தமிழக உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் நதிகளுக்கான ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, தமிழர்களின் மொழி உரிமையை நசுக்கும் வகையில் இந்தியை எல்லா வகையிலும் திணிப்பது, தமிழர்களின் தொன்மையான வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் மதுரை-கீழடி அகழாய்வை முடக்குவது போன்ற தமிழர் விரோத மனப்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து மத்திய மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஒன்று கூடி கடந்த 31/05/2017 அன்று காலை 10:00 மணியளவில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் திருச்சி வில்லியம் சாலையில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய அரசுக்கு எதிரான அழுத்தமான தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
தமிழர்களின் உயிர்நாடியான காவிரிபாயும் திருச்சி மாநகரத்தின் பல பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்தை விளக்கி முன்பே பரப்புரை செய்யப்பட்டதால் மக்களின் ஆதரவு பெருமளவு கூடியது. போராட்ட நாளன்று நான்கு திசைகளிலும் இருந்து தமிழர் அமைப்பினர் வாகனங்களில் வந்து குவிந்தார்கள். தலைவர் பழ.நெடுமாறன் காலை 9:00 மணிக்கே போராட்டக்களத்திற்கு வந்து போராட்டத்தை நெறிப்படுத்தினார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி தங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவுசெய்ததால் திருச்சி மாநகர காவல்துறையினர் எல்லா வகையிலும் போராட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஐயாக்கண்ணு போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.
இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்த்தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டியக்கத் தலைவர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் தமிழ்நேயன், ஓவியர் வீரசந்தானம், தமிழ்த்தேசியக் குடியரசு இயக்கத் தலைவர் சிவ. காளிதாசன், தமிழர் முன்னணி தலைவர் செயப்பிரகாசு நாராயணன், இளந்தமிழகம் இயக்கத் தலைவர் வினோத் களிகை, காவிரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தோழர்கள், செந்தமிழ் வேந்தன் - உலகத் தமிழ்க் கழகம், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் செள. சுந்தரமூர்த்தி, க. இளங்கோவன், ஆழி. செந்தில்நாதன் ஆகியோரும்
தமிழர் தேசிய முன்னணியின் மாநில மற்றும் மாவட்ட நிருவாகிகளான. ம. பொன்னிறைவன், சி. முருகேசன், எம்.ஆர். மாணிக்கம், பிச்சைக்கணபதி, வெ.ந. கணேசன், ஜி. வீரப்பன், சி.சி. சாமி, பேரா. முரளிதரன், மரு. பாரதிசெல்வன், தி. பழநியாண்டி, பா. இறையெழிலன், ந.மு. தமிழ்மணி, சதா. முத்துக்கிருட்டிணன், கண். இளங்கோ, கா. தமிழ்வேங்கை, திருமுருகன். செ. செயப்பிரகாசு, செஞ்சி சாய்ரா, கோட்டை மு.க. கருணாநிதி, சாமி. கரிகாலன், எஸ்.பி. சோழராசன், அ. சந்திரன், இர. சிவப்பிரியன், புலவர் இரத்தினவேலன், ச. இராமன், ச. இலாரன்சு, நே. புவனேசுவரன், இர. அரங்கநாடன், கி. செந்தில்நாதன், வி. தட்சிணாமூர்த்தி, சு.வ. தமிழ் மாறன், அ.இரெ. பாலசுப்பிரமணியன், கி. பசுமலை, ரா. ராஜேஸ்கண்ணா, ஜான். கென்னடி உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
அமைதியாகவும், மிகவும் கட்டுப்பாடாகவும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் முற்றுகைப் போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பேரணியாக முழக்கமிட்டவாறு வந்து வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அங்கும் நீண்ட நேரம் போராட்டம் தொடர்ந்தது. பிறகு அனைவரும் காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றப்பட்டு திருச்சி- பீமன் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டார்கள்.போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்ய வாகனவசதி இல்லாததாலும் கைது கணக்கைக் குறைத்துக்காட்டும் காவல் துறையினரின் செயல்பாட்டையும் மீறி மண்டபத்திற்கே வந்து பலரும் கைதானார்கள்.
காவல் துறையினரால் தயாரிக்கப்பட்ட கைதானவர்கள் குறித்த விவரக்குறிப்பில் கைதானவர்களின் சாதி பற்றிய விவரமும் கேட்கப்பட்டிருந்ததால் சாதி என்ற இடத்தில் தமிழர் என்றே அனைவரும் பதிவிட்டு காவல்துறையினருக்கு தங்களின் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானதை எதிர்பார்க்காத காவல்துறையினர் அனைவருக்கும் உணவு வழங்க சிரமப்பட்டனர். நீண்ட நேரமாகியும் உணவு வழங்க தாமதமானதால் காவல் உயரதிகாரிகளை அழைத்து தலைவர் பழ.நெடுமாறன் பேசியதின் விளைவாக தாமதமாகவே உணவு வழங்கப்பட்டது.
போராட்டத்தில் கைதான அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதை உறுதி செய்தபிறகே மாலை 4:00 மணிக்கு மேல் தலைவர் நெடுமாறன் சாப்பிட்டார்.
தமிழர்களின் உணர்வுப் பூர்வமான ஒற்றுமையான முற்றுகைப் போராட்டத்தால் திருச்சி மாநகரம் திணறியது. திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்களின் உரிமை முழக்கம் ஓங்கி ஒலித்தது. ஒருவேளை உணவுகொடுக்கவே சிரமப்பட்ட காவல் துறையினர் கைதான அனைவரையும் அன்று மாலை 5: 30 மணியளவில் விடுவித்தனர் |