மருதுபாண்டியர் மூட்டிய தென்னாட்டுப் புரட்சி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:50

இந்தியத் துணைக்கண்டத்தில் வணிகம் செய்து பிழைக்க வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் இந்நாட்டையே அடிமைப்படுத்தியது துயரமிக்க ஒரு வரலாறாகும். ஆங்கிலேயரின் படை வலிமைக்கு அஞ்சி இந்தியா முழுவதிலுமிருந்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் அடங்கி ஒடுங்கி இருந்த காலக்கட்டத்தில் - 1800-1801  ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக மூண்டெழுந்த "தென்னாட்டுப் புரட்சி' வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

வீரமும் தீரமும் நிறைந்த இந்த தென்னாட்டுப் புரட்சியின் நாயகர்களாக மருது பாண்டியர்கள் திகழ்ந்தார்கள். இவர்களின் வரலாறு வியக்கத்தக்க ஒன்றாகும்.

1772ஆம் ஆண்டில் எதிர்பாராத வகையில் சிவகங்கை சீமை மீது கர்நாடக நவாபின் படைகளும், ஆங்கிலப் படைகளும் படையெடுத்துக் கைப்பற்றின. மன்னரான முத்து  வடுகநாத தேவர் தனது குடும்பத்துடன் தப்பி வெளியேறினார். ஆனால், அவரின் தளபதிகளான மருது பாண்டியர்கள் திட்டமிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களைச்  சேர்ந்த குறுநில மன்னர்களை ஒன்றிணைத்தனர்.

ஏற்கனவே இராமநாதபுரம் மன்னரான முத்துராமலிங்க சேதுபதியை ஆங்கிலப் படையினர் கைது செய்து திருச்சிச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். ஆனால்,  அவர்களுடைய தளபதிகளான மேலப்பன், சிங்கம்செட்டி, முத்துக்கருப்பத் தேவர் மற்றும் தஞ்சையைச் சேர்ந்த ஞானமுத்து ஆகியோருடன் மருதுபாண்டியர்கள் தொடர்பு  கொண்டனர்.

திருச்சிச் சிறையில் இருந்த சேதுபதி மன்னருடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு தங்கள் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றனர். சிறையை உடைத்து அவரை மீட்கவும்  மருது பாண்டியர்கள் செய்த முயற்சி துரோகிகளால் வெற்றிபெறவில்லை. 1799ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மைசூர் மன்னரான திப்பு சுல்தானுடன் போரிடுவதற்காக தென் மாவட்டங்களிலிருந்த ஆங்கிலேயப் படைகள் திரும்பப்பெறப் பெற்றன.  இந்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு மருது பாண்டியர்கள் சிவகங்கைச் சீமையை மீட்டார்கள். பாஞ்சாலங் குறிச்சி மன்னனான வீரபாண்டியக் கட்டபொம்மனுடன் மருது பாண்டியர் தொடர்பு கொண்டு நெல்லைச் சீமையில் இருந்த சிவகிரி பாளையக்காரர் மற்றும்  சிலரை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் கோபால் நாயக்கர், மணப்பாறை இலட்சுமி நாயக்கர், மங்கலம் யாதுல் நாயக்கர், தேவதானப்பட்டி பூசாரி நாயக்கர் மற்றும் தாராபுரம், காங்கேயம், சங்ககிரி, கரூர்,  கன்னிவாடி, இரத்தினகிரி, நத்தம் போன்றவற்றின் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்து மருதுபாண்டியர்களுடன் இணைந்தனர். மருது பாண்டியர்களின் தூதராக இலட்சுமி நாயக்கர், ÿரங்கப் பட்டினம் சென்று திப்பு சுல்தானைச் சந்தித்துப் பேசினார். இதன் விளைவாக 1799ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி  திப்பு சுல்தானின் சார்பில் நான்கு தூதர்கள் திண்டுக்கல் வந்து புரட்சிப் பாளையக்காரர்களைச் சந்தித்து பரிசுகளை வழங்கினர். மதுரைக்கும், திருச்சிக்கும் நடுவில்  அமைந்திருந்த கள்ளர் நாட்டுத் தலைவர்களும் இந்த இணைப்புடன் சேர முன்வந்தனர். ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்ட மருது பாண்டியர் மேற்கொண்ட முயற்சிக்கு திப்பு சுல்தான் முழுமையாக ஆதரவளித்தார். இவர்களுக்கு உதவுவதற்காக  மைசூரின் தெற்கு எல்லையில் தனது படையை நிறுத்தி வைத்தார்.

மலபார் மாவட்ட இளவரசரான கேரள வர்மாவுடனும் மருது பாண்டியர்களின் தூதர்கள் தொடர்பு கொண்டனர். அவரும் இந்த அணியில் இணைந்தார். குடகு மன்னர் இந்த அணி குறித்துக் கேள்விப்பட்டு தாமாகவே ஆதரவு தர முன்வந்தார். அவருடைய முயற்சியினால், பரப்பநாடு, கரமக்கோட்டை ஆகியவற்றின் குறுநில  மன்னர்களும் இணைந்துகொள்ள முன்வந்தனர்.

ஒட்டுமொத்தத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மருதுபாண்டியர்கள் மேற்கொண்ட தென்னாட்டுக் கூட்டணி வெற்றிகரமாக உருவானது.

பிரஞ்சுப் புரட்சி

இந்த வேளையில் பிரான்சில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. இப்புரட்சியின் விளைவாக நெப்போலியன் ஆட்சியைக்  கைப்பற்றினார். தென்னாட்டுப் புரட்சிக்காரர்களுக்கு பிரஞ்சுப் புரட்சி புதிய உத்வேகம் அளித்தது. திப்பு சுல்தான் நெப்போலியனுடன் தொடர்பு கொண்டார். அவர்களுக்கு உதவ அவரும்  முன்வந்தார்.

தென்னாட்டில் உள்ள புரட்சிக்காரர்களுக்கு உதவவேண்டுமானால் எகிப்தைக் கைப்பற்றி அங்கு தனது படையினை கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என நெப்போலியன்  திட்டமிட்டு அவ்வாறே எகிப்தைக் கைப்பற்றினார். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்டியடிப்பதற்கு 15 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையை அனுப்பிவைக்க  வேண்டும் என நெப்போலியன் திட்டமிட்டார்.

1798ஆம் ஆண்டில் நெப்போலியன் தூதர்கள் தமிழ் நாட்டில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, இராமகிரி ஆகிய ஊர்களுக்கு வந்து தென்னாட்டுப்புரட்சித்த லைவர்களைச் சந்தித்துப்  பேசினார்கள். ஆனால், எதிர்பாராத சில நிகழ்வுகள் தென்னாட்டுப் புரட்சியின் வெற்றியைத் தடுத்து நிறுத்திவிட்டன. ஆங்கிலேயக் கடற்படைத் தளபதி நெல்சன் நெப்போலியனின்  படைகளைத் தோற்கடித்து நெப்போலியனைச் சிறைப்பிடித்தார்.

மைசூரைச் சுற்றி வளைத்து ஆங்கிலேயப் படை நடத்திய போரில் திப்பு சுல்தான் போர்க்களத்திலேயே மாண்டார்.  நெல்லைச் சீமை தளபதியான வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆங்கிலேயப் படைகளால் சூழப்பட்டபோது அதிலிருந்து தப்பி புதுக்கோட்டை காடுகள் வழியாக சிவகங்கை  செல்லும் வழியில் புதுக்கோட்டை மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். திண்டுக்கல் கோபால் நாயக்கரும் ஆங்கிலேயப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு அவரும் வீரமரணத்தைத் தழுவினார். 

எதிர்பாராமல் நேர்ந்த இந் நிகழ்ச்சிகளால் மருதுபாண்டியர்கள் கொஞ்சமும் மனம் தளரவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து இறுதிவரை போராடினார்கள். இறுதியில் அவர்களையும் சிறைப்பிடித்து ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். ஆனாலும் மருதுபாண்டியர்கள் தென்னாட்டு மன்னர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயருக்கு  எதிராக நடத்திய அந்தப் புரட்சிதான் இந்தியத் துணைக்கண்டத்தின் முதலாவது விடுதலைப் புரட்சியாகும்.

(12-06-17 அன்று திருச்சியில் தமிழ்த் தேசிய வீரசங்கம் நடத்திய வரலாற்றுப்புரட்சி விழாவில் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை)

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.