கடந்த சூன் 26ஆம் தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப், இசுரேலிய தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தலைமையமைச்சர் மோடி நடத்திய பேச்சு வார்த்தைகளின்போது சர்வதேச பயங்கரவாதப் பிரச்சினை முக்கிய இடம் பெற்றது.
சூலை 7ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் தலைமையமைச்சர் மோடி பேசும் போது "சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரானக் குரல் பலவீனமாக இருப்பது கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு உலக நாடுகள் கூடுதல் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்'' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுப்பதற்காக 11 அம்ச செயல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
ஜி-20 நாடுகளுக்கிடையே பயங்கரவாதிகளின் பட்டியலைப் பகிர்ந்துகொள்வது, பயங்கரவாதிகளை நாடு கடத்துவது போன்ற சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும், ஆயுதங்களும் சென்றடைவதைத் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் மேற்கண்டத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தலைமையமைச்சர் மோடி அவர்கள் வகுத்துள்ள இந்தக் கொள்கையை இந்திய வெளிநாட்டுத்துறை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடிக்கிறது.
அண்மையில் பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதுவர் ஒய்.கே. சின்கா என்பவர் பிரிட்டிசு அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஹிஜ்புல் முகாஜிதின் அமைப்பின் தளபதியான பர்கன் வாணி என்பவர் காஷ்மீரில் இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். அவரது முதலாண்டு நினைவுநாள் இலண்டனில் பர்மிங்காம் என்னுமிடத்தில் அவரது ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியத் தூதுவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை பிரிட்டிசு அரசு ஊக்குவிப்பது தவறானது என்றும் கண்டித்துள்ளார்.
பாகிஸ்தானின் தூண்டுதலுடன் பயங்கரவாதிகள் காஷ்மீரிலும் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்திவருவதை மனதில் கொண்டு தலைமையமைச்சர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்விக்குரிய விடையைக் காண்பதற்கு ஐ.நா. பேரவை இன்னும் முயற்சி செய்து வருகிறது. அதற்கான திட்டவட்டமான விளக்கம் எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின்ஒ டுக்குமுறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, அதே நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனம் போராடுகிறது. ஆனால், பெரும்பான்மை தேசிய இனம் அப்போராட்டத்தைப் பயங்கரவாதம் என கூறி அதை அடக்குவதற்கு முயற்சி செய்கிறது.
சர்வதேசப் பயங்கரவாதம் குறித்து மிகுந்த கவலைப்படும் மோடி அவர்கள் உள்நாட்டில் நிலவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அக்கறை கொள்ளவில்லை. பா.ச.க. ஆளும் மாநிலங்களில் மதத்தின் பெயரால் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக முசுலிம்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கு எதிராக இந்துத்துவா பயங்கரவாதம் ஏவிவிடப்பட்டுள்ளது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாட்டிறைச்சி உண்பதும், மாடுகளை விவசாயிகள் அல்லாதாருக்கு விற்பதும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக முசுலிம்களில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்த மாடுகளின் தோலை உரித்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
முசுலிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்ல, மாறாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், மலை வாழ் மக்கள் ஆகியோர் மாட்டிறைச்சி உண்பவர்களே. பசுவின் காவலர்கள் என தங்களைத் தாங்களே கூறிக்கொள்பவர்கள் இவர்களுக்கெதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். காவல் துறை இதை வேடிக்கைப் பார்க்கிறது.
பா.ச.க. ஆட்சிபுரியும் இராசஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் அருகே அரசு சார்பில் இயங்கிவரும் பசுக்கள் காப்பகத்தில் 500க்கும் மேற்பட்ட பசுக்கள் கடந்த ஆண்டு போதுமான தீவனம் கிடைக்காமல் இறந்துள்ளன.
அதேபோல பா.ச.க.வின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியின் மாநகராட்சியில் மூன்று பசு பாதுகாப்பகங்கள் உள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டில் அவற்றில் வைக்கப்பட்டிருந்த 49,000ம் மாடுகளில் 46,000ம் மாடுகள் இறந்துள்ளன. இவற்றிற்குக் காரணமானவர் மீது பா.ச.க. ஆட்சிகள் எடுத்த நடவடிக்கை என்ன?
பசுக்கள் பிரச்சனை மட்டுமல்ல, சகல பிரச்சனைகளிலும் சிறிதளவு கூட சகிப்புத்தன்மை இல்லாமல் பா.ச.க.வினர் நடந்துகொள்கிறார்கள். பாரத் மாதாகி ஜே என்ற முழங்காதவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என மராட்டிய மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறியுள்ளார். அது அவருடைய சொந்த கருத்து என்று கூறி மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மழுப்புகிறார்.
கல்வித் துறையிலும் இந்துத்துவா தனது ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது. அண்மையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு கூட்டம் நடத்தியுள்ளது. மாநிலக் கல்வி அமைச்சரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா விடுதலைப் பெற்று 70 ஆண்டு காலமாகிறது. ஆனால், இன்று சட்டம் ஒழுங்கு என்பது மேம்படுவதற்குப் பதில் நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. ச
னநாயக உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு மீறப்படுகின்றன. இதன் விளைவாக ஃபாசிச சர்வதிகாரச் சாயல் நாடெங்கும் பரவிவருகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து மத பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குப் பதில் மென்மையான அணுகுமுறையை மோடி கையாளுகிறார்.
காந்தியடிகள் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மோடி "பசு பக்தி என்ற பெயரால் யாரையும் கொலை செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது'' என்று மட்டும் கூறியிருக்கிறாரே தவிர குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 28 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 24 பேர் முசுலிம்கள். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற படுகொலைகள் தாக்குதல்கள் ஆகியவை குறித்து எதுவும் பேச அவர் முன்வராதது எதிர்பார்த்ததே ஆயினும் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மட்டும் அல்ல. பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் சமூக விரோத சக்திகள், குறிப்பிட்ட சமயப் பிரிவினரையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தாக்கவும், கொலை செய்யவும் முற்படுவதோடு அவர்களை அச்சுறுத்தி இரண்டாந்தர குடிமக்களாக்க முனைகிறார்கள் என்பது மிக முக்கியமானதாகும். மதச்சார்பின்மையில் நம்பிக்கைக்கொண்டவர்களும், சனநாயக முற்போக்கு எண்ணம் படைத்தவர்களும் கரம் கோர்த்து நின்று ஃபாசிச வன்முறை வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும். |