கல்வி உரிமை காக்கக் களபலியான அனிதா - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:52

பெற்ற தாயின் சாவைக்கூட புரிந்து கொள்ள முடியாத மழலை வயதில் சொல்லொண்ணாத சோகத்திற்கு ஆளானாள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சுமை தூக்கும் தொழிலாளியின் மகளாக வளர்ந்து, ஓட்டைக் குடிசையில் எளிய வாழ்வு வாழ்ந்தும், எப்படியேனும் படித்து, மருத்துவராக வேண்டும். மக்களுக்குத் தொண்டாற்றி மகிழ்ச்சி காண வேண்டும். என்ற கனவை இதயத்தில் தாங்கி தன்னம்பிக்கையோடு படித்தாள். உள்ளூர் பள்ளியில் 10ஆம் வகுப்பில் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்ற அவளின் திறமையையும் விடா முயற்சியையும் கண்ட தனியார் மெட்ரிக் பள்ளி அவளைக் கட்டணமில்லாமல் தனது பள்ளியில் சேர்த்துக்கொண்டது. பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை அவளும் நிறைவேற்றினாள். 12ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றாள். அதாவது 98% பெற்று மாநிலத்தின் முதல் வரிசை மாணவிகளில் ஒருவளாகத் திகழ்ந்தாள். தமிழில் 195, ஆங்கிலத்தில் 188, கணிதத்தில் 200, இயற்பியலில் 200, வேதியலில் 199, உயிரியலில் 194 பெற்றாள். மருத்துவம் படிக்கத் தேவையான மதிப்பெண் 196.75 கிடைத்துவிட்டது. மருத்துவர் ஆகிவிட்டது போன்ற மகிழ்ச்சியில் மிதந்தாள். பெற்ற தந்தையும், உடன் பிறந்த சகோதரர்களும் தங்களது துயர வாழ்வின் முடிவு நெருங்கிவிட்டது போலக் கருதினார்கள்.

அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் வகுப்புக்கான தேர்வில் 199.75% மதிப்பெண்கள் பெற்ற அனிதாவுக்குக் கிடைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் படித்த எம்.ஐ.டி. கல்லூரியில் விண்வெளித் துறையில் அனிதாவுக்கு இடம் கிடைத்தது. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் அவளுக்கு இடம் கிடைத்தது. ஆனால், அவள் மனம் மருத்துவப் படிப்பையே நாடியது.

ஆனால், அனிதாவைப் போன்ற ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு முள்வேலியாக நீட் தேர்வு நின்று முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தது.

நாடு முழுவதிலும் மருத்துவக் கல்விக்கான நீட் முறைத் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தபிறகு நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துள்ளது.

5 மாத காலத்திற்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின்மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய உள்துறையிலேயே இச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது அப்பட்டமான சனநாயக உரிமை பறிப்போடு அரசியல் சட்ட மீறலுமாகும். இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு விரும்பாவிட்டால் அதை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறும் செய்யவில்லை. ஒப்புதலும் கொடுக்கவில்லை. அதை ஏன் என்று தட்டிக்கேட்கிற துணிவும் தமிழக அரசுக்கு இல்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நீட் தேர்விலிருந்து ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றினால் மத்திய அரசு உதவி செய்யும் என அறிவித்தார். அதன்படி சட்டமியற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது. இதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. மத்திய அரசின் நயவஞ்சக நாடகப் போக்கும் அதை நம்பிச் செயல்பட்ட தமிழக அரசின் ஏமாளித்தனமான, பணிந்து போகும் நடவடிக்கைகளுமே தமிழகத்தில் மாணவர்களிடையே உருவான கொந்தளிப்புகளுக்குக் காரணமாகும்.

எனவே உச்ச நீதிமன்றத்தின் நெடிய படிகட்டுகளில் ஏறி நீதி கேட்டு அனிதா முறையிட்டாள். உறுதியாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்க முடியும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணை அனிதாவின் தலையில் மட்டுமல்ல தமிழக மாணவர்களின் தலைகளில் பேரிடியாக இறங்கியது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அதே பாடத் திட்டத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் அனிதாவும் அவளைப் போன்ற மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும். ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கேள்வித்தாள்களை தயாரித்தால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எப்படி அதில் வெற்றிபெற முடியும்? நீட் என்னும் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்பிற்கு அடிப்படை என்று சொன்னால் 12 ஆண்டுகளாக ஒரு மாணவன் பள்ளியில் படித்த படிப்பு வீண் என்பதுதானே பொருள். நீட் தேர்வு என்பது பள்ளிப் படிப்பை முக்கியமற்றதாக ஆக்கி, நீட் தேர்விற்கென இலட்சக்கணக்காண பணம் பெற்றுக்கொண்டு நடைபெறும் தனியார் பயிற்சிப் பள்ளிகளை ஊக்குவிக்கும் போக்காகும். அனிதா போன்ற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கவே முடியாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. ஒலிம்பிக் விளையாட்டில் ஊக்க மருந்து அருந்திவிட்டு பங்கெடுப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்திய அரசு நீட் பயிற்சி என்ற ஊக்க மருந்தை உண்ணுமாறு மாணவர்களை வற்புறுத்துகிறது.

கல்வி முறையில் தேசிய அளவில் சமத்துவம் இல்லாதபோது, தேசிய அளவில் கல்வித் தகுதி பெறவேண்டும் என்பது நகை முரணாகும்.

தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த மாணவர் சேர்க்கைத் திட்டமும் 69% இடஒதுக்கீடு நடைமுறையும் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவதற்கு உதவியாக இருந்தது. ஏழை, எளியவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி பிறந்தது.

தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இடம் கிடைக்காது என்ற நிலை உருவாகி, அதன் விளைவாக மாணவர்கள் சி.பி.எஸ்.இ. திட்டத்திற்கு மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களிலும் 4,270 மாணவர்களை சேர்க்கலாம். உச்சநீதிமன்றத்தின் ஆணையின் விளைவாக இவற்றில் குறைவான இடங்களே தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 15% க்கும் குறைவானவர்கள் என்பதால் பெரும்பாலான இடங்கள் பிற மாநில மாணவர்களுக்குக் கிடைக்கும். தமிழக அரசின் செலவில் பிற மாநில மாணவர்கள் படித்து மருத்துவப் பட்டம் பெற்று தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற மாட்டார்கள். அவரவர்களின் மாநிலங்களுக்குச் சென்று அந்த மக்களுக்குத் தொண்டாற்றுவார்கள்.

நீட் தேர்வு முறை தொடருமேயானால் எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு போதுமான அளவுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலைமை ஏற்படும்.
தமிழகத்திலுள்ள பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்றைக்கும் எட்டாத ஒன்றாகிவிடும். தமிழ் வழிக் கல்வி என்பது அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தனக்கென தனியான விதிமுறைகளை வகுத்துக்கொண்டிருக்கிறது. அதைப் போல ஆந்திர மாநிலத்தில் அரசியல்சட்டம் 371ஆவது பிரிவின்படி அம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மட்டுமே மருத்துவக் கல்வி படிக்க முடியும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு படிக்க முடியாது. அதைப்போல தமிழகத்திலும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவர்களாகி தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற முடியும்.

இந்தியாவில் அரசுத்துறையிலும், தனியார் துறையிலும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் மருத்துவத்திற்குத் தமிழகத்தைத் தேடி வருகிறார்கள். இந்தப் பெருமைக்கு நீட் தேர்வு முறையால் பங்கம் ஏற்படும். தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சி குன்றும்.

மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கே அந்த அந்த மாநில மொழிகள், அந்தந்த மாநிலங்களில் பயிற்சி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும். தங்களின் மொழி, வரலாறு, இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் தங்களது கல்வித் திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமான காரணமாகும். ஆனால் இதை மனதில் கொண்டுதான் மாநிலப்பட்டியலில் கல்வியை அரசியல் சட்ட சிற்பிகள் வைத்தார்கள். ஆனால், மேற்கண்ட நோக்கங்களை அடியோடு சிதைக்கும் வகையில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு 1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் மாற்றப்பட்டது. இதன் விளைவாக மாநிலங்களின் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு என்பது நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வுத் திட்டமாகும். மாநிலத்தில் கல்விக்கு என்று தனியான அமைச்சரும், துறையும் அமைந்திருக்கும்போது மத்தியில் ஒரு கல்வி அமைச்சரும், துறையும் இருக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியா போன்ற பல்வேறு மொழி பேசுகிற மக்கள் வாழ்கிற நாட்டில் ஒரே மாதிரியான கல்வி என்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகும். அவ்வாறு ஆக்குவதற்கு செய்யப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை.

நன்றி: தினமணி 6-9-17

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.