தமிழ்த் தேசியப் போராளி பரந்தாமன் திடீர் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:38

50 ஆண்டு காலமாக வானில் பறக்கும் பறவையின் நிழல் நிலத்தில் படிந்து மேடு, பள்ளங்களிலும் தொடர்வதைப்போல அடக்கு முறைகளிலும், சிறைவாசங்களிலும் இடை விடாது என்னைப் பின்தொடர்ந்த அருமைத் தோழர் கா. பரந்தாமன் திடீரென கடந்த 29-6-2017 அன்று மறைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.

பெருந்தலைவர் காமராசரின் தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரசில் மானாமதுரை பொறுப்பாளராக இருந்த காலம் முதல் அவர் மறையும் காலம் வரை என்றும் வற்றாது ஊற்றெடுக்கும் அன்போடு நட்புறவு கொண்டிருந்தார்.

1979ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகுவது என நான் முடிவு செய்தபோது தோள் கொடுத்து துணை நின்றார். தமிழ்த் தேசியப் பாதையில் கரங்கோர்த்து நடந்தோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் நாட்டு மக்களை அணி திரட்டுவதில் அவர் வகித்த பங்கு மறக்க முடியாததாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடும் தமிழகத்திலிருந்த விடுதலைப் புலிகளோடும் நெருங்கிப் பழகி அவர்களுக்குப் பல வகையிலும் உதவிய பெருந்தகையர்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் புகுந்து விடுதலைப் புலிகளை வேட்டையாடி அவர்களின் ஆயுதங்களைப் பறித்தெடுக்க முயன்றபோது, அந்த ஆயுதங்களை தமிழகத்தில் மறைத்து வைத்துப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நாங்கள் ஏற்க வேண்டியிருந்தது. தோழர் கா. பரந்தாமன் அவர்களை அழைத்து இந்த விவரத்தைக் கூறியபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆயுதங்களை, தமிழர் தேசிய இயக்கத் தோழர்களின் வீடுகளில் மறைத்து வைத்துப் பாதுகாத்ததில் அவரது பங்கு பெரும் பங்கு ஆகும். பிற்காலத்தில் அந்த ஆயுதங்களை மறுபடியும் புலிகளிடம் ஒப்படைத்து அவர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற உதவிய பெருமை அவருக்கும் நம்முடைய தோழர்களுக்கும் உண்டு.

அவருடைய மகள் திருமணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோர் வேலுப்பிள்ளை-பார்வதி அம்மாள் ஆகியோர் கலந்துகொண்ட போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்று தனது அயராத தொண்டின் மூலம் மாநில மூத்த பொதுச்செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தவர் அவர். தமிழகம் எங்கும் உள்ள இயக்க நிருவாகிகள், தோழர்கள் அத்தனை பேருடனும் நெருங்கிப் பழகி தனது அன்பால் அனைவரையும் பிணைத்தவர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகி அவரது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்தார்.
தமிழகம் எங்கும் அவரது கால் தடம் படியாத ஊர்களோ அல்லது அவர் ஏறிப்பேசாத மேடைகளோ கிடையாது. தனது பேச்சாற்றலால் மக்களை ஈர்த்தவர். தமிழ்த் தேசியத்தைப் பரப்புவதையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதையும் தனது உயிர் நோக்கங்களாகக் கொண்டிருந்தார். அதற்காக அடக்குமுறைகளைச் சந்திக்கவும் அவர் தயங்கியதில்லை.

கொடிய பொடாச் சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட போது உடனடியாகச் சென்னைக்கு வந்து கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பை ஏற்குமாறு அவரிடம் கூறினேன். அவ்வாறே சென்னைக்கு வந்து பொறுப்பேற்று அன்றே செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் "விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக தலைவர் நெடுமாறன் அவர்களைப் பொடாச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். எந்த கொடிய சட்டத்தைக் கண்டும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம்'' என நெஞ்சம் நிமிர்ந்து அவர் அறைகூவல் விடுத்தார். ஆத்திரமடைந்த அரசு அவர் மீதும் பொடாச் சட்டத்தை ஏவியது.

18 மாதங்களுக்கு மேலாக சிறையில் எங்களை அரசு வாட்டி வதைத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கிணங்க நானும் மற்ற தோழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பொடா மறு ஆய்வுக்குழு எங்கள் மீது பொடாச் சட்டத்தை ஏவியதே தவறு என 15-4-2005இல் தீர்ப்பு கூறியது. அதற்கிணங்க எங்கள் மீது சுமத்தப்பட்ட பொடாக் குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பரந்தாமன் மட்டும் விடுதலையாகவில்லை. பொடாக் கைதியாக அவர் சென்னைச் சிறையில் இருந்த போது மானாமதுரையில் அவருடைய கோழிப்பண்ணையில் ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்படவில்லை. சில மாதங்கள் கழித்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குண்டு வெடிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது போடப்பட்ட வழக்கு ஏறத்தாழ 13 ஆண்டுகாலமாக நடைபெற்று இறுதியாக அதாவது 28-12-2015இல் பொய் வழக்கு என நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர் பொடாக் கைதியாக சிறையில் இருந்த போது அவருடைய குடும்பத்தினரையும் குறிப்பாக அவருடைய மகனையும் காவல் துறை படாத பாடுபடுத்தியது. அத்தனை கொடுமைகளையும் அவரும் அவருடைய குடும்பமும் கொஞ்சமும் கலங்காமல் ஏற்று இலட்சிய உறுதியோடு செயல்பட்டனர்.

தமிழ்த் தேசியப் போராளியாக மட்டுமல்ல சிறந்த பகுத்தறிவாளராகவும் அவர் இறுதிவரை திகழ்ந்தார். அவருடைய குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் மூடநம்பிக்கைகளுக்கு அவர் இடமளித்ததில்லை. தன்னுடைய பிள்ளைகளுக்கு மிக எளிமையான முறையில் தமிழ்த் திருமணங்களை நடத்தினார். சொல்லாலும் செயலாலும் சாதி வேறுபாடுகளை அறவே களைந்த உண்மைத் தமிழனாகத் திகழ்ந்தார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று எனது சுமையைக் குறைப்பார் என பெரிதும் நம்பியிருந்தேன். ஆனால், அவரது சுமையையும் என்மீது ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இயக்கப் பிரச்சினைகள் ஆகட்டும், அவருடைய குடும்பப் பிரச்சினைகள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லாமல் எனது கருத்தைக் கேட்காமல் எதுவும் செய்ததில்லை. ஆனால், முதல் தடவையாகவும் இறுதித் தடவையாகவும் என்னிடம் எதுவும் சொல்லாமலேயே மறைந்து விட்டார். யாருக்கும் ஆறுதல் கூற முடியாமலும் ஆறுதல் பெற முடியாமலும் தனித்துத் தவிக்கிறேன்.

- பழ. நெடுமாறன்

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.