மீண்டும் இந்தித் திணிப்பு - க. அனந்தகிருட்டிணன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:09

சமீபத்தல் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் 117 பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்தியாவில் வாழும் சரிபாதிக்கும் மேற்பட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது தனது வகுப்பு வாதத் தாக்குதலை மோடியின் பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கிறது.

1. சி.பி.எஸ்.சி. மற்றும் கேந்திர வித்யாலாய பள்ளிகளில் இனிப் பத்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்.

2. பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிலையங்களில் கூட இந்தி மூலம் பயிற்றுவிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

3. மத்திய அரசின் அறிவிப்புகள் (வேலைவாய்ப்பு, விமான நிலைய அறிவிப்புகள்) அரசு விளம்பரங்கள் இனி இந்தியில்தான் இருக்க வேண்டும்.

4. குடியரசத் தலைவர், பிரதமர், அமைச்சர் ஆகியோர் பாராளுமன்றத்தில் இந்தியில் தான் உரையாற்ற வேண்டும்.

5. பல்கலைக் கழக நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50% விகிதமான நிதியை 7 மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் இந்திப் புத்தகங்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற தேச ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமான பல்வேறு பரிந்துரைகளை மோடி அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. உலகில் நடந்த பல்வேறு கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்று சொல்கின்றன. இணைப்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்துவதையும் அவை ஊக்குவிக்கின்றன.

ஆனால் மோடி அரசு பதவியேற்றதிலிருந்தே பல்கலைக் கழகங்களுக்கு ராஜ்நாத் சிங்வெளியிட்ட சுற்றறிக்கை, இந்தியாவில் 55% சதவிகித பேருக்கு இந்தி தெரியும் என்று அவரே தூக்கிப்போட்ட குண்டு, தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தித் திணிப்பு செய்தது, அதற்கு எதிர்வினையாக இந்தி தார் பூசி அழிக்கப்பட்டதும், இந்தியை அழிப்பவர்கள் உங்கள் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளுங்கள் என்று பொன். ராதாகிருட்டிணன் காட்டமானது- இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. தரப்பு தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது.

நம்முடன் சமூக வலைதளங்களில் விவாதிக்கும் சில இணையதள ஆர்வக் கோளாறுகளும் கூட நம்மைத் தவிர இந்தியா முழுக்க இந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும் இந்தி படிக்காததால்தான் நாம் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டோம் என்றும் இந்தி படித்திருந்தால் பாலாறும் தேனாறும் ஓடியிருக்கும் என்றும் பிதற்றி வருகிறார்கள். இந்தி படித்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றால் இலட்சக்கணக்கான இந்தி பேசும் தொழிலாளர்கள் இங்கு வந்து கூலிக்கு மாரடிக்க வேண்டிய அவசியமென்ன?

இந்தியைத் தேசிய மொழி என்று கொக்கரிப்பவர்களுக்கு இந்தி ஆட்சி மொழி தீர்மானம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன. இதில் 7 மாநிலங்களில் மட்டும் தான் இந்தி பேசப்படுகிறது. எஞ்சிய 22 மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்களே. அந்த ஏழு மாநிலங்களில் கூடப் போஜ்புரி, பீகாரி, மராட்டி போன்ற துணை மொழிகளைப் பேசுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களும் கூட இந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று தென்னிந்தியர்கள் க்ககுஇ, இகுஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. டெக்ஸாஸிலும், நியூயார்க்கிலும் தமிழர்கள் மென்பொருள் துறையில் கொடிகட்டிப் பறக்க அவர்களின் ஆங்கிலப் புலமையும், மூன்றாவதாக ஒரு மொழியைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாததுமே காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம். அது போலவே கேரளக்காரர்கள் வெளியுறவுத் துறையிலும், ஏனைய மத்திய அரசுத் துறைகளிலும் கோலோச்சுவதற்கும் இந்தியை ஒரு காரணமாகக் கூறிவிட முடியாது. அமெரிக்காவில் மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா போன்ற தூர கிழக்கு நாடுகளிலும் சவுதி, எமிரேட் போன்ற வளைகுடா நாடுகளிலும் தென்னிந்தியர்கள் அதிக அளவு பொருள் ஈட்டுவதற்கும் கூட இந்தி எந்தவிதக் காரணமாய் இருந்து விட முடியாது. தென்னிந்தியாவில் எந்த அளவு வேலை வாய்ப்பின்மை நிலவுகிறதோ அதைவிடப் பல மடங்கு இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காரணத்திற்காகத்தான் வட இந்தியர்கள் சாரை சாரையாக இங்கு வேலை தேடி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தாய் மொழிக் கல்வியும், ஆங்கிலப் புலமையும் கொடுக்காததை இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி கொடுத்து விடும் என்று கணேசனும், ராஜா போன்றவர்களும் எப்படி நம்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

மேலும் 2% சதவிகிதமானவர்கள் வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்பதற்காக மூன்றாவதாக ஒரு மொழியைக் கட்டிக் கொண்டு அழுவதில் எந்தவித நியாயமுமில்லை. அடுத்து இவர்கள் கூறும் கட்டுக்கதை இந்தியா முழுக்க நம்மைத்தவிர அனைவரும் இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது. இந்தியா முழுக்க இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனில், இரயில்வே தேர்வெழுதப் பெங்களூரு வந்த இந்தி பேசும் மாணவர்கள் கன்னடர்களால் ஓட, ஓட இரயில்வே நிலையத்தில் அடிக்கப்பட்டதும், அஸ்ஸாம் அருணாச்சலம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் கூட இந்தி பேசுபவர்களைக் கூலிகள் என்று விரட்டுவதும், வட கிழக்கு மாநிலங்களில் இந்தித் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், பா.ஜ.க. ஆளும் மராட்டியத்தில் கூட அவர்களின் சகாக்களான சிவசேனாவும், நவநிர்மான் சேனாவும் இந்தி பேசுபவர்களைக் குறிவைத்துத் தாக்குவதும் ஏன் என்பதை நம்மூர்த் தேசியவாதிகளிடம் தான் கேட்க வேண்டும். ராஜ்நாத்சிங் வீட்டுப் பிள்ளைகளும், சுஷ்மாசுவராஜ் வீட்டுப் பிள்ளைகளும் ஏனைய இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். க்ககுஇ, இகுஇ ரெயில்வே போன்ற தேர்வுகளைத் தங்கள் தாய் மொழியில் எழுதும் வாய்ப்புக் கிடைக்கும்போது. தமிழர்களின் பிள்ளைகளும், ஏனைய இந்தி பேசாத மாநில மாணவர்களும் தங்களுக்குத் தொடர்பில்லாத ஆங்கிலத்திலோ, அல்லது இந்தியிலோ தான் மேற்கூறிய தேர்வுகளை எழுத வேண்டும் என்பது பாரபட்சமான நடைமுறையாகும்.

இந்தியா என்பது 22 தேசிய மொழிகளையும் பல்வேறு மத, இனங்களையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு இந்தி பேசுபவர்களைவிட இந்தி பேசாதவர்களின் மொத்த எண்ணிக்கைதான் அதிகம். தாய் மொழிக் கல்வியும், ஆங்கிலப் புலமையும் கொடுக்காத, எந்தக் கூடுதலான பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியையும் ஆட்சி மொழிக் கொள்கை கொடுத்துவிடப் போவதுமில்லை. உலகத்திற்கு ஒரு இணைப்பு மொழி, இநதியாவிற்கு ஒரு இணைப்பு மொழி, ஆசியாவிற்கு ஒரு இணைப்பு மொழி என்பதெல்லாம் சாத்தியமில்லை. இந்தியா முழுக்க நமது தாய் மொழியைத்தான் பேச வேண்டும் என்ற பேராசையை இந்தி பேசும் இந்திய ஆட்சியாளர்களுக்குத் தூண்டுவதைத் தாண்டி வேறெந்த உருப்படியான வளர்ச்சியையும் இந்த ஆட்சி மொழிக் கொள்கை கொடுத்துவிடப் போவதில்லை. உலகம் முழுக்க ஜெர்மானியம் ஆள வேண்டும் என்ற இட்லரின் இத்தகைய பேராசை தான் உலகப் போருக்கு வழி வகுத்தது. கிழக்குப் பாக்கிஸ்தான் மீதான உருது திணிப்புதான் வங்கதேசம் உருவாகக் காரணமாய் இருந்தது. இலங்கையில் சிறுபான்மையினர் மீதான சிங்களத் திணிப்புதான் உள்நாட்டு ஆயுதப் போருக்கு வழிவகுத்தது. இந்தியா முழுக்க இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற இந்தி பேசும் இந்திய ஆட்சியாளர்களின் பேராசை இந்தியாவை மொழிவாரியாகத் துண்டாடத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.