தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியிட்ட "உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்' நூல் வெளியீட்டு விழா. 06--08--2017 - ஞாயிறு அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் தலைமையேற்றார். பேரா. கல்விமணி அவர்கள் நூலை வெளியிட்டார். திருவாளர்கள் என். சந்திரசேகரன், பெ. மணியரசன், எம்.வி.கே. நிசாமுதீன், வழக்கறிஞர் ச. செளந்திரபாண்டியன், மரு.அ. தாயப்பன் ஆகியோர் உரையாற்றினர். மொழி பெயர்த்த திருவாட்டி தமித்தலட்சுமி ஏற்புரையாற்றினார். திரு. பழ. நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு. பா. இறையெழிலன் நன்றி நவின்றார்.
நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் உரையில், "நீதியை நிலை நாட்டுவதற்காக பழ. நெடுமாறன் தொடுத்த வழக்குகள்தான் இவை. அவர் தொடுத்த அனைத்து வழக்குகளிலும் ஒரு வழக்கில்கூட அவர் தோற்கவில்லை. அரசியல் சட்டத்தை மதிக்காமல், அரசு செயற்பட்டதால் தொடுக்கப்பட்ட வழக்குகள் இவைகளாகும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறி அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக சட்ட ஆதாரங்களை முன் வைத்து வாதாடி வெற்றிபெற்ற வழக்குகளே நெடுமாறன் தொடுத்த வழக்குகளாகும்.
அவர் தொடுத்த வழக்குகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றிருந்தாலும் இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், காலவிரையம், பணச் செலவு இவையெல்லாம் மீறி மன உளைச்சல் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் அவர் செயல்பட்டார். அரசு அதிகாரிகள் எடுத்த தவறான முடிவுகள் மக்களை எந்தளவு பாதிக்கின்றன என்பதற்கு நெடுமாறன் ஒருவரே சிறந்த சான்றாவார்.
பல வழக்குகள் மாநாடு, கூட்டங்கள் நடத்த அனுமதி மறுப்பு தொடர்புடையவை. அத்தனை வழக்குகளிலும் பல இன்னல்களுக்கு இடையே அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் மக்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் அக்கறையெடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினைகளை அணுகியிருக்கிறார் என்பதே உண்மை. மாநாடுகள் நடத்தவும் அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தேர்தல் கூட்டங்களில் பேசவும் தொடுத்த வழக்குகள், தீர்ப்புகள், தடா, பொடா வழக்குகளில் பிணையை
மறுத்ததை எதிர்த்து நடத்திய வழக்கு, தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கு, கருணை மனுக்களின் நடைமுறைகளை மாற்றிய வழக்கு, மரண தண்டனை ஒழிப்புப் பரப்புரை இயக்கத் தடையைத் தகர்த்த தீர்ப்பு, இராசிவ் கொலையில் தூக்குத் தண்டனைக் கைதிகளை விடுவித்த தீர்ப்பு, ஈழத்தமிழ் அகதிகளைக் கட்டாயமாக வெளியேற்றத்தடை வாங்கிய வழக்கு. இவ்வாறாக மக்களின் நலன்கருதி தொடரப்பட்ட வழக்குகளே அனைத்தும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என்று பேசினார்.
வழக்கறிஞர் திருமதி தமித்தலட்சுமி
நூலை மொழியாக்கம் செய்த திருமதி தமித்தலட்சுமி அவர்கள், "புத்தகம் ஒரு புதையல் மாதிரி. படிக்கப்படிக்க அறிவு வளரும். அய்யாவிற்கு நானும் ஒரு மகளே. இந்த நூலை என் அறிவுக்கெட்டிய வகையில் மொழி பெயர்த்துள்ளேன். இந்த நூலை மொழி பெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்று கூறினார்.
பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
"நான் தொடுத்த வழக்குகள் ஒன்றில்கூட தோற்றதில்லை என நீதிநாயகம் சந்துரு அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். உண்மையில் அதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும். அவர் அந்த வழக்குகளை ஏற்று நடத்தியிருக்காவிட்டால் நல்ல தீர்ப்புகள் கிடைத்திருக்காது. அதற்காக அவருக்கு மனித உரிமைப் போராளிகள் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
1997ஆம் ஆண்டு மதுரையில் தமிழர் எச்சரிக்கை மாநாடு என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாநாட்டினை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடத்தினோம். அம்மாநாட்டிற்கு தமிழக அரசு தடைவிதித்தது. மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் இந்த வழக்கில் வாதாடி தடையைத் தகர்த்துத் தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார். அவ்வாறு அவர் செய்திருக்காவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் எதுவுமே தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்க முடியாது. அத்தனையையும் தமிழக அரசு தடை செய்திருக்கும்.
19-7-2002 அன்று உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாட்டினை நாங்கள் நடத்தத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரும், தமிழகம் எங்கிலுமிருந்து தமிழ் உணர்வாளர்களும் அம்மாநாட்டில் பங்கு பெற வந்துகொண்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் சூலை 17ஆம் தேதியன்று மாநாட்டிற்குத் தமிழக அரசு தடைவிதித்தது. இடையில் இருப்பது இரண்டே நாட்கள்தான். என்ன செய்வது என்பது தெரியாமல் மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்களிடம் ஓடினோம். அவர் அந்த வழக்கை உயர் நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று மாநாடு நடைபெறவிருந்த நாளுக்கு முந்திய நாள் அதாவது சூலை 19ஆம் தேதியன்று அனுமதிபெற்றுக் கொடுத்தார். திட்டமிட்டபடி சூலை 20, 21 ஆகிய நாட்களில் அந்த மாநாடு மிக வெற்றிகரமாக நடந்தேறியது. உலகத் தமிழர் பேரமைப்பு கடந்த 15 ஆண்டு காலமாகச் சிறப்புற நடைபெறுவதற்கும், பல்வேறு அரிய சாதனைகளை புரிவதற்கும், மதிப்பிற்குரிய சந்துரு அவர்களே முழுமையான காரணமாவார்.
இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற நால்வரின் சார்பில் ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவி அவர்கள் முன் கருணை மனு தாக்கல் செய்தோம். ஒரே ஒருவார காலத்தில் அந்த மனுக்களை ஏற்க மறுத்து அவர் தள்ளுபடி செய்தார். நால்வரின் உயிர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மதிப்பிற்குரிய சந்துரு அவர்களை நாடிச் சென்றோம். அவரும் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு ஆளுநர் எடுத்த முடிவு அரசியல் சட்டப்படி செல்லாதது என்ற உன்னதமான தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார்.
அமைச்சரவை கூடி கருணை மனுக்கள் மீது எத்தகைய பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுத்தான் ஆளுநராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் செயல்படவேண்டுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்று வாதாடி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார். இதன் விளைவாக இந்தியா முழுவதும் அதுவரை ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் கடைப்பிடித்த நடைமுறை செல்லாததாக்கப்பட்டது. மாநில அமைச்சரவைகளும் மத்திய அமைச்சரவையும் செய்யும் பரிந்துரைகளுக்கேற்ப மட்டுமே அவர்கள் செயல்படவேண்டும் என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைவிதியை மாற்றிய தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தவர் அவர்.
கொடிய பொடாச் சட்டப்படி நானும் மற்றும் தோழர்களும் கைது செய்யப்பட்டு 18 மாத காலத்திற்கு மேலாக சிறையில் வாடினோம். அப்போது எங்களுக்கு பிணை விடுதலை பெற்றுக்கொடுத்த பெருமை மூத்த வழக்கறிஞர்கள் என். நடராசன், கே. சந்துரு ஆகியோரைச் சாரும். மத்திய அரசு அமைத்த பொடா மறு ஆய்வுக்குழுவில் வாதாடி எங்கள் மீது பொடாச் சட்டத்தை ஏவியது சட்டப்படி செல்லாது என்ற தீர்ப்பையும் பெற்றுக்கொடுத்து சுதந்திர மனிதர்களாக எங்களை வெளியே நடமாடவிட்ட பெருமை மதிப்பிற்குரிய சந்துரு அவர்களையே சாரும்.
சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவிக்க சந்தன வீரப்பனிடம் நானும் தோழர்களும் தூது சென்று விடுவித்தோம். அப்போது தனது அண்ணன் மாதையன் மீது பொய் வழக்குப் போடப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் வாடும் அவரைச் சந்தித்து தேவையான உதவியைச் செய்யும்படி வீரப்பன் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவரை சிறையில் சந்திக்கச் சென்றோம். ஆனால், சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். உறவினர்கள் மட்டுமே, சிறைவாசிகளைச் சந்திக்க முடியும், நண்பர்கள் சந்திக்க முடியாது என்ற அரசாணையை எடுத்துக்காட்டினார். இந்த அநீதியான ஆணையை எதிர்த்து மதிப்பிற்குரிய சந்துரு அவர்கள் நீதிமன்றத்தில் போராடி வெற்றி தேடித் தந்தார். அதன் விளைவாக இன்றுவரை தமிழக சிறைகளில் உள்ள யாரையும் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலை பிறந்தது. இதற்குக் காரணம் அவரே.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை ஒன்றினை மதுரையில் அமைக்க வேண்டும் என மதுரை வழக்கறிஞர்கள் போராடினார்கள். அதற்கெதிராக சென்னை வழக்கறிஞர்கள் போராடிய போது மதிப்பிற்குரிய சந்துரு அவர்கள் துணிவாக முன்வந்து மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை வருவதற்கான தீர்ப்பினைப் பெற்றுக்கொடுத்தார்.
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஆக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய தமிழக அரசு நாடியது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்கள் கூட்டிய நீதிபதிகளின் கூட்டத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற கருத்தினை அழுத்தமாக எடுத்துரைத்து வாதாடிய பெருமை மதிப்பிற்குரிய சந்துரு அவர்களையே சாரும். இதன் விளைவாக தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகியோரை நியமித்தல், சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்தல், இவற்றுக்கான கணிணி மென் பொருள்களை உருவாக்குதல், தமிழில் சட்டவியல் இதழ் வெளியிடுதல் போன்றவற்றை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதில் மதிப்பிற்குரிய சந்துரு அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், இதுவரை இதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு முன்வரவில்லை.
மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது என் போன்றவர்கள் பதைத்தோம். மனித உரிமைகளை நிலைநாட்டும் வழக்குகளுக்கு இனி யாரை நாடிச் செல்வது என்பது புரியாமல் திகைத்தோம். ஆனால், நீதிநாயகமாக அவர் பொறுப்போற்றபோது தான் ஒரு மக்கள் நீதிபதி என்பதை நிலை நிறுத்தினார். அவர் பதவி வகித்த ஆறாண்டு காலத்தில் 90 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் தீர்ப்பளித்தார். பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு நீதி வழங்கப்பட்டது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த பிறகு நீதியரசர் என தன்னை குறிப்பிடக்கூடாது என்று கூறி நீதிநாயகம் என வழங்கச் செய்தார். நீதிபதிகளுக்குரிய தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்தார். அவர் ஓய்வு பெறும்போதுகூட அரசு அளித்த காரை ஒப்படைத்துவிட்டு மின் தொடர் வண்டியில் தன் வீடு திரும்பினார்.
புகழ்பெற்ற நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் புகழ் இன்றளவும் நின்று நிலவுவதைப் போல நீதிநாயகம் கே. சந்துரு அவர்களின் புகழும் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அவர் தலைமை தாங்கியது எங்களுக்கெல்லாம் அளிக்கப்பட்ட பெருமையாகும். அவருக்கு அனைவரின் சார்பிலும் உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் |