திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:16 |
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்த விவரங்களை உத்தரப்பிரதேச அரசு அடியோடு மறைத்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுலா சம்பந்தமான சிறு நூலில் தாஜ்மகால் பற்றிய குறிப்பையே காணோம்.
வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று தாஜ்மகாலைப் பார்ப்பதாகும். அதை மறைப்பதின் மூலம் உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் தாஜ்மகாலைக் கண்டு களிக்காமல் திரும்பப் போகிறார்களா- இல்லை. முகலாய மன்னனான ஷாஜகான் கட்டியது என்பதால் அதை மறைக்க முயலுகிறது இந்துத்துவா அரசு. அது மட்டுமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விசுவ இந்து பரிசத்தின் தலைவர்களில் ஒருவரான வினய்கட்டியார் பேசும்போது "தாஜ்மகாலின் உண்மைப் பெயர் தேஜோ மகால் ஆகும். இங்கு சிவலிங்கம் ஒன்றும் இருந்தது. இந்து மன்னன் ஒருவன் கட்டிய இந்தக் கட்டிடத்தை ஷாஜகான் கைப்பற்றி தனது மனைவியின் நினைவுச் சின்னமாக மாற்றினான்'' என பிதற்றினார். அதன் தொடர்ச்சியாக இப்போது உ.பி. அரசு தாஜ்மகாலை மறைக்க முயற்சி செய்கிறது. |