1. இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் அனைத்தும் செயற்கைத் துறைமுகங்கள். குறிப்பிட்டக் கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் கடலுக்கு அடியில் அகழ்வுப் பணி செய்து ஆழப்படுத்த வேண்டும்.
2. 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள சரக்குப் பெட்டகக் கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை.
3. மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கிடையே கடல் போக்குவரத்து வழியில் இந்தியத் துறைமுகங்கள் எதுவும் இல்லை. சென்னை, தூத்துக்குடி, விசாகபட்டினம், கொச்சி, மும்பை, கல்கத்தா போன்ற பெருந் துறைமுகங்கள் இந்த கடல் வழியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் சர்வதேச சரக்குக் கப்பல்கள் இத்துறைமுகங்களுக்கு வந்து செல்வதில்லை.
4. தமிழ்நாட்டில் 1076 கி.மீ. தூரமுள்ள நீண்ட கடற்கரை உள்ளது. இங்கு, சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய 3 துறைமுகங்கள் மட்டுமே பெரிய துறைமுகங்களாக இயங்குகின்றன. இன்னும் பல துறைமுகங்களை தமிழ்நாட்டில் அமைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளம், நாளுக்கு நாள் பெருகி வரும் சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு ஏற்ற துறைமுகம் இன்றியமையாத ஒன்றாகும்.
5. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்களது துறைமுகங்களைச் சீரமைத்து மிகப்பெரிய அளவில் சரக்குப் பெட்டக முனையங்களாக மாற்றியுள்ளன. ஆனால், கடந்த 50 ஆண்டு காலமாக கடலாண்மை பற்றிய சிந்தனையோ, துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளை அதி நவீனப்படுத்தும் முயற்சியையோ நாம் மேற்கொள்ளவில்லை.
6. எனவே, நமது சரக்குகளை இலங்கையில் உள்ள கொழும்பு, மலேசியாவில் உள்ள கிளாங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்து உலக நாடுகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. உலக நாடுகளிலிருந்து நமக்கு வரும் சரக்குகளை மேலே கண்ட துறைமுகங்களில் இறக்குமதி செய்து நமது நாட்டிற்குக் கொண்டு வரவேண்டியுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு நமக்கு ரூ.1500 கோடி செலவாகிறது. இவ்வாறு ஏற்றுமதி-இறக்குமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களில் பெரும்பாலானவை தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்படுவையாகும். குளச்சல்-இணையம் துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம் நமது சரக்குப் பெட்டகங்களை நேரடியாக உலகின் பல்வேறு நாட்டுத் துறைமுகங்களுக்கு அனுப்ப முடியும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி-இறக்குமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களில் 48% கொழும்பு துறைமுகத்திலிருந்தும், 22% சிங்கப்பூரிலிருந்தும், 10% கிளாங்கிலிருந்தும் அனுப்பப்படுகின்றன. எனவேதான் 1957ஆம் ஆண்டு குளச்சல் துறைமுகத் திட்டம் பற்றி இந்திய அரசு அறிவித்தபோது அதற்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இலங்கையின் ஒரே துறைமுகமான கொழும்புத் துறைமுகம் வழியாக நடைபெறும் ஏற்றுமதி-இறக்குமதியின் மூலம் பெரும் வருமானம் கிடைக்கிறது. தென்னிந்திய சரக்குப் பெட்டகங்களை நம்பியே கொழும்புத் துறைமுகம் இயங்குகிறது. குளச்சல் துறைமுகம் அமைக்கப்படுமானால் இந்த வருமானத்தில் பெரும் பகுதியை இலங்கை இழக்க வேண்டியிருக்கும் என இந்திய அரசிடம் வற்புறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது. இலங்கையின் நட்புறவிற்காக இந்திய அரசும் இத்திட்டத்தைக் கைவிட்டது.
7. குளச்சல் துறைமுகம் அமைப்பது தொடர்பாக 1998, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, மணவாளக்குறிச்சி, இணையம்- குளச்சல் ஆகிய கடற்கரையில் நன்கு ஆராய்ந்த கூடஞு The two global management consulting firms such as Typsa Group and Boston Consulting Group, and The National Centre for Sustainable Coastal Management மற்றும் அண்ணாப் பல்கலைக் கழகம் ஆகியவை இணையம் பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளன.
தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளுக்கிடையே சரக்கு முனையப் பெட்டகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் மிக முக்கியமான துறைமுகமாக இது திகழும் என்றும் மேற்கண்ட நிறுவனங்கள் தங்களின் கள ஆய்வில் குறிப்பிட்டிருக்கின்றன. 1,20,000 டன் எடையுள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்திற்கு வந்து செல்லும் வகையில் ஆழமுள்ள இயற்கைத் துறைமுகமாக இது விளங்கும். மேலும் இத்துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மிக நவீனமான கருவிகளைக் கொண்டதாகத் திகழும்.
8. துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பது, கடல் சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, துறைமுகங்களை நவீன மயமாக்குவது அவற்றை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் இணைப்பது. துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு சரக்குப் பெட்டக முனையங்களையும் தொழிற் பூங்காக்களையும், சேமிப்புக் கிடங்குகளையும் ஏற்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய சாகர் மாலா திட்டத்தை அண்மையில் இந்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக ரூ. ஒரு இலட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.
9. குமரி மாவட்டத்தில் குளச்சலுக்கு அருகில் இணையம் பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றினை ரூ. 27,568 கோடியில் அமைப்பதென்றும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் 10 சரக்குப் பெட்டக முனையங்கள் அமைக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
10. இணையம் பகுதியில் கடல் நீரின் ஆழம் சராசரியாக 20 மீட்டர் (62 அடி) ஆகும். கிழக்கு-மேற்கு சர்வதேச கடல் வழிக்கு மிக நெருக்கமாக இத்துறைமுகம் அமையும். முதலில் 20 அடி நீளமுள்ள 40 இலட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாளும் துறைமுகமாக இது விளங்கும். ஆண்டிற்கு ஆண்டு இது உயர்ந்து 80 இலட்சம் டன் அளவிற்கு சரக்குப் பரிமாற்றம் நடைபெற வழிபிறக்கும். மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் கொண்டு வரும் இந்தியாவிற்கான சரக்குகளை இறக்கிச் செல்லும் நுழைவாயிலாக இது அமையும். இதன் மூலம் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களையும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களையும் நேரடியாக மேற்கொள்வதால் ஆண்டிற்கு ரூ.1500 கோடி வரை செலவு குறையும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் விலை குறைந்து நமது நாட்டின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு அதிகமான சந்தை வாய்ப்புகள் உருவாகும். இந்துமாக்கடல் வழியிலிருந்து 1 முதல் 2 மணி நேர பயணத்தில் இத்துறைமுகத்தை அடைய முடியும்.
11. இணையம் துறைமுகத் திட்டத்திற்கு 400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஏற்கெனவே அரசு நிலம் 100 ஏக்கர் உள்ளது. கடலை ஆழப்படுத்துவதின் மூலம் கிடைக்கும் மணலைக் கொண்டு 250 ஏக்கர் நிலம் கடற்கரையையொட்டி உருவாக்கப்படும். கடலை ஆழப்படுத்துவதற்கான செலவை இந்நிலமதிப்பு ஈடுகட்டும்.
12. தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்கள் குளச்சல் - இணையம் துறைமுகத்தின் தொடக்கப் பணிகளுக்கு நிதியுதவி அளிக்க இருக்கின்றன. இங்கு கப்பல் நிறுத்தும் தளம், சரக்குப் பெட்டக முனையம் அமைத்தல் உள்ளீட்டப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் ரூ.2,500 கோடி முதலீடு செய்கின்றன.
13. இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள நான்குநேரியில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் தேங்கியதற்கு துறைமுக வசதி இல்லாததே காரணமாகும். தொலைதூரத்தில் உள்ள இப்பகுதியிலிருந்து சரக்குகளை தூத்துக்குடி அல்லது சென்னை துறைமுகத்திற்கு அனுப்பி ஏற்றுமதி செய்வது என்பது உற்பத்திச் செலவைக்கூட்டும். ஆனால், குளச்சல்- இணையம் துறைமுகம் அமையுமானால் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் வெற்றிகரமாக இயங்கும். மேலும் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை உள்ள வறண்ட பகுதி வானம் பார்த்து விவசாயம் செய்யப்படும் பகுதியாகும். பெரும்பாலும் மழை பெய்யாததால் வறண்ட நிலமாக உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளும் இல்லை. எனவே இப்பகுதி தொழில் வளம் பெருகுவதற்கு நிறைய வாய்ப்புண்டு. இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகமாகும்.
இத்திட்டத்தின் மூலம் குளச்சல் பகுதியில் சரக்குகள் ஏற்றுமதி-இறக்குமதி தொழிற்சாலைகளும், அதையொட்டிய துணைத் தொழிற்சாலைகளும், கப்பல் தொடர்பான தொழிற்சாலைகளும் உருவாகும்.
கல்கத்தாவிலிருந்து சென்னை வரை கிழக்குக் கடற்கரை நெடுகிலும் அமைந்திருக்கும் பொருளாதார ஊடுவழியை (Economic Corridor) கன்னியாகுமரி வரை நீடிக்கும் பணியினை தமிழக அரசு செய்யலாம். இதன் மூலம் கிழக்குக் கடற்கரைப் பகுதி தொழில் மயமாகும்.
தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கிடைக்கும் தாது மணலை சிறிய கப்பல்களில் ஏற்றி கொழும்பு, சிங்கப்பூர், கிளாங் துறைமுகங்கள் வழியாக அனுப்புவதற்குப் பதில் பெரிய கப்பல்கள் மூலம் நேரடியாக உலக நாடுகளுக்கு நாம் அனுப்ப முடியும்.
தமிழ்நாட்டுத் தொழில் நகரங்களான திருப்பூர், கோவை, கரூர், சிவகாசி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு குளச்சல்-இணையம் துறைமுகம் அருகில் இருப்பதால் ஏற்றுமதிக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இத்துறைமுகம் 20 மீட்டர் ஆழமுள்ள இயற்கைத் துறைமுகமாகும், சர்வதேச தாய் கப்பல்கள் வந்து போகும் சரக்குப் பெட்டக முனையமாகவும் விளங்கும்.
14. குளச்சல்-இணையம் துறைமுகத்திற்கான சாலைகள் தொடர்வண்டிப்பாதைகள் அமைப்பதற்கு சுமார் 250 ஏக்கர் நிலம் மட்டுமே தேவை. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்நிலத்தை தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. துறைமுகம் அமைக்கும் பகுதியில் வாழும் மீனவர்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் துறைமுகம் அமைக்கப்படும்.
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி அகல இரயில்பாதை இத்துறைமுகத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. இதற்கு மிக அருகில் திங்கள் சந்தை தொடர்வண்டி நிலையம் உள்ளது. இத்துறைமுகத்திலிருந்து 64 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி நெடுஞ்சாலைக்கு அருகில் இத்துறைமுகம் உள்ளது. மேற்குக் கடற்கரை சாலையும் இதையொட்டி செல்கிறது. இதற்கு அருகே மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆய்வு மையமும், ஏவுகணை தளமும் உள்ளன. இவற்றிற்குத் தேவையான சாதனங்கள் இத்துறைமுகம் மூலம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
15. கேரளத்தில் உள்ள வல்லார்பாடம், விழிஞ்ஞம் துறைமுகங்கள் அருகிலேயே இருப்பதால் குளச்சல்-இணையம் துறைமுகம் வெற்றிகரமாக செயல்படாது என்ற கருத்து தவறானது. உலக அளவில் பல நாடுகளில் பெரும் துறைமுகங்கள் அருகருகே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளில் துபாய், சலாலா, கிங் அப்துல்லா, தென் கிழக்கு ஆசியாவில் கிளாங், டாஞ்சுங், பேலப்பாஸ், சிங்கப்பூர் ஆகியவையும் இலங்கையில் கொழும்பு, ஹம்பந்தோட்டா, காலே துறைமுகங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. மேலும், கேரளத் துறைமுகங்களைவிட பல மடங்கு பெரிய துறைமுகம் குளச்சல்-இணையம் துறைமுகமாகும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கடல்வழி சரக்குப் பெட்டகங்களைக் கொண்ட கப்பல் தொழிலுக்கு இத்துறைமுகம் மிகமிக இன்றியமையாதவையாகும்.
வருங்கால இந்தியாவின் 50 முதல் 60 ஆண்டு கால தொழில் வளர்ச்சி, சரக்குக் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் துறைமுகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
16. இத்துறைமுகம் வருவதால் அங்கு வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து தவறானதாகும். இந்தியாவில் உள்ள பெரும் துறைமுகங்களில் அருகில் உள்ள பகுதிகளில் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடைந்துள்ளதே தவிர தளர்ச்சியடையவில்லை. தொழில் நுட்பங்களுடன் மீன்பிடித் தொழில் மேலும் பெருகும். தொழில் துறையில் பின் தங்கிய குமரி மாவட்ட இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் பெருகும். இத்துறைமுகத்தில் அமைக்கப்படும் அலைதடுப்பான் (ஆணூஞுச்டு ஙிச்tஞுணூண்) கடல் அரிப்பைத் தடுத்து, கடற்கரையோரம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும்.
17. 60ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தின் கனவு திட்டமான குளச்சல் துறைமுகத் திட்டம் இலங்கை அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு கேரள அரசு கொச்சிக்கருகே வல்லார்பாடம் என்ற இடத்தில் சரக்கு முனையத் துறைமுகம் ஒன்றை அமைத்தது. ஆனால் இங்கு கடல் ஆழம் 14.5 மீட்டர் மட்டுமே உள்ளது. இதனால் இங்கு பெரிய சரக்குக் கப்பல்கள் வர இயலாது. அம்மாநிலத்தில் தொழில் வளம் இல்லாத காரணத்தினால் இத்துறைமுகம் எதிர்பார்த்தப் பயனை அளிக்கவில்லை. எனவே குளச்சலுக்கு 20 கி.மீ. தூரத்தில் மிக அருகில் அமைந்திருக்கும் விழிஞ்சத்தில் சரக்குப் பெட்டக முனையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக கேரளா ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆழமான உள் நோக்கம் உண்டு. கேரள மாநிலத்தில் பெரும் தொழிற்சாலைகள் குறைவு. தொழில் வளமிக்க நமது தமிழகத்தின் சரக்குகளை எதிர்பார்த்தும் தமிழக எல்லைக்கு அருகிலும் விழிஞ்ஞம் துறைமுகத்தை கேரள அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இணையம் துறைமுகம் அமைக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டு சரக்குகள் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வராது என்பதால் கேரள அரசு நமது திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது.
விழிஞ்ஞம் திட்டத்திற்கு தேவையான நிதியுதவிக்கு இந்திய அரசை எதிர்பார்க்காமல் பெரும் தொழில் நிறுவனமான அதானி குழுமத்திடம் இப்பொறுப்பை ஒப்படைத்தது. தனியாரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி கடுமையாக எதிர்த்தது. உடனடியாக அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன்சாண்டி அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நிலைமையை விளக்கி குளச்சல் திட்டம் வருவதற்கு முன்னால் விழிஞ்ஞம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் . அப்போதுதான் குளச்சல் திட்டம் கைவிடப்படும். விழிஞ்ஞம் துறைமுகம் வளர்ச்சி பெறும் எனகூறி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினரை ஒப்புக்கொள்ள வைத்தார். பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வரான பினராய் விஜயன் குளச்சல்-இணையம் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தார். 29-7-16 அன்று கேரள மாநில அனைத்துக் கட்சித் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து தனது எதிர்ப்பை நேரில் தெரிவித்தார்.
இந்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தலைமை அதிகாரி விழிஞ்ஞம் திட்டம் கேரள மாநிலத்தின் நலன்களுக்கு எதிரானது, தனியார் நிறுவனத்திற்கே அதிகப் பயன் தருவதாகும் என தனது கண்டனத்தைத் தெரிவித்தபோதிலும் கேரள அரசு பிடிவாதமாக இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. இத்திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ரூ.26,568 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. தமிழக அரசும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் எவ்விதத் தடையும் இல்லை.
இணையம் துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்படுவதின் மூலம் தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் குறிப்பாக தொழில் வளமே இல்லாத குமரி மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் உண்டு. |