ஏரிகள் வயல்வெளி பனந்தோப்புகள் அழிந்தன நகர வளர்ச்சி. ஒரு லிட்டர் குடிநீர் பத்து ரூபாய் வீராணம் வறண்டு கெஞ்சுகிறோம் ஆந்திராவிடம். நமது சென்னை மாநகரம்; அசுத்தப் பட்டியலில் மூன்றாமிடம் ஏரிகள் யாவும் தரைமட்டம்; வீடுகளாய்! பாலாறு வறண்டு மணல் சுரண்டல்!
கல்பாக்கம் அணுஉலை எப்போது எப்படி ஆகுமோ? பயம் கவலை கண்களில்; மக்கள் வாழும் மருத நிலமாம் செங்கல்பட்டு காஞ்சிபுரம்
தோல் பதனம் பயன்படும் குரோமியம் நிலம் நீரில் சேகரம்; உறிஞ்சும் தென்னை கரும்பு பயிர்களில் சேகரம்; உணவோடு உண்ணும் தாயின் பாலில் குரோமியம் விஷமானது. குடிக்கும் குழந்தைக்கும்தான். எங்கு? நமது வேலூர் மாவட்டம்தான்.
அன்று ஆத்திமரக்காடுகள் அழகோடு மாந்தர் வாழ்வதற்கு உகந்த நிலமாய்; இன்று நெய்வேலி நிலக்கரியால் பிளக்கப்பட்ட பூமியுடன் 200 கிராம மக்கள் ஆடுகள் மாடுகள் புலம் பெயர்ந்து சுற்றுச்சூழல் அகதிகளாய் கெடிலம் பெண்ணையாறு மணல் சாரிசாரியாய் லாரிகளில்; நிலத்தடி நீரின்றி குடிநீர்ப் பஞ்சம். வேளாண் வீழ்ச்சியில் மக்கள் துயரம். நம் கடலூர் விழுப்புரம் பகுதிதானே!
மழை மறைவு குறிஞ்சி நில மக்கள் புலம் பெயர்ந்த மக்களின் துயரவாழ்க்கை தருமபுரி எனும் பகுதியே!
காவிரி நதிநீர்ப்பிரச்சினை மேட்டூர் அணை நீரின்றி உருக்கு ஆலை அளித்த சூழல் கெடுதியே மிச்சம். தவிப்பில் நம் சேலத்து மக்கள்.
ஆற்றுநீரே ஆதாரம். நதிநீர்ப் பங்கீட்டால் விவசாயம் பாழ்; குடிநீர்ப் பஞ்சம், பல தொழிற்சாலைக் கழிவுகளால் தவிக்கும் நம் திருச்சி நாமக்கல் கரூர் மக்கள்
சிறுவாணி பவானி அத்திக்கடவு திட்டங்கள் அரசு கிடப்பில், பேப்பரில், இரத்தக் காட்சிகளாய் ஆறுகள் சாயப்பட்டறை கழிவுநீரால்; விவசாயம் பொய்த்தது; நீருக்கும் போராட்டம் சூழல் நெருக்கடிகளில் மக்கள்; நம் கோவை திருப்பூர் தொழில் நகரப்பகுதிகள்.
மரங்களுக்கு, சுவையான தேயிலைக்கு காடுகளை அழித்து அழகான? தேயிலைத் தோட்டங்கள் முல்லை நிலச்சூழல் கெட்டு, யானை கரடி விலங்குகள் நம்மைப்போல் குடிநீருக்கு அலைகின்றன! மலைகளின் இளவரசி நீலகிரி, முதுமலை-நெருக்கடியில்
பல ஆயிரவருட பழைமைக்கற்கள் பூமிக்கடியில் கிரானைட் என வெட்டினர்; வாணிபம் ஏற்றுமதி தடையின்றி நிலமிழந்தமக்கள்; பாழ்பட்டது நிலம். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை-
பச்சைமலை, பவழமலை, வெள்ளிமலை அரிதான கனிமங்கள்; மழை மழை மழை ஆயிரமாயிர ஆண்டுகளாய் கனிமங்கள் கரைந்து கரைந்து வெள்ளத்தோடு கலந்தன கடலில். அலையோடு மீண்டும் மீண்டும் சேர்ந்தன கடற்கரை. மருந்துக்குஅணுஉலைக்கு அரிதான கனிமங்கள். கனிமங்கள் கடத்தல் கப்பல் கப்பலாய் கடற்கரையிலிருந்து; அரசியல்வாதிகள் பெருமுதலாளிகள் சதி; மதுரை, திருநெல்வேலி, நெய்தல் நிலப்பகுதி பாழ்!
தென்னாட்டின் நெற்களஞ்சியம் காவிரி நீரின்றி வேளாண்மைப்பொய்த்து நாளுக்குநாள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மீதேன் வாயு எடுத்து நிலத்தைப் பாலையாக்க அரசு உடந்தை; தினமும் போராட்ட வாழ்க்கை நம் மருதநிலமக்கள் தஞ்சையில். ஆம்.
ரயில்புகை மக்களைப் பாதிக்கக்கூடாது ஆண்ட மன்னன் புகைவண்டி நிலையத்தை 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு வெளியே அமைத்தான். இன்று ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களை வெளியேற்ற முனைகிறது அரசு. போராட்டக் களத்தில் புதுக்கோட்டை
பன்னாட்டு கோகோ பெப்சி நிறுவனம் உறிஞ்சும் நீரால் ஆறும் பாழ்; மக்கள் போராட்டம் நிதமும்; நீதிமன்றம் சதிமன்றம் ஆனது; அரசு பொம்மையானது; தென்னாட்டின் ஜீவநதியாம் தாமிரபரணி மரணப் படுக்கையில்.
அணுமின் நிலையம் அனல்மின் நிலையம் நெய்தல் நிலமக்கள் பீதியுடன் தினமும் கூடங்குளம் தூத்துக்குடி குமரி நிலப்பகுதிகளாம்.
அழகிய அமைதி நிலப்பகுதி மலையைக் குடைந்து இதோ நியூட்ரினோ அணுஆராய்ச்சி காடுமலை சூழல் அழிவே தேனி மாவட்டம் தயாராகிறது.
வளநாடு நெல் வாழை கரும்பு தென்னை; மிரட்டுகிறது இணையம் துறைமுகக் கட்டுமானத் திட்டம் நெய்தல் நில மக்கள் போராட்டம் கலக்கத்தில் கன்னியாகுமரி.
நிலத்தை வகைப்படுத்தி வாழும்வகை வகுத்தவன் தமிழன்! இயற்கை பாதுகாவலன்! ஆனால் இன்று?
விழிப்பு நிலை ஒன்றே தமிழகத்தைக் காக்கும்! |