொடுக்க தமிழீழத்திலுள்ள எங்களது நிலங்களும், உரிமைகளும், உயிர்களும் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். தாமதிக்கும் நீதி அநீதிக்குச் சமமானது.
இந்த பூமிப் பந்தின் ஆதி இனமான, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பத்துக் கோடி தமிழர்களின் சார்பாக மன்றாடிக் கேட்கிறேன்.
எங்களுக்கு நீதி தாருங்கள்!
நீதி தாருங்கள்! நீதி தாருங்கள்! |