"ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய அமைப்புகளை எதிர்த்துப் போராட பகவத் கீதையை நான் படித்து வருகிறேன். அது காட்டும் வழியில் இவர்களை வீழ்த்தும் வழியைக் கண்டறிவேன்'' என காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா வாதிகள் தங்களுக்கு வழிகாட்டும் நூலாக கீதையைக் கொண்டிருக்கிறார்கள். அதே கீதையை தனக்கும் வழிகாட்டும் நூலாக ராகுல் காந்தியும் கொள்ளப்போவது நகைப்புக்குரியது.
கீதை என்ன சொல்லியிருக்கிறது. அதனுடைய கருத்துக்கள் எத்தகையவை என்பதை ராகுல் காந்தி கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை.
"வேத காலத்திலிருந்து இந்தியாவில் தோன்றிய அனைத்து சிந்தனை மரபுகளின் தொகுப்பே பகவத் கீதை'' என இந்துத்துவாவாதிகள் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிறப்பினால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது. என்ற கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது சதுர்வர்ண சாதி அமைப்பாகும். ஆனால், கீதை இதை உயர்த்திப் பிடிக்கிறது. கிருட்டிணன் கூறுவதாக கீதையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"நான்கு வருணங்களை நான் ஏன் படைத்தேன்? அதை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியவன் நானே என்பதை அறிவாயா?''
தனித்தனி சாதிகளுக்கான பண்பு, வேலை ஆகியவை மட்டும் அல்லாமல் சாதிகளுக்கான உணவு முதல்கொண்டு கீதை விரிவாகக் கூறுகிறது. பிற சாதியரைவிட பார்ப்பனரே உயர்ந்த சாதியினர் என வலியுறுத்துகிறது. சாதி வேறுபாடு பிறப்பிலேயே வருவது என்று கூறி சாதிப்பிரிவினையை வலியுறுத்துகிறது.
ஆனால், புத்தர் தோன்றி உருவாக்கிய புரட்சி வருண தரும முறைக்கு வேட்டு வைத்தது. தாழ்ந்த சாதியினரையும், உழைக்கும் மக்களையும் உயர்த்துவதில் வெற்றி கண்டது. சாதியால் மக்களைப் பிரித்தது. மனிதரின் ஈனச்செயல் என்பதை உணர வைத்தது.
பெளத்தப் புரட்சியை நயவஞ்சகமாக வீழ்த்துவதில் பார்ப்பனியம் வெற்றிபெற்றது. ஆனாலும், மக்கள் பார்ப்பனிய மதத்தை ஏற்க மறுத்தனர். குறிப்பாக உழைக்கும் மக்களும், அறிவாளிகளும் பார்ப்பனியத்திற்கு அடிபணிய மறுத்தார்கள். ஆனால், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமையை பார்ப்பனர் உணர்ந்தனர். எனவே, உழைக்கும் மக்களையும் அறிவாளிகளையும் ஏமாற்றக்கூடிய ஒரு கருத்தியலை கண்டறிய பார்ப்பனச் சிந்தனையாளர்கள் தீவிரமாக முயன்றனர்.
ஆனால் இந்தச் சூழ்நிலையில்தான் கீதை எழுதப்பட்டது. பயன் கருதா கருமம் என்ற கருத்தியலை கீதை வலியுறுத்தியது. அதாவது அவரவர்கள் பிறப்பினால் பணிக்கப்பட்ட கருமம் எதுவோ அதை ஊதியமின்றிச் செய்ய வேண்டும் என்பது கீதையின் சாரமாகும்.
"இந்திய வரலாற்றில் பகவத் கீதை'' என்ற தலைப்பில் அறிஞர் பிரேம்நாத் பசாஸ் எழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
"பார்ப்பனியம் இந்திய சமூகத்தை இரண்டு வர்க்கமாகப் பிரித்து வைத்திருந்தது. உடல் நோவாமல் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வந்த முதல் வர்க்கம் பார்ப்பனர்களையும், புரோகிதர்களையும் மடாதிபதிகளையும் கொண்டதாக இருந்தது. மேல் தட்டில் மேன்மையுடன் வீற்றிருந்த அவர்கள் பிறரின் உழைப்பில் உண்டு கொழுத்து உலவி வந்தனர். படைவீரர்கள், வணிகர்கள், கல்வி கற்ற பணியாளர்கள், விவசாயிகள், சூத்திரர்கள், தீண்டத்தகாத தள்ளிவைக்கப்பட்ட சாதியினர் ஆகிய இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பின் பயன் அனைத்தும் பார்ப்பனர்களுக்கும் புரோகிதர்களுக்கும் மடாதிபதிகளுக்குமே பயன்பட்டது. பயன் கருதாக் கருமம் அல்லது ஊதியமின்றி உழைத்தல் என்ற இந்தக் கருத்தியல் உழைக்கும் வர்க்கத்தை என்றென்றும் அடிமைத்தனத்தில் வைத்திருப்பதற்கும், பார்ப்பன, புரோகித வர்க்கம் மேல் நிலையில் இருந்து கொண்டு வசதிகள் அனைத்தையும் அனுபவிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது. அனைவரும் உழைப்பில் ஈடுபட்டு, சமுதாய வளத்தைப் பெருக்கி உற்பத்தியைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும் வர்க்க அமைப்பு உள்ள சமூகமென்றால்கூட இந்தப் பலன் கருதா உழைப்புக் கருத்தியலை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சமத்துவமற்ற சமூக அமைப்பில் இக்கருத்தியல் சுரண்டிப் பிழைப்பதற்கே வழி வகுக்கும்''
கீதை கற்பித்த இந்தப் பிற்போக்கான தத்துவத்திற்கு மேலும் அரண் சேர்க்கும் வகையில் மனு என்பவர் பார்ப்பனிய மதத்திற்கான சட்ட விதிகளைத் தொகுத்துத் தந்தார். அவர் இயற்றிய மனு தர்ம சாஸ்திரம் சாதிப் பாகுபாடுகளை மேலும் இறுக்கமாக்கியது. பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்தை சமூகத்தின் மீது திணித்தது.
மனு பெண்களை இழிவாகக் கருதினார். சுதந்திரமாக வாழ்வதற்கு பெண்கள் தகுதியானவர்கள் அல்லர் என்று கூறினார். பெண்ணடிமைத் தனத்திற்கு வித்திட்டவர் மனுவே. கணவன் இறந்தபிறகு பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது. கணவனின் சிதையில் தன்னையும் பெண் எரித்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலும் மேலும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். தீண்டத்தகாதவர்கள், பார்க்கத் தகாதவர்கள், நெருங்கத் தகாதவர்கள் என உழைக்கும் வர்க்கத்தை தள்ளி வைத்தனர்.
கோடிக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தினரும் பெண்ணினமும் மிகக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கீதை தூக்கிப்பிடித்த நால் வருண சாதி முறை எண்ணற்ற உட்சாதிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. ஒரு சாதியினருடன் பிற சாதியினர் உறவு கொள்ள மறுத்தனர். சாதிப்பிரிவு மற்றும் உட்பிரிவுகளிடையே நிரந்தரமான வெறுப்புணர்வு, பகைமை, மனக்கசப்பு, காழ்ப்புணர்ச்சி ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.
சாதிப்பிரிவினையால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்பட்டன என்பதையும் இச்சாதிப்பிரிவினையை ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக பார்ப்பனத் தலைவர்களும் கீதையைப் போற்றுபவர்களும் தூக்கிப்பிடித்த காரணத்தினால் நாடெங்கும் மக்கள் பிளவுபட்டு முன்னேறமுடியாமல் இன்றளவும் தவிக்கின்றனர்.
இந்து மத நூல்களில் தலையாய இடத்தை கீதை பெற்றது. பார்ப்பனிய வழிமுறைகளுக்கான வழிகாட்டியாக பயன்படத்தொடங்கிய பகவத்கீதை படிப்படியாக இன்று இந்துத்துவம் என்று அழைக்கப்படும் கருத்தியலுக்கான கையேடாக மாற்றம் பெற்றுள்ளது.
இவை எதையும் அறியாமல் இந்துத்துவாவாதிகள் தங்களின் வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கருதும் கீதையையே தானும் பின்பற்றி அவர்களை ஒழிக்கப்போவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாகும்.
பா.ச.க. தீவிரவாத இந்துத்துவா ஆனால் காங்கிரஸ் மிதவாத இந்துத்துவா என்ற கருத்தையே ராகுல் காந்தி கூற்று மெய்ப்பிக்கிறது. |