1983ஆம் ஆண்டில் இலங்கையில் கருப்பு சூலையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் சூழ்ந்த நேரத்தில் ஓவியர் வீர. சந்தானம் என்னுடன் அறிமுகமானார். ஈழத் தமிழர் படுகொலை குறித்து அவர் தீட்டிய உயிரோவியங்கள் அடங்கிய கண்காட்சித் திறப்பு நிகழ்ச்சியில் பங்குபெறுமாறு அழைத்திருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் கண்டோரைக் கண் கலங்க வைத்தன.
தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியராகத் திகழ்ந்த தனபால் அவர்களிடம் பயின்றவர் வீர.சந்தானம். ஓவியக் கலையில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் போலவே தமிழ்த் தேசியம், பெரியாரியம் ஆகியவற்றிலும் அவருக்கு அளவற்ற பற்று இருந்தது. மார்க்சியத் தோழர்களோடும் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமுதாயத் தொண்டர் ஆகிய பல்வேறு பரிமாணங்களில் தமிழர்களுக்குத் தொண்டாற்றினார்.
நமது கோயில்களில் உள்ள சுவரோவியங்கள், மரபார்ந்த வண்ணங்கள் ஆகியவற்றின் தாக்கம் அவரது ஓவியங்களில் நிறையவே உண்டு. அவரது ஓவியங்களில் தோல்பாவைக் கூத்திற்கு தனி இடம் இருப்பதைக் காணலாம். மறைந்துகொண்டிருந்த அக்கூத்திற்கு மீண்டும் புத்துயிர்ப்பைக் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு.
தமிழ்நாட்டிற்கேயுரிய கைத்தறியின் வடிவமைப்பை மேம்படுத்துவதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். நமது பண்பாட்டு அடையாளங்களைக் கைத்தறி நெசவில் பொறிப்பதில் அவருடைய பங்கு முக்கியமானதாகும்.
கடந்த 34 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ்த் தேசியப் போராளியாக அவர் தமிழகத்தில் வலம் வந்தார். எந்தக் கட்சியின் மேடையாக இருந்தாலும் அதைப் பற்றிய கவலை அவருக்கில்லை. அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் மேடையில் ஏறி தான் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லாமல் விட்டதில்லை. அனைத்துக்கட்சித் தலைவர்களும் அவரை மதித்த காரணத்தினால் அவரைத் தடுத்ததில்லை.
தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியராகத் திகழ்ந்த அவர் காட்சிக்கு எளியவர். இன்சொல்லும், உயரிய பண்பாடும் அவருடன் பிறந்தவை.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடும், விடுதலைப் புலிகள் தளபதிகள் பலரோடும் நெருங்கிய நட்புறவாடி அவர்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக இறுதிவரை திகழ்ந்தார்.
தமிழீழ விடுதலையே உலகத் தமிழரின் விடிவிற்கான வழி என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். மற்றவர்களுக்கும் உணர்த்தினார். புலிகளின் வீரமிகுந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீர. சந்தானத்திற்கும் அவரது தூரிகைக்கும் முக்கிய இடமுண்டு.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளார். குடியரசுத் தலைவரின் விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருந்த போதிலும் அவருடைய ஓவியத் தொண்டிற்கு சிகரம் போன்ற தொண்டு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடிவமைத்ததாகும்.
2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போரில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைபதைக்கப் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும், அவர்களுக்காக தமிழகத்திலும் பிறநாடுகளிலும் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த போராளிகளின் உருவங்களையும் என்றும் அழியாத ஓவியங்களாகக் கற்பாறைகளில் அவர் தீட்டினார். அவற்றைச் சிற்பங்களாகச் சிற்பிகள் செதுக்கினார்கள். வெயில், மழை எதையும் சட்டை செய்யாது கருமமே கண்ணாக இருந்து அவர் ஆற்றிய பணி என்றென்றும் மறக்க முடியாததாகும்.
தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான வீர. சந்தானம் அவர்கள் தாமாகவே முன்வந்து இந்தப் பணியை மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாகக் காரணமாக இருந்தார் என்பதை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
இன்றைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அந்த உயிரோட்டமுள்ள சிற்பங்களுக்கு முன்னால் கண்ணீர் வடிக்கத் தவறியதில்லை. சொல்லாலும், செயலாலும் தனது படைப்பு ஆற்றலாலும் தமிழினத்திற்காக இறுதிவரை போராடிய பெருமகன் அவர். கடந்த ஈராண்டுகளுக்கு முன்னால் அவர் கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தபோது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் உயிர்பிழைத்தார். ஆனால், இம்முறை எதிர்பாராத முறையில் அவர் திடீரென மறைந்தார். நம் நடுவில் அவர் இன்று இல்லாவிட்டாலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உள்ளவரை அவரது நினைவு தமிழர்களின் உள்ளங்களில் அழியாது இடம் பெறும், நிலைத்து நிற்கும்.
- பழ. நெடுமாறன் |