மலையகத் தமிழர் கேட்பது சமஉரிமையே-வீடு அல்ல! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:21

அண்மையில் இலங்கை சென்ற பிரதமர் மோடி அவர்கள் மலையகத் தமிழர்கள் கூட்டத்தில் பேசும்போது "உங்களது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தனர். இந்த நேரத்தில் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனார் பாடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற பாடல்களை நினைவூட்டுகிறேன். ஒவ்வொரு ஊரும் உங்களது ஊரே. இலங்கையும் உங்களது ஊரே. இலங்கையில் வாழும் சிங்களர்கள்-தமிழர்கள் ஒற்றுமையின் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரான மலையகத் தமிழர்களின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்த இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் இந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும். மலையகத்தமிழர்களுக்கு ஏற்கெனவே 4 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும்'' எனக் கூறியுள்ளார்.

பிரிட்டனின் ஆட்சியில் இந்தியாவும் இலங்கையும் இருந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களை அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்கு ஏற்ற கடுமையான உழைப்பாளிகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த ஆங்கிலேயர் இங்கிருந்து கப்பல் கப்பலாக தமிழர்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். அவர்களில் மிகப்பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்.

தங்களுடைய கடுமையான உழைப்பின் விளைவாக தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். இவர்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள் இவர்களுக்குப் போதுமான வீட்டுவசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூட வசதி போன்றவற்றைக்கூட சரிவர செய்யவில்லை. தகரங்களினால் அமைக்கப்பட்ட கூடுகள் போன்ற வீடுகளில்தான் அவர்கள் வாழநேர்ந்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலத்திற்கு மேலாக இத்தகைய நரக வாழ்வில் அவர்களை சிங்கள அரசு வைத்திருந்தது. 5ஆம் வகுப்பிற்கு மேல் அங்கு பள்ளிக்கூடங்கள் கிடையாது. ஏனென்றால் அதற்கு மேல் படித்தால் தோட்ட வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் கல்வி அறிவை பெறவிடாமலேயே தடுத்தார்கள். இத்தகைய கொத்தடிமை வாழ்விற்கும் அபாயம் நேர்ந்தது.

1948ஆம் ஆண்டில் இலங்கை விடுதலைப் பெற்றவுடன் 200 ஆண்டு காலமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த மலையகத் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு நயவஞ்சகத் திட்டம் தீட்டியது.

சுமார் 2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் சிங்களர் எண்ணிக்கை 74.8% ஆகும். மலையகத் தமிழர் எண்ணிக்கை 4% ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி இடம் கொடுக்கப்படவில்லை. ஆறு இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

தில்லியின் துரோகக் கொள்கை

1947ஆம் ஆண்டு இலங்கைக் குடியுரிமைச் சட்டமும் 1949ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டமும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் இந்த இரு சட்டங்களுக்கும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பிற்று. நேரு-சேனநாயகா உடன்பாட்டின் அடிப்படையில் இந்தச் சட்டங்கள் அமைந்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தியப் பத்திரிகைகளும் இந்தச் சட்டங்களைக் கடுமையாக விமர்சித்தன. "இந்தியக் குடியுரிமைச் சட்டமல்ல; இது இந்தியரை வெளியேற்றும் சட்டம்'' என இந்து பத்திரிகை குற்றம்சாட்டியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒன்று பட்ட சென்னை மாநில அரசும் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு தமிழ்நாடு அரசும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடிக்கடி குரல் கொடுத்தன. இந்திய வம்சாவழித் தமிழர் பிரச்சினை சம்பந்தமாகச் சென்னைச் சட்டமன்றத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய வம்சாவழித் தமிழர் பற்றிய பிரச்சினையில் சென்னை மாநில அமைச்சரவையைக் கலந்து கொண்டு தான் மத்திய அரசு எத்தகைய முடிவும் எடுக்க வேண்டுமெனப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

1948ஆம் ஆண்டில் சென்னைச் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 5 ஆண்டுகள் தொடர்ந்து இலங்கையில் வசித்த இந்திய வம்சாவழியினர் அனைவருக்கும் அந்நாட்டின் குடியுரிமை எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழியினருக்கும் சென்னை மாநிலத்திலுள்ள அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குமிடையே எவ்விதத் தங்குதடையும் இல்லாத உறவும், போக்குவரத்தும் நீடிக்க வகை செய்ய வேண்டுமென்றும் இத் தீர்மானம் வற்புறுத்துகிறது.

1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் நேரு செல்லவிருந்ததையொட்டி இதற்கு முன்னதாக 1949ஆம் ஆண்டு இறுதியில் ஒரு முக்கியமான தீர்மானம் சென்னைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இந்தியா-இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்திடம் பேச்சு நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் போது இந்தியப் பிரதமருக்கு உதவி செய்வதற்காக சென்னை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தூதுக்குழு அனுப்பப்பட வேண்டுமென இத்தீர்மானம் வற்புறுத்தியது.

1952ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்திய வம்சாவழி மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்தியாவெங்கும் கண்டனம் எழுந்தது. 12-5-1952-இல் சென்னைச் சட்டமன்றத்தில் இதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்குரிமை பறிக்கப்பட்ட விதத்தை "மனித உரிமை மீறல்' என இத்தீர்மானம் வர்ணித்தது.

வாக்குரிமை பறிக்கப்பட்டதையடுத்து இலங்கை-இந்தியக் காங்கிரஸ் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தை ஆதரித்துச் சென்னைச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சென்னை நிதியமைச்சர் பின்வருமாறு கூறினார். "இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழியினர் குடியுரிமை பெறுவதற்காக நடத்தும் போராட்டத்திற்கு நாம் ஆதரவு அளிக்கிறோம். நமது அனுதாபம் அவர்கள் பக்கமேயுள்ளது.''

இலங்கையில் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் நாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் செல்வதற்குத் தயாரானார்கள். ஆனால் இலங்கைப் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு அவர்களுக்குப் பாஸ்போர்ட் வசதிகளை அளிக்க மறுத்துவிட்டது. (இந்து, மே 6, ஜüலை 30 1952).
தமிழ் நாட்டிலுள்ள 9 முக்கியமான தலைவர்கள் ஒன்றுகூடி 1952ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்கள்.
"இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட செயல் இந்திய மக்களின் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நடுவில் பெரும் கவலையை உருவாக்கியிருக்கிறது. இவர்களுக்கு மீண்டும் வாக்குரிமையை அளிப்பதற்கான முயற்சியில் இந்தியா - இலங்கை அரசுகள் உடனடியாக ஈடுபட வேண்டும்'' என வற்புறுத்தினார்கள்.

1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. 1951ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதிக்குள் அதாவது இரு ஆண்டுகளுக்குள் இலங்கைக் குடியுரிமைபெற விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டுமென இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி 8,25,000 இந்திய வம்சா வழியினரில் 2,37,034 பேர்களால் மட்டுமே விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதிலும் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது.

1953ஆம் ஆண்டின் இறுதியில் 65,714 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு முடிவடைந்திருந்தன. இவைகளில் 7,687 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்பட்டு இந்த விண்ணப்பங்களில் கண்டிருந்த 26,360 பேர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. 1962ஆம் ஆண்டில் இந்த விண்ணப்பங்கள் முழுவதுமாகப் பரிசீலனை செய்யப்பட்டு முடிவடைந்தபோது 1,34,188 நபர்களுக்கு மட்டுமே குடியுரிமை கிடைத்தது.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் பிரச்சினைகளையொட்டித் தமிழ்நாட்டில் எழுந்த கடுமையான எதிர்ப்புப் பிரதமர் நேருவைச் சிந்திக்க வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினார்.

1953ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நேருவும் இலங்கைப் பிரதமர் சேனநாயகாவும் இலண்டனில் எலிசபெத் அரசியின் முடிசூட்டுவிழாவின்போது சந்தித்துப் பேசினார்கள். இப்பேச்சின்போது கீழ்க்கண்ட ஆலோசனைகளை இலங்கைப் பிரதமர் கூறினார்.

1. நான்கு இலட்சம் இந்திய வம்சாவழி மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்.

2. மேலும் 2 இலட்சம் இந்திய வம்சாவழியினருக்கு நிரந்தரமாக வாழ்வோர் அனுமதி வழங்கப்படும். இவர்களின் எதிர்கால அந்தஸ்துக் குறித்து 10 ஆண்டுகளுக்குப் பின்னால் முடிவு செய்யப்படும். ஆனால் இடையில் யாராவது இந்தியாவுக்குத் திரும்பி இந்தியக் குடியுரிமைபெற விரும்பினால் இந்திய அரசு அவர்களை அனுமதிக்க வேண்டும்.

3. குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கையும், நிரந்தர வாழ்வோர் அனுமதி பெறுவோர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து மொத்த எண்ணிக்கை 6,50,000 ஆக இருக்கும். இதுவே அதிகபட்சத் தொகையாகும்.

4. இலங்கையில் மிச்சமுள்ள இந்திய வம்சாவழியினரான சுமார் 3,00,000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படுவார்கள்.

5. இந்தியா-இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கும் உடன்பாட்டின் அங்கமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆனால் இதில் சில அம்சங்களை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக 4ஆவது யோசனையை இந்தியா ஏற்றுக்கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று நேரு கருதினார். மலேயோ, பர்மா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் 120 இலட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையில் 3 இலட்சம் பேரைத் திரும்ப ஏற்றுக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டால் மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களையும் திரும்ப ஏற்றுக்கொள்ள நேரிடும். எனவே இந்தியா இந்த யோசனைகைளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இலங்கைப் பிரதமராக ஜான் கொத்தலாவாலா பதவியேற்ற பிறகு மறுபடியும் பேச்சுவார்த்தை நடந்தது.

1954ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்தியப் பிரதமர் நேருவும், இலங்கைப் பிரதமர் ஜான் கொத்தலாவாலாவும் சந்தித்துப் பேசினார்கள். இதன் விளைவாக ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் கள்ளத்தனமாகக் குடியேறுவோர் பிரச்னை விவாதிக்கப்பட்டதாகும். இலங்கைக் குடியேற்றச் சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட கீழ்க்கண்ட திருத்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவர் தாம் கள்ளத்தனமாக குடியேறியவர் அல்லர் என்பதை நிரூபித்தாக வேண்டும். இந்தப் பொறுப்பு அவரைச் சார்ந்ததேயாகும்.

ஆனால் இத்தகைய திருத்தம் ஏற்கனவே இலங்கைப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் இந்தியாவின் ஆட்சேபணை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திருத்தத்திற்குரிய தனது ஆட்சேபணையை இந்தியா வாபஸ் பெற்றுக்கொண்டது. கள்ளத்தனமாகக் குடியேறியவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னால் இலங்கையிலுள்ள ஹைகமிசனரைக் கலந்தாலோசிக்க வேண்டுமென இந்த உடன்பாடு கூறியது.

இலங்கையின் குடியுரிமைபெற்ற இந்திய வம்சாவழியினருக்குத் தனியான வாக்காளர் பட்டியல், முதல் 10 ஆண்டுகளுக்கு இருந்துவரும் என்பதை இந்தியப் பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டது வியப்புக்குரிய ஒன்றாக இருந்தது. இலங்கைத் தூதுக்குழுவின் வற்புறுத்தலின் பேரிலேயே இதைத் தாம் ஏற்றுக் கொண்டதாக இந்தியப் பிரதமர் கூறினார். ஏனென்றால் இந்த யோசனையை ஏற்காவிட்டால் இலங்கையில் சில அரசியல் கட்சிகளின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்று தம்மிடம் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள சில அரசியல் கட்சிகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகப் பிரதமர் நேரு இதை ஒப்புக்கொண்டது மிகப்பெரிய துரோகமாகும். ஏனென்றால் இதன்மூலம் பல இலட்சக் கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்காலம் முற்றிலுமாகப் பாழ்பட்டு விட்டது.

தமிழர் நலன்களுக்கு எதிரான இந்த உடன்பாட்டைக்கூட இலங்கை அரசு மனப்பூர்வமாக அமல் நடத்தவில்லை. இந்த உடன்பாட்டின் மூலம் தமிழர்களில் ஒருபகுதியினர் நாடற்றவர்களாவதற்கு இந்திய அரசு வழி வகுத்துவிட்டது.

இந்த உடன்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் ஒருவிதமாகவும், இந்திய அரசாங்கம் மற்றொரு விதமாகவும் விளக்கங்களைக் கூறின. இந்த உடன்பாட்டின் விளைவாக இலங்கைக் குடிமக்கள், இந்தியக் குடிமக்கள் என இரு விதமான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என்று இலங்கை அரசு கூறியது. ஆனால் இந்திய அரசு மூனறாவதாக நாடற்ற மக்கள் என்ற பிரிவினரும் இருப்பார்கள் என்று கூறியது.

முன்னாள் பிரதமரான டட்லி சேனநாயகா பின்வருமாறு கூறினார்: "இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின்படி எதிர்காலத்தில் இரண்டு விதமானவர்கள் மட்டுமே இருப்பார்கள். இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களைக் குறிப்பிட்ட காலத்தில் இந்தியா ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு நாடற்றவர் என்ற ஒரு பிரிவினர் இருக்கவே முடியாது. இதன் விளைவாக டில்லியில் உடன்பாடு அமலாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது பிரதமர் நேரு பின்வருமாறு கூறினார். (9-4-1958). "இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தின் பிரச்னையாகும். ஏனென்றால் இந்த மக்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்லர். இவர்கள் இலங்கைக் குடிமக்களே. இது அவர்களின் பிரச்னை. நம்முடைய பிரச்னை அல்ல. இலங்கையிலேயே பிறந்து அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறுவது ஏற்க முடியாதது. இதை ஓர் அரசியல் பிரச்னையாகவோ, தகராறாகவோ கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதவேண்டும்.''

இந்திய வம்சாவழி மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதிலும் அவர்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுப்பதிலும் இந்திய அரசை இலங்கை அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென்று 1964 ஜனவரி உடன்பாடு கூறியது. ஆனால் அதன்படி இந்தியாவை இலங்கை ஒருபோதும் கலந்தாலோசிக்கவில்லை.

பத்து ஆண்டுகள் கழிந்தன. இந்திய அரசியலிலும் இலங்கை அரசியலிலும் இந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரச்னையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. நேருவின் மறைவிற்குப் பின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும், பண்டாரநாயகாவின் மறைவிற்குப்பின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகாவும் கூடிப்பேசினர்.

1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை இரு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக மற்றோர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தந்தின்படி கீழ்க்கண்டவை ஏற்பட்டன.

1. 5,25,000 இந்திய வம்சாவழியினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் 15 ஆண்டுகள் கால இடைவெளியில் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படுவார்கள்.

2. 3 இலட்சம் இந்திய வம்சாவழியினருக்கு அதே காலத்தில் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்.

3. இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுவதும் இந்தியாவுக்கு அனுப்பப்படவேண்டியவர்கள் அனுப்பப்படுவதும் ஏககாலத்தில் நடைபெறும்.

4. மீதமுள்ள 1,50,000 இந்திய வம்சாவழியினர் குறித்துப் பிறகு உடன்பாடு காணப்படும்.

இந்த உடன்பாட்டின் விளைவாக இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழியினரை அந்நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் திட்டத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டது. பிரதமர் நேரு இருந்தவரை எதை ஏற்க மறுத்தாரோ அதை பிரதமர் சாஸ்திரி ஏற்றுக் கொண்டார்.

சாஸ்திரி - சிறிமாவோ பேச்சுவார்த்தையின்போது மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இந்திய வம்சாவழித் தமிழர்களின் நிலைமைகளை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. தொண்டமான், இந்தியா செல்ல முற்பட்டபோது அவரை இலங்கை அரசு தடுத்து நிறுத்திவிட்டது. உண்மை நிலைகளை இந்திய அரசுக்குத் தெரிவிக்காமல் தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டது. ஆனர்ல் இதை ஏன் என்று கேட்பதற்கு இந்தியப் பிரதமர் முன்வரவில்லை. இலங்கைத் தோட்டத் தமிழர்களின் தலைவரையோ அவர்களின் பிரதிநிதிகளையோ கலந்தாலோசிக்காமல் அவர்களின் எதிர்காலம் பற்றிய முடிவுகளைத் தான்தோன்றித்தனமான முறையில் இந்திய அரசு எடுத்தது. இது மிகப்பெரிய துரோகமாகும். சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை அறியாமலேயே அவர்கள் பற்றிய பிரச்சினையை இரு நாட்டின் பிரதமர்களும் கூடிப்பேசி முடிவு செய்தது வரலாறு காணாத அநீதியாகும்.

வெந்தபுண்ணில் வேலைச் செருகுவதைப்போலச் சாஸ்திரி செய்த துரோகத்தினால் நொந்துபோன தமிழர்களுக்குப் பிரதமர் இந்திராவும் துரோகமிழைத்தார். 1974ஆம் ஆண்டு ஜüலை 8ஆம் தேதி இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தப்படித் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது.

இனக்கலவரம்

1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தை சிங்கள இராணுவம் திட்டமிட்டு கொளுத்தியது. அது குறித்த உண்மைகளை அறிவதற்காக நான் முதன் முறையாக ஈழம் சென்றேன். அத்துடன் மலையகத் தமிழர்கள் வாழும் இரத்தினபுரி என்ற ஊருக்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த மலையகத் தமிழர்களை சிங்களக் காடையர்கள் தாக்கி தேவாலயத்திற்கும் நெருப்பு வைத்தார்கள். அதன் விளைவாக பல தமிழர்கள் உயிரிழந்தார்கள்.

ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளையெல்லாம் சந்தித்துப்பேசி அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளைப் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்துத் தமிழகம் திரும்பி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து இந்த விவரங்களைத் தெரிவித்தேன். அதிர்ச்சியடைந்த அவர் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் நானும் என்னைப்போலவே இலங்கை சென்று திரும்பியிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களும் கண்டறிந்த உண்மைகளைத் தெரிவித்தோம்.

அதற்குப்பின் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சித் தூதுக்குழு டில்லி சென்று பிரதமர் இந்திராகாந்தி அவர்களைச் சந்தித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் துயர நிலை குறித்து முறையிடுவது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்தோம்.

இந்திராவிடம் முறையீடு

1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி இந்தியப் பிரதமர் இந்திரா அவர்களை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சி தூதுக்குழு ஒன்று சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமான விண்ணப்பம் ஒன்றை அளித்தது.

இந்த விண்ணப்பத்தை உருவாக்கும் பொறுப்பு அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்னிடமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த திரவியம் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ÿமாவோ - சாஸ்திரி , ÿமாவோ - இந்திரா உடன்பாடுகளின் விளைவாக சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களின் மூதாதையர்களின் காலத்தில் இலங்கையில் ரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழித்தோன்றல்களான இவர்களுக்கு இலங்கையின் குடியுரிமையை இந்திய அரசு பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய இந்திய அரசு தவறிவிட்டது.

இதன் காரணமாகவே இவர்கள் அகதிகளாக இந்தியா திரும்பிவர நேர்ந்தது. எனவே, இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்திய அரசைச் சார்ந்ததாகும். தோட்ட விவசாயம் தவிர வேறு விவசாயத்தை இவர்கள் அறியாதவர்கள். அந்தமான், நிக்கோபர் தீவுகளில் தோட்ட விவசாயம் செய்ய வாய்ப்புண்டு. எனவே இவர்களை அத்தீவுகளில் குடியேற்றி நிலமும் நிதியும் கொடுத்து உதவினால் இவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி பிறக்கும். இத்தீவுகளின் பொருளாதாரம் செழிக்கும். எனவே பிரதமரிடம் அளிக்கவிருந்த விண்ணப்பத்தில் இதை முக்கிய அம்சமாக நாங்கள் சேர்த்தோம். பாகிஸ்தான், வங்காளதேசம், திபெத் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவியோடு ஒப்பிடும்போது இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவி குறைவானது என்பதையும் சுட்டிக்காட்டினோம். எனவே இத்தீவுகளில் இவர்களைக் குடியேற்ற வேண்டும் என்பதை வலியுறத்தினோம். அதற்குப்பின் இலங்கை இந்தியத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரான எஸ். செல்லச்சாமி தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவராக இருந்த கே. இராசாராம் ஆகியோர் இந்திராவைச் சந்தித்தபோது அவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

இச்செய்தி பத்திரிகைகளில் வெளியானதைப் பார்த்தபிறகு, அந்தமானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு வங்காளியின் தூண்டுதலின் பேரில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான தந்திகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

இலங்கைத் தமிழர்களை குடியேற்றக்கூடாது என கட்டுப்பாடான பிரச்சாரத்தை வங்காளியர் மேற்கொண்டனர். இலங்கைத் தமிழர்கள் குடியேற்றப்பட்டால் தமிழர்களின் எண்ணிக்கை வங்காளிகளைவிட அதிகமாகவிடும் என இவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாகும். தற்போது வங்காளியர்கள் வைத்ததே சட்டமாக உள்ளது. இந்த நிலை மாறி தமிழர்கள் கையோங்கிவிடும் என இவர்கள் கருதி முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

இலங்கையின் ஏற்றுமதியில் 12.3% மலையகத் தமிழர்களின் உழைப்பின் விளைவாக கிடைப்பதாகும். ஆனால் அந்த மக்களை கொத்தடிமைத்தனத்திலிருந்து விலக்கி சிங்களரோடு சமஉரிமை உடைய மக்களாக வாழ வைக்கவேண்டிய இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்குப் பிச்சை போடுவது போல 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதாகக் கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். அவர்கள் கேட்பது சம உரிமையே தவிர வீடு அல்ல என்பதை மோடி உணரவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.