1. காவிரிப்படுகை உழவர்களின் வாழ்வை அழிக்காதே!
2002ஆம் ஆண்டிற்கு முன் தீர்ப்புகளை வழங்கிய நடுவர் மன்றங்களைத் தவிர காவிரி நடுவர் மன்றம் உட்பட அனைத்து நடுவர் மன்றங்களையும் கலைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதென இந்திய அரசு செய்துள்ள முடிவு காவிரிப் பாசன உழவர்களை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும்.
கடந்த 48 ஆண்டுக் காலமாக நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் போராடிப் பெற்ற உரிமைகளை இம்முடிவு அடியோடு இழக்கச் செய்யும். காவிரிப் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் இட்ட ஆணையைச் செல்லாததாக்கவே ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதற்கு மத்திய பா.ச.க. அரசு முற்படுவதை உடனடியாகக் கைவிடவேண்டும்.
காவிரிப் படுகைப் பகுதியில் மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதித்து, அதைப் பாழ்படுத்தும் திட்டத்தை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.
2. இந்தியைத் திணித்துத் தமிழர்களை இரண்டாந்தர குடிகள் ஆக்காதே!
பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது மத்திய அமைச்சரான ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரைகள் இந்தி பேசாத மக்களின் குறிப்பாக தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
இந்தி பேசாத மக்களின் நலனைக் காக்கும் வகையில் முந்திய பிரதமர்கள் நேரு, லால்பகதூர், இந்திராகாந்தி ஆகியோர் அளித்த வாக்குறுதிகளையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் முற்றிலுமாக மீறும் வகையில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் விரைவுபடுத்தப்படுகின்றன. பள்ளிக்கூடங்களில் தொடங்கி, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை எங்கும் எதிலும் இந்தி என நிலை நாட்டுவதற்கு பிரதமர் மோடியின் அரசு செய்கின்ற முயற்சிகள் இந்தி பேசாத பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகக் கண்டிப்பதுடன் ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளை அறவே கைவிடவேண்டும்.
3. தொன்மையான தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்காதே!
மதுரைக்கு அருகே கீழடியில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர்ப்புறத் தமிழர் நாகரிகத்தின் தடயங்களைக் கண்டறிந்து, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்த அகழ்வாராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மத்திய பா.ச.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அனைவரையுமே இடமாற்றம் செய்துவிட்டது.
இந்தியாவிலேயே தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என்பது மூடி மறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்திய அரசின் சதித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும். வைகை ஆற்றின் கரையோரம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர் நாகரிகத் தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருந்த மத்திய தொல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களைத் தமிழகத் தொல்லியல் ஆராய்ச்சித் துறைக்கு மாற்றும்படி மத்திய அரசை வற்புறுத்திப் பெற்று அவர் தலைமையில் தமிழக அரசே இந்தத் தொல்லாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் |