இந்திய அரசால் திரட்டப்படும் கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி மற்றும் மாநில அரசுகளால் திரட்டப்படும் விற்பனை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி போன்ற 23 மறைமுக வரிகளை ஒரே வரியாக உள்ளடக்கி ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் அரசு இதே சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்தபோது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. மற்றும் பல கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து முடக்கி வைத்தன. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு இப்போது பா.ஜ.க. அரசு அதே சட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான 4 சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு ஜüலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறை செயற்பாட்டுக்கு வரும்.
மாநிலங்களுக்குத் தக்கபடி மாறும் பல்வேறு வரிவிதிப்புகளை அகற்றி நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு பின்பற்றப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தற்போது எந்த மாநிலத்தில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறதோ அந்த மாநிலத்தில் அதற்கு வரி செலுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஜி.எஸ்.டி. முறைப்படி எந்த மாநிலத்தில் ஒரு பொருள் நுகர்வு செய்யப்படுகிறதோ அந்த மாநிலத்தில் வரி செலுத்த வேண்டும்.
இந்தப் புதிய வரிவிதிப்புக் குறித்து அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரியை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீடாக ரூ.55 ஆயிரம் கோடி வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதைவிட அதிகமான தொகை தேவைப்படும் என மாநில அரசுகள் கூறியுள்ளன.
ஆனால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கச் செய்வதா? அல்லது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கச் செய்வதா? என்பது பற்றி கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
மாநிலங்களின் நிதி உரிமை இதன் மூலம் பறிக்கப்படுவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன.
ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் இனி நாடெங்கும் ஒரே வரிவிகிதம் செயற்படுத்தப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும். இந்த வரி என்பது வாடிக்கையாளர்களிடம் மட்டுமே வாங்கப்படும். பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக மக்களுக்குக் கிடைக்கும். நாடெங்கும் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றும் தொல்லை இருக்காது. இதனால் நிருவாகச் செலவு, வரிகள் குறைப்பு ஆகியவற்றால் பொருட்களின் விலையும் குறையும். இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் கூடும். எனவே நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் 2% வரை அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.
மத்திய அரசின் கீழ் இந்த புதிய வரிவிதிப்பு முறை வருவதால் மாநிலங்களின் வரிவிதிப்பு முறை பாதிக்கப்படும். மாநிலங்களின் வரிவிதிப்பு முறைகளில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த வழியேற்பட்டுவிடும். புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதிக்கும் மாநிலங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டுவரி விதிக்கும் மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோகும். மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகத் திகழ்ந்து வரும் இது இனி ஜி.எஸ்.டி.யின் கீழ் மத்திய அரசிடம் சென்றுவிடும். மாநில அரசுகளுக்கு அதிக வருமானம் தரும் மறைமுக வரிகளான உற்பத்திவரி, சேவை வரி போன்றவை நடைமுறையில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அரசியல் சட்டத்தின்படி அதிக வருவாய் உள்ள வரிகள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 270 பிரிவின்படி மத்திய அரசு திரட்டும் வருமான வரியில் மாநிலங்களுக்குக் கட்டாயம் பங்கு கொடுக்க வேண்டும். இதைத் தவிர மானியங்கள், கடன்கள் போன்றவை மூலம் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவுகிறது.
வருமான வரியில் 85% மாநிலங்களுக்கு பங்காக அளிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு வரை கம்பனிகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி வருமான வரியுடன் சேர்க்கப்பட்டு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், இதை கார்ப்பரேட் வரி என்று தனியாகப் பிரித்துக்காட்டி இதில் பங்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மேலும் வருமான வரிமீது சர்சார்ஜ் என்னும் புதிய வரியை விதித்து அதிலும் மாநிலங்களுக்குப் பங்கு கிடையாது என கூறிவிட்டது.
மாநிலங்களில் உள்ள தொழில், வணிக நிறுவனங்களுக்கு வேண்டிய நிலம், நீர், மின்சாரம், மனித உழைப்பு, சாலைப் போக்குவரத்து போன்ற அனைத்தையும் மாநில அரசுகள் செய்கின்றன. ஆனால், இந்தத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்தும் சர்சார்ஜ், கார்ப்பரேட் வரி போன்றவற்றை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கு உரிய பங்கினை அளிக்கவில்லை.
மாநில அரசால் நடத்தப்படும் போக்குவரத்துத் கழகங்கள் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வதற்காக நடத்தப்படுகின்றன. ஆனால், இவைகளுக்கு மத்திய அரசு வருமான வரி விதிக்கிறது. இதன் விளைவாக மாநிலப் போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் நடக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான டீசல், பெட்ரோல் போன்றவற்றை வரியில்லாமல் அளிப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது.
அதே வேளையில் மாநிலங்களில் உள்ள தொடர் வண்டித் துறை மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது சொத்து வரி மற்றும் வரிகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அதைப்போல ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் பெரும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மாநில அரசின் வரிவிதிப்பிலிருந்து இவைகளுக்கு விதிவிலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால், மாநில அரசின் நிறுவனங்களுக்கு இத்தகைய விதிவிலக்கை மத்திய அரசு அளிக்க மறுக்கிறது.
உலக வங்கியின் மூலம் மாநில அரசின் திட்டங்களுக்கு பெறப்படும் கடன் உதவி மத்திய அரசின் மூலமே பெறப்படுகிறது. இத்தொகைக்கு .5% வட்டியை உலக வங்கி விதிக்கிறது. குறைந்தது 48 ஆண்டு காலம் தவணையும் கொடுக்கிறது. ஆனால், இத்தொகையை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்கும் போது வட்டி பல மடங்கு ஆக உயர்த்தப்படுகிறது. தவணைக் காலமும் 15 ஆண்டுகளாக குறுக்கப்படுகிறது.
மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் மத்திய அரசினால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மேலே கூறப்பட்டதைப் போல இன்னும் பலவற்றை எடுத்துக்காட்டலாம். மக்களுடன் நேரடியான தொடர்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, குடிநீர் வழங்கல் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. மத்திய அரசுக்கு மக்களுடன் நேரடியான தொடர்பு இல்லை. ஆனாலும், மாநிலங்களுக்கே உரிய கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் மத்திய அரசு தலையிட்டு அதற்கான தனித் துறைகளை ஏற்படுத்திக்கொண்டு மாநில உரிமைகளில் தலையிட்டு நாட்டாண்மை செய்கிறது. இதன் விளைவாக மக்களின் பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது.
இப்போது புகுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியின் விளைவாக மாநிலங்களின் நிதி ஆதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. அதிலும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிலும், மத்தியில் வேறு ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கும் போது நிதி ஒதுக்குவதில் பாகுபாடு என்பது தவிர்க்க முடியாததாகும். தனக்கு அடங்கி நடக்கும் மாநிலங்களுக்கு அதிக உதவியும், எதிர்க்கும் மாநிலங்களுக்கு குறைந்த உதவியும் அளிக்கப்படுவது நடைமுறையாகிவிட்டது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் கிடைக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பங்கு அளிக்கப்படும். அதற்குப் பிறகு மாநிலங்களின் நிதி ஆதாரத்திற்கு வேறு வழியைத் தேட வேண்டியிருக்கும். அதன் விளைவு மக்களின் வரிச்சுமை வேறுவகையில் கூடும்.
நன்றி : தினமணி 06-04-17 |