"பெருந்தலைவரின் நிழலில்' என்ற 653 பக்கங்கள் கொண்ட நூலை அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தமிழ்க்குலம் பதிப்பாலயம் இதனை பதிப்பித்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்களில் அய்யா பழ.நெடுமாறன் முற்றிலும் தனித்துவம் கொண்டவர்.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்பதைப் போல தனது உள்ளத்தின் நேர்மையை அரசியலாகக் கொண்டவர்.
தனது நேர்மையான கொள்கைளுக்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்பதை தனது கடந்த கால அவரது வாழ்க்கை நிரூபித்துக் காட்டியுள்ளது.
"பெருந்தலைவர் காமராசர்' என்னும் இவர் எழுதிய நூல், காமராசரைப் பற்றி தமிழில் இதுவரை வெளிவராத பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இன்றைய கொள்கைகளோடு மிகவும் தீவிரமாக வேறுபாடு கொண்ட நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை நெறியை தனது வாழ்க்கையின் வழிகாட்டி நெறியாக முன்னே நடக்க வைத்து பின்னே இவர் நடந்து செல்கிறார்.
பெருந்தலைவரோடு இவர் கொண்ட தூய உறவை குருகுல வாசத்தில் கிடைத்த பயன் என்கிறார். பல்லாண்டு கால இந்த தொடர்பு தான், இந்த நூல் உருவம் பெற காரணம் என்று உறுதியாக கூறமுடியும். இந்த நூலின் ஒரு சிறப்பு கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஆசிரியர் திரட்டியுள்ள தகவல்கள்தான்.
காமராசர் எவ்வாறு கம்யூனிஸ்டுகளை உள்ளும் புறமும் மதிப்பிட்டிருந்தார் என்ற விவரங்களை அறிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவக்கூடியது. இந்தியாவின் தேச பக்த மரபுகள் அனைத்தையும் அழித்து வெறி கொண்டு மோடியும், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் பாஜகவும் செயல்படும் இன்றைய காலத்தில், காமராசருக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமான உள்தொடர்பான தேசபக்த மரபை உணர்ந்து நூல் தொலைநோக்குப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு உரிய கெளரவத்தை வழங்கியிருக்கும் இந்த நூலை ஜனசக்தி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் இந்த விமர்சனக் கட்டுரையை எழுதுகிறேன்
விருதுபட்டியில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்க முடியாத ஏழ்மையில் வாழ்ந்தவர் காமராசர்.
தனது உழைப்பாலும், தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்.
1903ஆம் ஆண்டில் பிறந்தவர், 1919ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆறு முறை சிறை சென்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
சோசலிசத்தின் மீது காமராசர் கொண்ட, ஈடுபாட்டை விளக்க, லெனின் மீதும் அன்றைய ரசிய ஆட்சி முறையின் மீதும் கொண்ட ஈடுபாட்டை விரிப்பதன் மூலம் நூலாசிரியர் அவர்கள் விளக்க முயற்சி செய்கிறார்.
சோசலிச கருதுகோள் களையும் ஆழ்ந்து கவனித்த காமராசர் அதனை தமிழ்நாட்டில் அமல்படுத்த எடுத்த முயற்சிகள் முக்கியமானவை, ரசியாவில், 1908ஆம்ஆ ண்டில் 1000 குழந்தைகளில் 178 பேர் மட்டும் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
லெனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வந்தார். ரசிய குழந்தைகளுக்கு, சீருடையும், பசியைப் போக்குவதற்கு உணவும் அளித்து பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். இந்த மாதிரியை கொண்டுதான் 1954ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், சீருடையும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்து, அதனை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நெ.து. சுந்தரவடிவேல் அவர்களை பள்ளிக் கல்வி இயக்குநராக நியமித்தார் என்ற தகவல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் போலவே மின்மயம் என்பது சோவியத் ரசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தொழிற்சாலைகள் மூலம் நாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லவும் பங்காற்றியது.
உலக நாடுகள் எதிலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வாறு மின்மயம் நிகழ்ந்ததில்லை. லெனின் வழிகாட்டுதலில் வெகு மக்களின் கூட்டு முயற்சியில் இது நிகழ்ந்தேறியது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், தொழிற்சாலைகளின் பாய்ச்சல் வேகப் பெருக்கம் ரசியாவில் இதன் மூலம் உருவாக்கப்பட்டது.
இதனை அப்படியே தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்தவர் காமராசர் என்பதை ஆதாரத்துடன் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் இல்லாத கிராமங்கள் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற குறிக்கோளுடன் உழைத்த பெருந்தலைவர், இதற்கென்று மின்வாரிய தலைவராக அப்பாதுரை அவர்களை தேர்வு செய்தார்.
கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியவர் காமராசர் தான். இதனை தொடர்ந்து தமிழகம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக மாற்றப்பட்டது.
இதற்கு காமராசர் அவர்களுக்கு சோசலிசத்தின் மீதும் சோவியத் ரசியாவின் மீதும் இருந்த ஈடுபாடுதான் காரணம் என்பது நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
1924ஆம் ஆண்டில் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 18 வயதுடைய காமராசரும் 17 வயதுடைய ஜீவாவும் கலந்து கொண்டு சிறை சென்றதைப் பற்றிய விவரங்கள் நூலில் காணப்படுகின்றன.
அங்கு தொடங்கிய அந்த நட்பு காங்கிரஸ் கட்சிக்குள் அமைந்த முற்போக்கு நட்பாகவும் இடதுசாரி நட்பாகவும் அமைந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் அமைந்த தீவிர அரசியலில் இவர்களது பங்களிப்பு பற்றிய பல்வேறு விபரங்களுடன் நூல் தொடர்ந்து செல்கிறது. வேலூர் சிறைச்சாலை காமராசரையும் ஜீவாவையும் மேலும் நெருங்க வைத்துள்ளது.
இவர்கள் இங்கு சிறையிலிருந்த காலத்தில், பகத்சிங் நெருங்கிய தோழர்களான பூதகேஸ்வர் தத், குந்தர்லால், ஜெயதேவ் கபூர், கமல்நாத் ஆகியோர் வேலூர் சிறையிலிருந்தார்கள்.
அப்பொழுது சிங்காரவேலரும் அங்கு சிறையிலிருந்தார். அங்கு இருவருமே மார்க்சியத்தை கற்றனர். காரல் மார்க்சின் மூலதனத்தை தமிழாக்கம் செய்தவர் ஜமத்க்கனி. காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியின் வட ஆற்காடு மாவட்டச் செயலாளர். சிறைச்சாலைகளின் ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தை கற்பிக்கும் தனிச்சிறப்பைக் கொண்டவர்.
பெருந்தலைவரின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. தோழர் ஜமத்க்கனி அவர்களின் வகுப்புகளில் காமராசரும் பங்கேற்றவர்.
சமூகநீதி குறித்த பிரச்சனை காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக எழுவதற்கு சேரன்மாதேவி குருகுல பிரச்சனை முக்கியமானதாக தெரிகிறது. அங்கு மாணவர்களிடம் பின்பற்ற வற்புறுத்தப்பட்ட சாதிய வேறுபாடுகளை எதிர்த்து, தந்தை பெரியார், சேலம் வரதராச நாயுடு ஆகியோர் தங்கள் போராட்டத்தை ஒரு தீயைப் போல பரவச் செய்தார்கள். சமூக நீதி குறித்த உணர்வில் காமராசரும், ஜீவாவும் ஒருங்கிணைந்து பணியாற்ற இது முக்கிய காரணியாக மாறியது. மேலும் ஜீவா பற்றிய தகவல்களை திரட்டி ஆசிரியர் தருகிறார்.
1932ஆம் ஆண்டு தந்தை பெரியார் இல்லத்தில் சிங்கார வேலர் தலைமையில் நடைபெற்ற சமதர்ம திட்டம் வகுப்புதற்கான சிறப்பு மாநாடு, பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்' என்னும் நூலை தமிழாக்கம் செய்ததற்காக ஜீவாவின் காலிலும் கையிலும் விலங்கிட்டு அழைத்துச் சென்றது, ஆகிய அனைத்தையும் உணர்வு பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
1935ஆம் ஆண்டு நவம்பரில் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றுள்ளது. அதன் பொதுச் செயலாளராக தோழர் ஜீவா தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தலைமையில் அதன் பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி தீவிரமாக செயல்படத் தொடங்கியது. 1939ஆம் ஆண்டு வத்தலக் குண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஜமீன்தார் முறை முற்றாக ஒழிய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஆதரித்து ஜீவா பேசினார். காமராசர் அதனை வரவேற்றார் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் மக்களிடம் தீவிரத்தை உருவாக்கி இருந்தது. இதற்கென்று தனியாக ஒரு மாநாடு நடத்தி அதில் முத்துராமலிங்கத் தேவர், காமராசர், ப. ஜீவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர் என்பதை தோழா ஆர். நல்லகண்ணு அவர்களை ஆதாரமாகக் காட்டி, நூலில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தமிழக வரலாற்றில் கறைபடிந்த பக்கமாக மாறியது.
அதில் இருவேறு துருவங்கள் என்ற போதிலும் காமராசர், ஜீவா, ராமமூர்த்தி ஆகியோர் எவ்வாறு இணைந்து நின்று போராடினார்கள் என்பதையும் நூலில் ஆழமாக பதிவு செய்துள்ளார்.
ஜீவாவின் மரணம் காமராசரோடு அவர் கொண்ட தூய நட்பை பற்றிய உள்ளுணர்வை நமக்கு விளங்க வைக்கிறது. 1963ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவில் ஜீவாவுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது.
தகவல் கொடுங்கல் என்று ஜீவர் முதலில் சொன்னது அவரது துணைவியார் பத்மாவதி அம்மா அவர்களுக்கு, இரண்டாவதாக அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட பெயர் காமராசர் தான். அவருக்கு தகவல் கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த கம்யூனிஸ்டு தலைவரான பி. ராமமூர்த்தி அவர்கள் காமராசரோடு கொண்டிருந்த உறவு குறித்தும் நூல் ஆழமான பதிவுகளை செய்துள்ளது. இதில் முக்கியமான தகவல் ஒன்றையும் தோழர் பி.ஆர். அவர்கள் வெளியிட்டுள்ளார்.
1939ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாநாடு தேர்வு செய்ய வேண்டும். காமராசர் போட்டியிடும்படி வற்புறுத்தப்படுகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி. அப்பொழுது கம்யூனிஸ்டு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி என்னும் பெயரில் இயங்குகின்றனர். அவர்களின் வாக்குகள் மொத்தம் 26. இவை அனைத்தும் காமராசருக்கு அளிக்கப்பட்டு, அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு பெறுகிறார் என்ற தகவலும் தோழர் பி.ஆர் அவர்களை ஆதாரமாகக் காட்டி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை போன்ற மற்றொரு ரசிக்கத் தக்க நிகழ்ச்சி ஒன்றும் நூலில் விவரிக்கப்பட்டுளள்து.
தலைவர் காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலம். சட்டமன்ற உறுப்பினர் நாள் கொண்டாடும் வழக்கம். அப்பொழுது இருந்திருக்கிறது. ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பலபோட்டிகளும் நிகழ்த்தப்பட்டன.
விழா தொடங்குகிற நேரம். ஓர் ஆங்கிலோ இந்திய பெண் காமராசருக்கு அருகில் வருகிறார். மை டார்லிங் என்று அழைத்துக் கொண்டே அவரை கட்டிப் பிடித்துவிடுகிறார். காமராசர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். ஆனால் அவரது நடையை உற்று கவனித்த காமராசர் அட ராமமூர்த்தி நீயா என்று விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். தோழர் ராமமூர்த்தி அவர்கள் மாறுவேட போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், நண்பர் காமராசரை பகடி செய்வதற்கும் இந்த வேடத்தை தேர்வு செய்து, அன்றைய புகழ் மிக்க நாடக கலைஞர் டி.கே.எஸ். அவர்களிடம் ஒப்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்.
இதனைப் போலவே தோழர்கள். கே. பாலதண்டாயுதம், மணலி கந்தசாமி, மோகன் குமாரமங்கலம், எம். காத்தமுத்து, ஆர். நல்லகண்ணு ஆகியோர் பற்றிய தகவல்களும் நூலில் காணப்படுகிறது.
இறுதியாக ஒன்று அன்றைய காங்கிரஸ் கட்சியிலும் பெருந்தலைவர் காமராசரிடமும் அமைந்த இடதுசாரி பார்வையை ஆய்வு செய்பவர்களுக்கு இதை ஒரு சிறந்த வழிகாட்டும் நூலாக கருதலாம்.
(நூல் விமர்சகர் சிறந்த எழுத்தாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்).
- நன்றி : ஜனசக்தி (9-4-17) |