ஆற்று மணலும் மாற்று வழியும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00

காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆற்றுப்படுகைகளில் உள்ள 38 மணல் குவாரிகளை மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் சிறிது காலத்திற்கு முன்பாக மூடப்பட்டுவிட்டன. ஆகமொத்தம் தமிழகத்தில் இயங்கி வந்த 225 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 22 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை தங்கு தடையின்றி இரவும் பகலுமாக நடைபெற்றது. மணல் கொள்ளைக்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள், உழவர் அமைப்புகள் ஆகியோர் எதிர்த்துப் போராடினார்கள். அவ்வாறு போராடியவர்கள் பலரை மணல் கொள்ளைக் கும்பல் படுகொலை செய்தது. இக்கொள்ளையைச் சட்டப்படி தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மீது மணல் லாரிகளை ஏற்றிக் கொலை செய்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆறுகளில் எவ்வளவு அதிகமாக மணல் இருக்கிறதோ அந்த அளவிற்கு அதிகமான தண்ணீர் கிடைக்கும். ஆற்றில் இருக்கும் மணல் நிலத்தடி நீர்த்தேக்கமாகச் செயல்படுகிறது. ஆற்றங்கரையோரமாக உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. ஆற்றின் இருகரைகளிலும் உள்ள மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை வளமாக வளர்ந்தோங்குகின்றன. மக்களுக்கும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கிறது.

ஆனால், ஆற்று மணலை வரைமுறையின்றி இயந்திரங்களின் உதவியுடன் வாரிக் கொள்ளையடித்ததின் விளைவாக மக்களுக்குக் குடிதண்ணீர் பற்றாக்குறையாகிவிட்டது. கரையோர கிராமங்களிலிருந்த கிணறுகள் வற்றி வறண்டுவிட்டன. ஆறுகளில் மணல் சுரண்டப்பட்டதின் விளைவாக வெள்ளக் காலங்களில் நீர் வேகமாக ஓடி கடலை அடைந்து வீணாகிறது.

மணல் கொள்ளையின் விளைவாக பல ஆறுகளில் கட்டப்பட்ட பாலங்களும், அணைகளும் இடிந்து விழுந்துள்ளன.

ஆறுகளில் மணல் அதிகளவில் அள்ளப்பட்டதால் ஆறு பள்ளமாகி அதிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாயமுடியவில்லை. இந்த வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக விவசாய நிலங்கள் தரிசாகிவிட்டன. விவசாயத் தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கடந்த 22 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏன் இந்த நிலை நீடித்தது? அதற்கு முன்னால் மணல் கொள்ளை ஏன் இல்லாமல் இருந்தது? இந்த இரு கேள்விகளுக்கும் உரிய விடைகளை நாம் அறியவேண்டும்.

ஆங்கிலேயர் நமது நாட்டை ஆண்ட காலத்தில்கூட இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கருதி 1884ஆம் ஆண்டில் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்று கொண்டுவந்தனர். இதன்படி ஆறுகளின் இயற்கை வளம் கெடாமல் பாதுகாக்கப்பட்டது.

நாடு விடுதலைப் பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின்படி பாசன வேலைகளில் கிராம பஞ்சாயத்துகள் ஈடுபட வழிவகுக்கப்பட்டது. பிறகு 1958ஆம் ஆண்டில் இச்சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின்படி கிராமத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும், அவர்களுக்கு உரிமையானதாகவும் உள்ள நீரோடைகள், நீரூற்றுக்கள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவை பஞ்சாயத்தின் பொறுப்பில் விடப்பட்டன. இதன் விளைவாக ஆறு, குளங்களில் உள்ள மணலை அள்ளுவதற்கு அனுமதிப்பது கிராம பஞ்சாயத்துகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்தில் செய்யப்பட்டத் திருத்தத்தின்படி பஞ்சாயத்திடம் இருந்த இந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் விளைவாக கிராம மக்களின் கண்களுக்கு எதிராகவே ஆறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும் உள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டது. அதை தடுத்து நிறுத்த மக்களால் முடியவில்லை. அரசே இந்த கொள்ளையில் ஈடுபடும்போது மக்கள் என்ன செய்ய முடியும்?

கடந்த 22 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்தக் கொள்ளை இப்போது நிறுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தப்படி நடைபெறுமா? அல்லது இக்கொள்ளை மறைமுகமாகத் தொடருமா? என்ற கேள்வி எழுகிறது.

தற்போது அரசு குவாரிகளில் தனியார் மூலம் மணல் எடுத்து ஆற்றின் கரையில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அதிகாரிகளின் உதவியுடன் ஆற்றில் மணல் அள்ளும் லாரிகள் அரசு குவாரிகளுக்கு வராமலேயே நேரடியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு அதிக விலையில் விற்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 25000 லாரி மணல் விற்பனை செய்யப்படுவதாக கணக்கில் காட்டப்படுகிறது. ஒரு லாரி மணலின் அளவு 2 யூனிட். அதாவது 200 கனஅடி ஆகும். இதற்கு அரசு விலை ரூ.1000 ஆகும். இதன் மூலம் அரசிற்குக் கிடைக்கும் வருமானம் நாளொன்றிற்கு ரூ.2.5 கோடியாகும்.

ஆனால், உண்மையில் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 90 ஆயிரம் லாரிகளில் நடை யொன்றிற்கு 4 யூனிட் அதாவது 400 கன அடி மணல் ஏற்றப்பட்டு வெளியே ரூ.4200க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் மணல் கொள்ளையர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்த அளவாக ரூ.37.80 கோடிக்கு மேல் கிடைக்கிறது.

கேரளம், கருநாடகம், ஆந்திரம் போன்ற அண்மை மாநிலங்களில் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு கட்டுப்பாடுகளும் தடைகளும் உள்ளன. எனவே, தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்கு லாரி லாரியாக மணல் அனுப்பப்படுகிறது. ஒரு லாரி மணல் அம்மாநிலங்களில் விற்கப்படும் விலை ரூ.25,000த்திலிருந்து ரூ.40,000 வரை ஆகும்.

இதில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய பங்குகள் அளிக்கப்படுகின்றன.

அரசிற்கு நாளொன்றிற்கு வெறும் ரூ.2.5. கோடியை மட்டும் கொடுத்துவிட்டு மணல் கொள்ளையர்களும், அவர்களின் அரசியல் கூட்டாளிகளும் ரூ.35 கோடிக்கு மேல் ஆதாயம் அடைகிறார்கள்.

தனிநபர்களின் இந்தக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசே மணல் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஊழலில்லாமல் நடத்தினால், மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமான வருமானம் அரசிற்குக் கிடைக்கும், மதுவை அடியோடு தடைசெய்துவிடலாம்.

தமிழ்நாட்டில் கட்டிட வேலைகளுக்கு நாளொன்றிற்கு தேவையான மணல் எவ்வளவு? ஒரு மூட்டை சிமெண்ட்டிற்கு எட்டு கனஅடி மணல் தேவை. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 10 இலட்சத்து 80 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகள் விற்பனையாகின்றன. இதற்குத் தேவையான மணலின் அளவு 86 இலட்சத்து 40 ஆயிரம் கன அடி ஆகும்.

ஆனால், தற்போது நாளொன்றிற்கு ஆறுகளில் அள்ளப்பட்ட மணலின் அளவு அதாவது 90 ஆயிரம் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட மணல் 3 கோடியே 60 இலட்சம் கன அடியாகும். தமிழ்நாட்டின் தேவையைவிட 4.5 மடங்கு அதிகமான மணல் நமது ஆறுகளில் அள்ளப்பட்டு பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கடத்திச் செல்லப்படுகிறது.

ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அரசு தடைவிதித்திருப்பது பாராட்டத்தக்க முதல் முதல் கட்ட நடவடிக்கையாகும். ஆனால், தமிழ்நாட்டில் கட்டிடப்பணிகளும் மற்றும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளும் தங்கு தடையின்றி நடைபெற மணல் வேண்டும். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, அரசே மணல் விற்பனையை மேற்கொள்ள கீழ்க்கண்ட வழியைப் பின்பற்ற வேண்டும்.

சிமெண்ட் மூட்டைக்கு சம அளவிலான சாக்குகளில் அதாவது 1.25 கன அடி மணலை அடைத்து ஒரு மூட்டை மணலின் விலை ரூ.25 ஆக விற்பனை செய்யலாம். தமிழகத்திற்குத் தேவை நாளொன்றிற்கு 80 இலட்சம் சாக்கு மணல் மூட்டைகள் ஆகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 விற்பனை மையங்களை நிறுவி. ஒரு மையத்தில் நாள்தோறும் 80 ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் செய்து விற்க முடியும்.

இந்த விற்பனையின் மூலம் நாளொன்றிற்கு அரசிற்கு ரூ.20 கோடி கிடைக்கும். இதில் சரிபாதி செலவென்றாலும் சுமார் 10 கோடி ரூபாய் அரசிற்கு ஆதாயமாகக் கிடைக்கும்.
3000த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதின் விளைவாக வேலை இழந்துள்ள ஊழியர்களை மணல் விற்பனை மையங்களில் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால், இந்தத் திட்டத்தின் வெற்றி ஊழல் இல்லாத நிருவாகத்தையே பொறுத்ததாகும். இத்திட்டத்திலும் ஊழல் நுழையுமானால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது.

இது ஒரு தற்காலிக ஏற்பாடேயாகும். மாற்று மணல் என்று சொல்லப்படும் கல் தூளை கட்டிடப்பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.ஆற்று மணைலை விட இது 30% முதல் 40% வரை விலை குறைவானதாகும். குறிப்பாக அரசு கட்டிட வேலைகளுக்கு இந்த மாற்று மணலைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் நம்பிக்கையுடன் இந்த மாற்று மணலைப் பயன்படுத்த முன்வருவார்கள். அந்த நிலை உருவானால் ஆறுகளும், அவற்றில் உள்ள மணலும், நீராதாரமும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும்.

அதேவேளையில் ஆறுகளைச் சுரண்டியதைப் போல மலைகளையும் சுரண்டுவதற்குத் தனி நபர்களை அனுமதித்தால் மலைகளே காணாமல் போய்விடும். மக்களின் கண்காணிப்போடு அரசே மாற்றுமணல் தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

நன்றி: தினமணி 8-5-17

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.