குளச்சல் துறைமுகத் திட்டம் கைவிடப்படுகிறதா? பழ.நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:07 |
இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக கிழக்கு முனையத்தை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டித் தர இந்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே அறிவித்துள்ளார். தில்லியில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியபின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் மொத்த ஏற்றுமதி - இறக்குமதியில் 75% இந்திய நிறுவனங்களினால் செய்யப்படுகின்றன. கிழக்கு-மேற்கு நாடுகளுக்கிடையே உள்ள வணிக கப்பல் போக்குவரத்து இந்துமாக்கடல் வழியேதான் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் அனைத்தும் இந்த கடல் மார்க்கத்தில் இருந்து தொலைவில் உள்ளன. எனவே, இந்தியாவின் இறக்குமதி-ஏற்றுமதி கொழும்பு துறைமுகத்தின் வழியேதான் செய்யப்படுகிறது.
எனவேதான், குமரி மாவட்டத்தில் உள்ள இயற்கைத் துறைமுகமான குளச்சல் துறைமுகம் இந்துமாக்கடல் கப்பல் மார்க்கத்தின் மிக அருகே அமைந்திருப்பதால் அங்கு சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதின் மூலம் நேரடியாகவே இந்தியா தனது ஏற்றுமதி-இறக்குமதிகளை கையாளமுடியும். ஆனால், இலங்கை அரசின் நிர்பந்தத்தின் காரணமாக கடந்த கால காங்கிரஸ் அரசு குளச்சல் துறைமுகத் திட்டத்தை கிடப்பில் போட்டது.
ஆனால், பிரதமர் மோடி அரசு குளச்சல் - இனயம் சரக்குப்பெட்டகத் துறைமுகத் திட்டம் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தார். ஆனால், இப்போது கொழும்புத் துறைமுகத்தை மற்றொரு சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கு இந்தியா ஒப்புக்கொண்டதற்குப் பின்னணி என்ன? இதன் விளைவாக குளச்சல்-இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்தை கைவிடப்போகிறதா? என்ற ஐயம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து இந்திய அரசு தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் |