சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான அகில உலக ஆதரவு நாளாக ஜüன் 26ஐ ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து உளவியல் ரீதியாக தீர்வு பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் சித்ரவதைக்கெதிரான (சித்திரவதை, கொடுந்துன்பம், மனிதத் தன்மையற்ற செயல்கள், தரக்குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தல்) சர்வதேச உடன்படிக்கையில் 1997-இல் கையெழுத்திட்ட இந்தியா, இருபதாண்டுகள் ஆகியும் இன்று வரை அதை ஏற்புறுத்தி செய்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தவில்லை.
"அறிவுச் சமூகம் என்று சொல்லப்படுகிற நிகழ் காலத்தில் ஒருவர் இன்னொருவர் மீது உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ கடுமையான வலியோடு அல்லது கஷ்டத்தையோ உள்நோக்கத்தோடு ஏற்படுத்தும் வகையான திட்டமிட்ட கொடூரமான மனிதத்தன்மையற்ற முறையில் நடக்கும் செயல்களே சித்திரவதையாகும்' என்று இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினரான குழந்தைகள், பெண்கள், தலித்துகள், மத சிறுபான்மையினர், குறிப்பாக ஏழை எளிய விளிம்புநிலை மக்களே ஆவர். சித்திரவதைகள் குறித்து பொதுச் சமூகத்திற்கும் தெரிவதில்லை. சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் பயம் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பது, யாருடைய உதவியும் கிடைக்கப்பெறாமல் இருப்பது போன்ற காரணங்கள் சித்திரவதையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக அமைகின்றது. மேலும் சித்திரவதை குறித்தான தகவல் கிடைத்த பின்னும் அரசு அதில் தானாக தலையீடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முன்வராததும் சித்திரவதையே!!
இதனால் சித்திரவதைக்கென தனிச் சட்டம் இல்லாததால் சமூகத்தில் அதிகமாக சித்திரவதை சம்பவங்கள் மேலோங்கி வர காரணமாகிறது. இம்மாதிரியான தருணங்களில் தான் சித்திரவதைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வருவது இன்றியமையாதது என பல்வேறு தரப்பினர் இணைந்து அரசிற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகின்றது.
தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1203 காவல் மரணங்கள் நிகழ்கின்றன. இது தவிர சித்திரவதைத் தடுப்புத் தேசியத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுதோறும் சித்திரவதை தொடர்பாக 1.8 மில்லியன் வழக்குகள் பதிவாகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சித்திரவதை சம்பவங்கள் இழிவாக நடத்துதல், மனித தன்மையற்ற செயல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். ஆயிரக்கணக்கானோர் மனிதத் தன்மையற்ற முறையில் காவல் சித்திரவதையாலும் போலி மோதல் சம்பவங்களாலும் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இச்செயல்கள் அடிப்படை மனித உரிமைகளையும், மனித மாண்பையும் மீறுகின்ற போக்காகும்.
குறிப்பாக வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்களை விசாரணைக்கு இழுத்துச சென்று பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி, மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து, பலர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவங்களுக்கு காரணமான தமிழக-கர்நாடக காவல் துறையினருக்குதேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக, பதவி உயர்வும், விருதும், அன்பளிப்பும் அளித்த செயலை என்னவென்று சொல்வது!!!
தமிழகத்தில் இருந்து வறட்சி காரணமாக கூலி வேலைக்காக புலம் பெயர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்லும் தமிழகக் கூலித் தொழிலாளர்களை சட்டவிரோதமாகக் கடத்தி சித்திரவதை செய்து "செம்மரக்கடத்தல்' என்ற பெயரில் கொடூரமாக படுகொலை செய்யும் போக்கும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு மட்டும் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் மீன் குழம்பு கார்த்திக், மணலி காவல் நிலையத்தில் ÿகாந்த் பாலாஜி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருநங்கை தாரா, எழும்பூர் காவல் நிலைய எல்லையில் கண்ணகிநகர் மகேஷ், திருமங்கலம் காவல் நிலையத்தில் வடமாநில கூலித்தொழிலாளி, பள்ளிக்கரணையில் இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தினர் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டது: அனைத்து இயக்கத்தினர், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டது என தமிழகத் தலைநகரிலேயே காவல் சித்திரவதைகளும் படுகொலைகளும் இன்றளவும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
சனநாயக உரிமைக்காகப் போராடும் இயக்கம் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களை சித்திரவதை செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது திட்டமிட்ட செயலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உலகமே வியந்து பார்த்த அமைதியான முறையில் நடைபெற்ற சல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த பொது மக்கள் மீதும் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழகக் காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலையும் இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் போன்ற சித்திரவதையையும் பார்த்து உலகமே அதிர்ந்தது.
இந்திய அரசானது மக்களவையில் 2010ஆம் ஆண்டில் முந்திய காங்கிரஸ் ஆட்சியில் "சித்திரவதைத் தடுப்புச் சட்ட முன்வடிவை'' அறிமுகப்படுத்தி மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மாநிலங்களவை அதை தேர்வுநிலைக் குழுவிற்கு அனுப்பி பரிந்துரைகளை முன்வைத்த நிலையிலும் இச்சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. குறிப்பாக இந்தியாவில் "பாதிக்கப்பட்டோரையும் சாட்சி அளிப்போரையும் பாதுகாக்கும் சட்டம்'' இதுவரை இயற்றப்படவில்லை. மேலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அல்லது மறுவாழ்வு அளிப்பதற்கான நெறிமுறைகள் / வழிகாட்டுதல்கள் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 4, 2017 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலகளாவிய காலமறை மீளாய்வு (க்ணடிதிஞுணூண்ச்டூ கஞுணூடிணிஞீடிஞிச்டூ கீஞுதிடிஞுதீ) கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் இந்தியாவில் மனித உரிமை நிலை குறித்த பல்வேறு கேள்விகளை, விமர்சனங்களை, ஆலோசனைகளை, கருத்துகளை முன்வைத்தன. குறிப்பாக 41 நாடுகள் இந்தியாவிடம் ஐ.நாவின் சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையை ஏற்புறுதி செய்யாமை, சித்திரவதைக்கெதிரான உள்நாட்டுச் சட்டம் இயற்றாமை, ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான சிறப்புப் பிரதிநிதி இந்தியா வருவதற்கு அனுமதி அளிக்காமை குறித்த கேள்விகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தனர். இதற்குப் பதிலளித்த இந்தியா தற்போது இதற்கான செயற்பாடுகள் சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று கூறியது.
மேலும் உலகளாவிய காலமுறை மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியா மீது பிற நாடுகள் முன்வைத்த 250 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வருகிற செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 36வது கூட்டத் தொடரில் இவை எல்லாவற்றுக்கும் இந்திய அரசு பதிலளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
இந்நிலையில் நடுவண் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சித்திரவதைக்கெதிராகக் குரல் கொடுக்க தமிழக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டாக ஒன்றிணைந்து போராடும் நோக்கில் "சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்'' என்ற அமைப்பானது 10-6-2017 அன்று உருவாக்கப்பட்டது. சித்திரவதைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் "ஐ.நா.வின் சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான அகில உலக ஆதரவு நாள் ஜüன் 26ஐ'' முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கு மாநில அளவிலான இந்த பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தின் வாயிலாக முன்வைக்கிறது.
கோரிக்கைகள்:
1. கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளுக்கு எதிரான ஐ.நா.வின் அகில உலக உடன்படிக்கையில் இந்திய அரசு 1997இல் கையெழுத்திட்ட பின்னர் அதை முழுமையாக நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்புறுதி செய்யும் முறையில் இன்னும் கையொப்பம் இடாமல் உள்ளது. எனவே உடனடியாக ஏற்புறுதி செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளுக்கு எதிரான ஐ.நா.வின் விருப்ப உடன்படிக்கையில்(Optional Protocol) இந்திய அரசு உடனடியாக ஏற்புறுதி செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. ஐ.நா.வின் அறிவுறுத்தலின் படி கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளை முற்றிலும் ஒழிப்பதற்கான உள்நாட்டுச் சட்டத்தை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.வின் அகில உலக உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நடுவண் அரசு இயற்ற வேண்டும்.
4. ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான சிறப்புப் பிரதிநிதி இந்தியா வருவதற்கு நடுவண் அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். |