26 ஆண்டுகள் கழித்துப்பார்த்த நிலா! – பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:28

"பேரறிவாளன்'' இரண்டு தலைமுறைகள் உணர்வோடு உச்சரிக்கும் பெயர். 26 ஆண்டு சிறை வாழ்க்கை. அதாவது சுமார் பத்தாயிரம் இரவுகள், பத்தாயிரம் பகல்கள்!  ஒவ்வொரு நாளும் எத்தனை கொடூரமானதாய், நீளமானதாய் நகர்ந்திருக்கும்- 19 வயதில் இழுத்துச் செல்லப்பட்டவர் 45 வயதில் பரோலில் வெளி வந்திருக்கிறார். இந்த கால  இடைவெளியில் இங்கு எல்லாமே மாறிவிட்டது. 30 நாள் பரோல் எனும் தற்காலிக சுதந்திரத்தில் எதை அறியவும் புரியவும் முடியும்- எவ்வளவு அன்பைக் கொடுத்து,  எவ்வளவை எடுத்துக் கொள்வது- எவ்வளவு கதைகளை கேட்பது- எவ்வளவு கண்ணீரைத் தாங்கிக் கொள்வது-

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.

தன் மகனுக்காக காத்திருந்து காத்திருந்து படுத்தப் படுக்கையாகி விட்ட அறிவின் தந்தை கண்களில் ஒளியோடு அமர முயல்கிறார். மகனின் விடுதலைக்காகவே தன்  வாழ்வை அர்ப்பணித்து ஓடி ஓடி தேய்ந்து போன அற்புதம் அம்மாவின் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. எப்போதும் இழுத்துக் கட்டிய புடவையும் இறக்கி  வைக்காத ஜோல்னா பையுமாக நடையாய் நடந்த அற்புதம்மாள் தளர்வாக புடவை கட்டி, தலை வாராமல் மகனது வருகையில் லயித்துக் கிடக்கிறார். அவ்வீட்டின் எல்லா  அறைகளிலும் ஒரே விஷயம் நிறைந்திருக்கிறது. அது அறிவின் வருகை.

தனது அக்கா அன்புமணியின் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் அறிவு கைது செய்யப்பட்டார். அந்த அக்காவின் பிள்ளைகள் அகரனும் செவ்வையும் இளைஞர்களாக  வளர்ந்து பொறியியல் பட்டதாரிகளாக பணியாற்றுகின்றனர். தோள் தாண்டி வளர்ந்து நிற்கும் அந்தக் குழந்தைகளே அறிவு இழந்து விட்ட காலத்தின் சாட்சி!.

"அறிவு உண்மையாகவே வந்துவிட்டார்' என்ற செய்தி சில நிமிடங்களில் ஊருக்குள் பரவுகிறது. பல முறை தங்களது எதிர்பார்ப்பு பொய்த்துப் போன அனுபவத்தில் செய்தியை  உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே கூட்டம் கூடுகிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் உடன்பயின்ற நண்பர்கள் ஊர்த் தோழர்கள் கூடி வீட்டின் முன் பகுதியில் ஷாமியானா  போடுவது, இடத்தை சுத்தம் செய்வது, நாற்காலிகளை போடுவது என கொண்டாடத் தொடங்குகின்றனர். அறிவின் வருகை ஊர்த் திருவிழாவாக மாறுகிறது.

பன்னெடுங்காலமாக ஆளரவமற்று, பொலிவிழந்து இருந்த அந்த வீடு அடுத்த நாள் காலை முதல் தாங்க முடியாத அளவுக்கு ஆட்களை மட்டுமல்ல அந்த வீட்டில் உள்ள  மனிதர்களால் சுமக்க முடியாத அளவு உணர்வுகளையும் சுமந்தே நின்றது. சிலருக்கு கண்ணீர் வந்தது, சிலர் புன்னகையோடு ஆரத் தழுவினர். சிலர் பேச முடியாமல்  கைகளைப் பற்றிக் கொண்டனர். சிலர் பேரமைதியோடு வந்தமர்ந்தனர். என்ன பேசுவது, எங்கே இருந்து தொடங்குவது, என்ன கேள்வி கேட்பது என யாருக்குமே  தெரியவில்லை. எல்லோருக்குமே பகிர்ந்து கொள்ள அறிவுடனான பால்யகாலக் கதைகளே மிச்சமிருந்தன!

கால் நூற்றாண்டு காலம் என்பது ஒரு தனி மனிதரின் வாழ்வில் மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்தில் மனித இனத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் கூட மிக  நீண்டதுதான். 26 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைப் பேசியே கிடையாது. இணையம் கிடையாது. நால் வழிச் சாலைகள் கிடையாது. வானளாவிய கட்டடங்கள் கிடையாது.  இவை எதையும் அறிவு பார்த்தது இல்லை. அறிந்திருக்கலாம். அனுபவித்தது இல்லை. ஆனால் தான் வெளியில் வாழ்ந்த 19 ஆண்டு காலத்தில் தான் பார்த்த அனுபவித்த பலவற்றை அவர் இந்த 26 ஆண்டுகளில் பார்க்கவில்லை. அந்தப் பட்டியலில்  முதன்மையாக வருவது இரவு வானும் நிலவும் நட்சத்திரங்களும்தான். சிறைக்குள் மாலை 6 மணிக்குப் பிறகு அவர் கண்டதெல்லாம் மூன்று சுவர்களும் ஒரு கம்பிக்  கதவும். வந்த நாள் இரவு அறிவு ஆசை ஆசையாக நிலாவைப் பார்த்தார். நிலா, ஒளிரும் அமைதியுடன் அப்படியே இருந்தது.

ஆனால் மனிதர்களின் முகங்கள் மாறிப் போயிருந்தன.

தினம் தினம் அறிவு எதிர் கொள்ளும் கேள்வி "என்னை அடையாளம் தெரிகிறதா-' என்பதுதான். உடன் படித்தவரா- பள்ளியிலா- கல்லூரியிலா- உறவினர்களா- ஊர்க்காரர்களா-  யார்- என்று அந்த முகத்தை உற்று நோக்கி 26 ஆண்டுகளுக்கு முன் தான் பழகிய அத்தனை முகங்களுடனும் ஒப்பிட்டு ஒப்பிட்டுக் களைக்கிறது அறிவின் மூளை. யாரென  அடையாளப் படுத்திக் கொண்ட அடுத்த கணம் கட்டித் தழுவி "என்னை மறந்து விட்டாயா அறிவு' என்று கண்ணீர் விடுகின்றனர்.

அறிவு வந்த மறுநாள் காலையிலேயே 80 வயதைக் கடந்த ஒரு முதியப் பெண்மணி தட்டுத் தடுமாறி வந்து அறிவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து தேம்புகிறார். அவர்  அறிவின் சிறிய பாட்டி. பக்கத்து வீட்டு பெரியம்மா ஒருவர் வரும் போதே "அறிவு உனக்காடா இந்த நிலைமை' என்று அழுது புலம்பியவாறே வீட்டிற்குள் நுழைகிறார். தனது  மடியிலிருந்து திருநீறை எடுத்து அறிவின் நெற்றி முழுவதும் பூசுகிறார். "இனிமே உனக்கு எதும் ஆகாதுடா நீ நல்லாயிருப்ப' என்று மனதார வாழ்த்துகிறார்.

சிறுவயதில் அறிவுடன் விளையாடிய ஒரு கிறித்துவத் தோழி சென்னையிலிருந்து தன் குடும்பம் குழந்தைகளுடன் வந்திருந்து அறிவின் விடுதலைக்காகவும் அவரின்  நலனிற்காகவும் ஜெபித்துவிட்டுப்போகிறார்.

அறிவுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் தங்கள் மனைவி குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்து அன்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதில் ஒரு நண்பர் தன் மனைவி  மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வருகிறார். அனைவரையும் அறிமுகப்படுத்திய அவர் தன் மகனை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. அந்த சிறுவனிடம் அறிவு பெயரை  கேட்க, "பேரறிவாளன்' என்கிறான். பேச முடியாமல் சட்டென அவனைக் கண்ணீர் மல்க கட்டியணைத்துக் கொள்கிறார் அறிவு.  ஓரிரு நாட்களில் கூட்டம் குறைந்திருக்கலாம். ஓரிரு வாரத்தில் வருகை அடங்கி இருக்கலாம். ஆனால் உறவினர்கள், நண்பர்கள் தவிர தமிழகம் முழுவதுமிருந்து அறிவை  நேசிப்பவர்கள் பலரும் கிளம்பி வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கிறது. நாள் முழுவதும் தொடர்கின்றன சந்திப்புகள்.

அறிவை முன் பின் சந்தித்திராத முகமறியாத எத்தனையோ பேர் அவர் கையைப் பிடித்துக் கொண்டு "அண்ணா உங்களைப் பார்க்கத்தான் நாங்கள் வெகு தொலைவில்  இருந்து வந்துள்ளோம்'' என்று நெகிழ்கின்றனர். அந்த தருணத்தில் அறிவு அற்புதம் குயில்தாசனின் மகனாக மட்டுமல்ல அன்புமணிக்கும் அருள்செல்விக்கும் சகோதரனாக  மட்டுமல்ல உலகெங்கும் உள்ள பல தமிழ்க் குடும்பங்களுக்கு உறவாகி நின்றார்.

பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பதவியில் உள்ள ஒருவர் அறிவை காணவென வருகிறார். அறிவின் கையைப் பிடித்துக் கொண்டு "நான்  உங்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால் உங்களைப் பற்றிய அனைத்து செய்திகளையும் படிப்பேன். என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு உங்களிடம் நேரில் மன்னிப்புக் கேட்கவே வந்தேன்' என்று அழுகிறார்.

அத்தனை பேரிடமும் ஒரே விதமான வாஞ்சையுடன் அவர்களின் அன்பை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அறிவின் பக்குவம் வியப்பூட்டுகிறது. தன்னை 26 ஆண்டுகளில்  ஒரு முறை கூட சந்திக்காமல் "என்னை மறந்து விட்டாயே' என்று கேட்டவர்களிடம் கூட அதே வாஞ்சையுடன் "மறந்தது தவறுதான் மன்னித்து விடுங்கள்' என்று  அரவணைக்கிறார். "அவர்களுக்கு என்ன சூழலோ. குடும்பம் குழந்தைகள் என பொறுப்புகள் அதிகரித்திருக்கும். எல்லோருக்கும் சிறைக்கு வந்து பார்க்கும் சூழல் அமைந்து  விடாது தானே. அன்பில்லாமலா இத்தனை ஆண்டுகள் கழித்து பார்க்க வந்துள்ளார்கள்' என்று புன்னகையுடன் ஒவ்வொருவரையும் அங்கீகரிக்கிறார்.

மாறாத அந்தப் புன்னகையும் புரிதலும் பக்குவமும் வாஞ்சையும் தான் பேரறிவாளன். ஓராண்டு ஈராண்டு சிறையில் இருப்பவர்களே மனம் தடுமாறிவிடும் சூழலில் 26  ஆண்டுகள் அதிலும் 23 ஆண்டுகள் மரண தண்டனை சிறைவாசியாக தனிமைச் சிறையில் இருந்த போதும் பல முறை தூக்கிலிடப்படும் நாள் குறிக்கப்பட்ட ஒரு  சிறைவாசியாக காவல் துறையின் கொடூரமான சித்ரவதைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அனுபவித்த ஒருவராக இருந்த போதும் அறிவிடமிருந்து அந்தப்  புன்னகையை மட்டும் எவராலும் பறிக்க முடியவில்லை.

வந்தவர்களில் பெரும்பாலோர் அவருக்கு விதவிதமாக உடைகள் வாங்கி வந்தனர். அந்த புத்தாடைகளை அன்றன்றே அவரை அணிய வைத்துப் பார்ப்பதில் அவரது  அம்மாவிற்கும் சகோதரிகளுக்கும் அத்தனை மகிழ்ச்சி. விதவிதமான உடைகளை அணிய ஆசைப்படும் வயதில் அவரது வாழ்க்கை சிறைக்குள் கழிந்துவிட்டதே! இதோ இந்த  ஒரு மாத காலம் முடிந்து சிறைக்குத் திரும்பினால் மீண்டும் வெள்ளை உடைதான். இடைப்பட்ட இந்தக் காலத்தில் தங்கள் மகனை சகோதரனை பலவித உடைகளில் அழகு பார்க்க அவர்கள் விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை.

அவருக்கு பிடித்த உணவை சமைத்துத் தருவதில் உறவுகளுக்குள் போட்டி. அவரது பக்கத்து வீட்டில் உள்ள இசுலாமிய குடும்பத்தினர் அறிவுக்காக ஆசையாக பிரியாணி  செய்து வருகின்றனர். ஆனால் காவல் துறை அவர்களை அனுமதிக்க மறுக்கிறது. ஆதங்கத்துடனும் ஆத்திரத்துடனும் புலம்பும் அவர்களுக்கு "என் பாதுகாப்பிற்காகத்தான்  வெளி உணவை அவர்கள் அனுமதிப்பதில்லை. நாம் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் தானே' என்று விளக்கி சமாதானம்சொ ல்கிறார். அவர்களோ அடுத்த நாளே  அறிவின் வீட்டிற்கே வந்து அவருக்கு பிரியாணி சமைத்துத் தருகின்றனர்.

26 ஆண்டு காலம் அறிவு அனுபவிக்க வாய்ப்பளிக்கப்படாத முக்கியமான மற்றொன்று மீன் உணவு. சிறைச் சட்டங்களின்படி சிறைக்குள் மீன் சமைப்பது இல்லை. சிறு  வயதிலிருந்தே அறிவு விரும்பி உண்பது மீன் உணவைத்தான். இதோ இத்தனை ஆண்டு கழித்து மீன் சமைத்துப் பரிமாறப்பட்ட உடன் "அம்மா.. நீங்க செஞ்சதுதான- அதே  சுவை!' என்று புன்னகைத்தபடியே இரசித்து உண்கிறார். தாயின் கண் கசிகிறது. தட்டில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் அனைத்தையும் அவரது சகோதரிகள் செய்திருந்த  போதும் மீன் குழம்பை மட்டும் அவரது தாய்தான் செய்திருந்தார். மகனின் நாக்கு அதை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டது.

உடல்நலம் குன்றியுள்ள தந்தையின் அருகில் இருக்க வேண்டும் என்பது அறிவின் விருப்பம். அதனால் தந்தை ஓய்வெடுக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் வருபவர்களை  தந்தையின் அறையிலேயே சந்திக்கிறார்.

இரவு நேரங்களில் மட்டுமே குடும்பத்தினருடன் உரையாட அவருக்கு நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் தான் சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்வதும்
சகோதரிகளுடனும் குழந்தைகளுடன் கேலி பேசி சிரிப்பதும் என பொழுது போகும். சிறுவயதுமுதலேஅறிவு நன்றாகப்பாடுவார். அதிலும் இளையராஜாவின் குரல் அவருக்கு  மிக பொருத்தமாக இருக்கும். ஒரு குண்டானைக் கவிழ்த்துப்போட்டு அவரது அக்கா மகன் தாளம் வாசிக்க அறிவின் பாட்டுக் கச்சேரி இரவில் தொடங்குகிறது. அந்த  தாளத்துடன் இளையராஜாவின் குரலில் அறிவு பாடிய பாடல்களில் ஒன்று....

பொன்ன போல ஆத்தா
என்ன பெத்து போட்டா
என்ன பெத்த ஆத்தா
கண்ணீரதான் பார்த்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது

எத்தனை பொருத்தமானப் பாடல்! கேட்கும் யாருக்கும் அந்த தாய்-மகனை பார்த்து உயிர் கலங்குகிறது.

முதல் 15 நாட்கள் குதூகலமாக தான் பொழுது கழிந்தது. ஆனால் தேய்பிறை நாட்கள் தொடங்கிய பிறகு அந்த உற்சாகத்திலும் நிழல் விழத் தொடங்கியது. சிரிப்பும் பாட்டும்  கேட்கத்தான் செய்தன. ஆனால் ஆழ்மனதில் பதட்டமும் தவிப்பும் மேலோங்கத் தொடங்கிவிட்டன.

19 வயது பாலகனாக சிறைக்கு அனுப்பிவிட்டு அவனது விடுதலைக்காகப் போராடிய அவரது தாய்க்கு இந்த ஒரு மாத காலம் என்பது ஒரு சொட்டு நீர் போலதான். அது  அவரின் தாகத்தை தணித்து விடாது. மாறாக பன் மடங்காக அதிகரிக்கவே செய்யும். மறுபுறம் இந்த ஒரு மாத காலம் வெளியே சுற்றத்துடனும் நட்புறவுடனும் இருந்த பிறகு  மீண்டும் சிறைக்குள் தள்ளுவது என்பது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு ஒரு மாத காலம் மட்டும் பார்வை தந்துவிட்டு பின் பறிக்கும் கொடூரத்திற்கு  இணையானது. தந்தையின் சிகிச்சைக்காக என்று வந்த மகன் படுத்தப் படுக்கையாக இருந்த அவரை இந்த ஒரு மாதக் காலத்தில் எழுந்து அமரும் நிலைக்கு கொண்டு  வந்துள்ளார்தான். ஆனால் மகனை மீண்டும் சிறைக்கு அனுப்புவது என்பது அந்த தந்தையின் மனநிலையையும் உடல்நி லையையும் எப்படி பாதிக்கப் போகிறதோ  தெரியவில்லை.

மனிதப் பிறப்பின் செயலூக்கமிக்கக் காலமான இளமைப் பருவம் முழுவதையும் சிறையில் கழிப்பது ஏறக்குறைய மரணத்திற்கு ஈடு. "அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது'  என முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தன் கதைக்கு, வலிக்க வலிக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதி உயிர் கொடுத்தார் பேரறிவாளன். தனிமைச் சிறையின் அத்தனை  கொடூரங்களுக்கு இடையிலும் நீதியை தேடியடையும் துடிப்பு அவரை நகர்த்திச் சென்றது. நடுக்கடலில் மூழ்கிவிட்ட நீதி எனும் கப்பலை சிறிது சிறிதாய் நகர்த்திக் கரைக்கு  மிக அருகில் நிறுத்தியிருக்கிறார். அது கரையேற வேண்டும்.

பேரிருள் கவ்விக் கிடக்கும் வாழ்வில், சிறு ஒளியும் சூரியனுக்கு சமம். பேரறிவாளன் 30 நாட்கள் கண்ட இந்த நிலா, பேரொளி மிக்க சூரியனாய், அவர் வாழ்வின் நிரந்தர  விடியலாய் மாற வேண்டும்.

(27-செப்-2017 நாளிட்ட ஜுனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.