தனிமைப்படுத்தப்பட்டுத் தவிக்கும் இந்தியா! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:30

"இலங்கைக்கு உற்ற நண்பனாகவும், உண்மையான கூட்டாளியாகவும் இந்தியா என்றென்றும் விளங்கும். இலங்கையில் உள்ள நமது சகோதரர்களும் சகோதரிகளும் வளமான வாழ்வுபெறவும், முன்னேறிச் செல்லவும் தேவையான பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு இந்தியா உறுதியாக உதவும்.'' என இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மே 12 அன்று கொழும்பில் கூடியிருந்த பெருங்கூட்டத்தில் வாக்குறுதி வழங்கினார்.

மூன்று நாட்கள் கழித்து மே 15ஆம் நாள் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட மாநாட்டில் பங்குபெற இந்தியா மறுத்துவிட்டது. தனது இறையாண்மையை சீனா மதிக்கவில்லை என இந்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால் இந்தியா பங்குபெற மறுத்த மாநாட்டில் இலங்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பல நாடுகளுக்கிடையே புதிய நெடுஞ்சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள், எரிவாயு குழாய்கள்-எண்ணெய் குழாய்கள் பதிப்பு, மின்பாதை, தகவல் தொடர்பு இணைப்பு, கப்பல் போக்குவரத்துத் தடங்கள், துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக சுமார் ரூ.9 இலட்சம் கோடி செலவிடும் திட்டம் ஒன்றினை சீனா வகுத்துள்ளது. இத்திட்டம் குறித்து ஆராய்வதற்காகவே இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டு காலத்திற்கு மேலாக இத்திட்டம் குறித்து இந்நாடுகளுடன் சீனா ஆலோசனையை நடத்தியுள்ளது. 

இந்தப் பொருளாதார வழித்தடத்திட்டத்தின் ஒரு பகுதியான சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இடம் பெற்றுள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா இந்த மாநாட்டினைப் புறக்கணித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் நட்பு நாடாகவும், நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும் மோடியால் கருதப்பட்ட இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. மூன்று நாட்களுக்கு முன்னால் எந்த நாட்டை பிரதமர் மோடி பாராட்டிப் புகழ்ந்தாரோ, பல்வேறுப் பொருளாதாரத் திட்டங்களுக்கு அள்ளித் தருவதாக வாக்களித்தாரோ அந்த நாடு இந்தியாவின் இறையாண்மையை மதிக்காத சீனா கூட்டிய மாநாட்டில் பங்கேற்றது என்பது நம்பிக்கைத் துரோகமாகும். ஆனால், இதை இந்திய அரசு உணராமல் போனது ஏன்?

1962ஆம் ஆண்டில் இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமித்தபோது சீனாவை கண்டிக்க இலங்கை முன்வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பாளனான சீனாவையும் ஆக்கிரமிப்புக்குள்ளான இந்தியாவையும் சமதட்டில் வைத்து இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்வதற்கு இலங்கை முயன்றது.

1971ஆம் ஆண்டு வங்காள தேசப் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டபோது இந்திய வானவெளியின் மேல் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக்கூடாது என இந்தியா தடைவிதித்தபோது, பாகிஸ்தான் போர் விமானங்கள் இலங்கை வழியாக வங்காளதேசம் சென்று குண்டு மழை பொழிய அனுமதித்தது இலங்கை.

சார்க் அமைப்பு என்ற பெயரில் தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றினை இந்தியா அமைத்துள்ளது. இதில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு, நேபாளம், ஆகிய நாடுகள் சீனா கூட்டிய மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றன. ஒரே ஒரு நாடான பூடான் மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை. இந்து நாடு நேபாளம்கூட இந்துத்துவப் பிரதமர் மோடியுடன் நிற்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் சீனாவுடன் கரம்கோர்த்து நிற்கின்றன. பிரிட்டன், ரசியா, மத்திய ஆசிய நாடுகள் ஆகியவையும் சீனாவின் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளன. இம்மாநாட்டில் அமெரிக்கா பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளது. 130 நாடுகள் பங்கேற்றிருக்கும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு முடியும்போது இந்நாடுகளின் அரசியலையும், பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு சீனா வலிமைபெற்றுத் திகழும்.

அதுமட்டுமல்ல மியான்மர், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது கடற்படைத் தளங்களை அமைத்து சீன டிராகன் இந்தியாவைச் சுற்றி வளைத்துள்ளது. இதன் விளைவாக இந்துமாக்கடலின் ஆதிக்கம், சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்லச் சென்றுகொண்டிருக்கிறது.

தென்னாசியாவில் மட்டும் அல்ல உலக அரங்கிலும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுத் தவிக்கிறது. தென்னாசியாவின் மிகப்பெரிய நாடான இந்தியா தனது அண்மையில் உள்ள சிறிய நாடுகளைக்கூட தனது பக்கம் வைத்துக்கொள்ளத் தவறிவிட்டது. இந்தியாவின் இராசதந்திரம் அண்டை நாடுகளில்கூட செல்லுபடியாகவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்த நாடுகள் இந்தியாவிற்கு எதிரான சீனாவுடன் கைகோர்க்கத் தவறவில்லை. சீனாவுடன் சேர்ந்து நிற்பதின் மூலம்தான் இந்தியாவின் தன்மூப்புத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என இந்நாடுகள் கருதுகின்றன.

உலகில் உள்ள கடல் வழிப் பாதைகளில் முக்கியமானது இந்துமாக்கடல் வழிப்பாதையாகும். கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள், மேற்கு நாடுகளிலிருந்தும் அராபிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்களும் எண்ணெய் கப்பல்களும் இந்தப் பாதை வழியே செல்லுகின்றன. ஆங்கிலேயே ஆட்சியில் இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கட்டுண்டுக் கிடந்தபோது இந்துமாக்கடல் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தியா விடுதலைப் பெற்றப்பிறகு இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1983ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டபோது இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அதில் தலையிட்டார். இலங்கையில் நடைபெறுவது திட்டமிட்ட இனப்படுகொலை எனக் கண்டிக்க அவர் தவறவில்லை. மூத்த இராசதந்திரியான ஜி. பார்த்தசாரதியை அனுப்பி இலங்கை அரசிற்கும் தமிழர் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தச் செய்தார். அதன் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு அதிகாரமளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்ற விரும்பாத இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா திரிகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டார். அமெரிக்கத் தளம் அமையுமானால் இந்தியாவை மிரட்ட முடியும் என கருதினார். ஆனால், பிரதமர் இந்திரா அதை அனுமதிக்கவில்லை. இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசின் இராணுவதளமும் அமைவது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரானது என எச்சரித்தார். அதன் விளைவாக அமெரிக்க கடற்தளம் அமைக்கப்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், இப்போது இலங்கையின் தெற்கு முனையில் அம்பந்தோட்டா என்னும் இடத்தில் சீன கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார உதவி, இராணுவ உதவி என்ற பெயரில் சீனா இலங்கையில் ஆழமாக கால் ஊன்றி நிற்கிறது.

இந்துமாக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றிப்பெற்றுவிட்டது. கடந்த கால காங்கிரசு அரசும் இப்போதைய பா.ஜ.க. அரசும் இலங்கையின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் அதை திருப்தி செய்வதன் மூலம் தங்கள் பக்கம் திருப்பலாம் என செய்கிற முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை.

இலங்கையைத் திருப்தி செய்வதற்காக ஈழத்தமிழர்களை பலிகொடுக்க காங்கிரசு அரசும் பா.ச.க. அரசும் தவறவில்லை. இதன் விளைவாக இந்தியாவின் தென்வாயிலில் சீனாவின் அபாயம் கதவைத் தட்டுகிறது.

1962ஆம் ஆண்டு சீனா படையெடுப்பிற்குப் பிறகு அன்றையப் பிரதமர் நேரு "வடமாநிலங்களில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் அமைப்புகளை நிறுவுவதில்லை என முடிவு செய்தார். அதன் விளைவாக தென் மாநிலங்களில் தற்போது 700க்கும் மேற்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இலங்கையில் சீனா காலூன்றியதன் மூலம் மேலே கண்ட தொழிற்சாலைகள் அனைத்தும் அபாயத்திற்குள்ளாகியுள்ளன.

இந்திய அரசின் தொலைநோக்குச் சிந்தனையற்ற இராசதந்திரத்தின் விளைவாக ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களே பேரழிவை எதிர்நோக்கியுள்ளனர்.

எல்லாவகையிலும் இந்தியாவை எதிர்பார்த்திருக்கும் அண்டை நாடுகள் எதுவும் உண்மையான நட்புறவுடன் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இந்தியாவின் பகைநாடான சீனாவுடன் கரம்கோர்த்து நிற்க இந்நாடுகள் கொஞ்சமும் தயங்கவில்லை.

ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தலைமை தாங்கிய இந்தியா இன்று தனிமைப்படுத்தப்பட்டு கையறு நிலைக்கு ஆளாகித் தவிக்கிறது.

- நன்றி : தினமணி 27-5-17

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.