2017ஆம் ஆண்டு நடப்பு அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியான மூன்று செய்திகள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.
"அக்டோபர் 3 ஆம் தேதி இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத்தாலி, வைரப்பல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர கழுத்தணி, வைர நெத்திச்சுவடி, தங்கத் தாழம்பூ, மரகதத் திலகம், நீலக்கல் திலகம், வைர மார்புக்கவசம் உள்பட விலை மதிக்க முடியாத ஏராளமான வைரம், வைடூரிய நகைகளைக் காணவில்லை. மேலும், மூல ஸ்தானத்தில் இருந்த 22 கிலோ தங்கத்தாலான மணி, விலை மதிக்க முடியாத வலம்புரி சங்கு ஆகியவையும் காணவில்லை. 1972ஆம் ஆண்டு கோவில் சொத்துப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நகைகள் 1995ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெறவில்லை.'' என பக்தர் ஒருவர் அளித்த முறையீடு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்துப் பதில் அளிக்குமாறு அறநிலையத்துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து அக்டோபர் 6ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகே அரசு பஸ்சுடன் நேருக்கு நேராக கார் ஒன்று மோதியது. இந்த காரிலிருந்த 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் காரை காவல்துறையினர் சோதனையிட்டபோது 8 கிலோ எடையுள்ள மரகத லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த லிங்கம் எந்தக் கோயிலைச் சேர்ந்தது என்பதைக் குறித்து, காரில் வந்தவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது.
அதே நாளில் சிலை கடத்தல் வழக்கில் காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த காதர் பாட்சா என்பவர் பறிமுதல் செய்த சிலையை அரசிடம் ஒப்படைக்காமல் விற்பனை செய்ததாகக் கைது செய்யப் பட்ட செய்தி வெளியானது. ஆக மூன்று நாட்கள் இடைவெளியில் வெளியான இச்செய்திகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள விலை மதிக்க முடியாத சிலைகள், வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவை பத்திரமாக உள்ளதா- என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளன. தமிழ்நாட்டில் பெரிதும் சிறிதுமான 31,423 கோவில்களும் மற்றும் மடங்கள், மடங்களைச் சேர்ந்த கோவில்கள் மற்றும் அற நிலையங்கள் சுமார் 2000 உள்ளன. இந்த கோவில்களை மன்னர்களும், மன்னர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், சிற்றரசர்களும், பெரும் செல்வர்களும் கட்டியதோடு அக்கோவில்களுக்குரிய சிலைகள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார்கள். மேலும், இக்கோவில்களில் வழிபாடுகள் முறையாக நடைபெற நில மானியங்களையும் அளித்துள்ளார்கள்.
கோவிலில் வழிபாடு நடத்துபவர்களுக்கும், தேவாரங்கள், பாசுரங்கள் ஆகியவற்றைப் பாடுபவர்களுக்கும் நில மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் அவற்றை பராமரிக்கும் சிற்பிகளுக்கும் நில மானியங்கள் அளிக்கப் பட்டுள்ளன. ஏறத்தாழ 5 இலட்சம் ஏக்கர் நிலங்கள் இவ்வாறு அளிக்கப் பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான நகைகளும், ஆபரணங்களும் ஐம்பொன் சிலைகளும் மன்னர்களாலும் மற்றவர்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களை நிருவகிப்பதற்கு தக்கவர்களை நியமித்து வழிபாடு, திருவிழாக்கள் முதலியவை எவ்வித தங்கு தடையுமின்றி நடைபெறவும், கோயில் சொத்துக்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் உரிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
மன்னர்கள் ஆட்சி மறைந்து, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி ஏற்பட்டபோது மாவட்ட ஆட்சியாளர்களின் நேரடி பொறுப்பில் கோவில் நிருவாகம் கொண்டுவரப்பட்டது. இந்துக் கோயில்களை ஆங்கிலேயர்கள் நிருவகிக்கக்கூடாது என்ற கிளர்ச்சி எழுந்தது. இதன் விளைவாக 1863ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி அறநிலையங்களின் சொத்துப் பராமரிப்பு பணியை அதிகார சார்பற்றவர்களைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைத்தது. இச்சட்டத்தில் இருநத பல குறைகளை அகற்றும் முயற்சியில் பல சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1925ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது அறநிலையங்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1925ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பின் 1954ஆம் ஆண்டு வரை 10 சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் 1981ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படிதான் தற்போது கோவில்கள்நி ருவகிக்கப்படுகின்றன. இவ்வளவு திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் ஆலய நிருவாகம் செம்மையாக இல்லை. அரசியல் அதிகாரம் குறுக்கிட்டு அனைத்தையும் சீரழித்துள்ளது.
ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் இதர சொத்துக்களும், அரசியல் ரீதியாக வேண்டியவர்களுக்கு மிகக் குறைந்த குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. கோவில் நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டே போகிறது. நிலங்கள் யார் யார் பெயருக்கோ மாற்றப்படுகின்றன. இராசராசசோழன் காலத்தில் அவன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு 18 ஆயிரம் வேலி நிலத்தை இறையிலியாக அளித்தான் என அக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. ஆனால் இப்போது ஒரு வேலி நிலம் கூட அக்கோவிலுக்குச் சொந்தமாக இல்லை. கோவில் உண்டியல்கள் உடைக்கப்படுவதும், காசுகள் திருடப்படுவதும், விலை மதிப்பற்ற சிலைகளும், நகைகளும், ஆபரணங்களும் மிக எளிதாக கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கின்றன.
அன்னியர்களான ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட கோவில் சொத்துக்கள் பாதுகாப்பாக இருந்தன என்பதற்கு கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாகும்.
விக்டோரியா பேரரசியின் ஆட்சி காலத்தில் வேல்ஸ் இளவரசர் மதுரைக் கோயிலைப் பார்ப்பதற்கு வந்தார். கோயிலில் உள்ள நகைகளையும் ஆபரணங்களையும் குறிப்பாக நீலநாயகப் பதக்கம் என்று சொல்லப்படும் அபூர்வமான ஒரு நகையைப் பார்த்து அவர் வியந்துபோனார். இதுபோன்ற அழகிய நகை தனது மன்னர் குடும்பத்தில் கூட இல்லை என பாராட்டினார். தனது தாயான விக்டோரியா பேரரசியிடம் இதைக்காட்டி விட்டுப் பத்திரமாக திருப்பி அனுப்பிவைப்பதாக அவர் வேண்டிக்கொண்டபோது அதை ஏற்பதற்கு கோவில் அர்ச்சகர்களும் அதிகாரிகளும் மறுத்துவிட்டனர். கேட்டவர் பிரிட்டிசு பேரரசின் இளவரசர். எதிர்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக முடிசூட்டிக்கொண்டவர். அவர் நினைத்திருந்தால் அந்தப் பதக்கத்தை எடுத்துச் சென்றிருக்க முடியும். யாராலும் தடுத்திருக்க முடியாது. ஆனாலும், அவர் அப்பதக்கத்தைப் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு சென்றார்.
1981ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் வெளியிலும் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தினேன்.
"கோவில்களில் உள்ள நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றின் தற்போதைய மதிப்பு என்ன- அவற்றின் பழமை மதிப்பு (அணtடிணுஞு ஙச்டூதஞு) என்ன- என்பதைத் தக்க நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட வேண்டும். அத்துடன் அவைகள் அனைத்தும் பல கோணங்களில் வண்ணப்படங்களாக எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒரு பிரதியும், அறநிலைய ஆணையாளரிடம் ஒரு பிரதியும் அளிக்கப்பட வேண்டும். பல கோவில்களில் நகைகளும், சிலைகளும், ஆபரணங்களும் களவு போனபோது அவற்றின் மதிப்பீடுகள் சரியான முறையில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் திருடு போன பொருட்களை திரும்பப் பெறுவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.
1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளைப் பாதுகாப்புத் துறையின் துணையுடன் அடையாளப் பதிவு செய்யும்படி இந்திய அரசு ஆணையிட்டது. ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு முன்வரவில்லை. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிலைகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் களவுபோயுள்ளன.
மேற்கு நாடுகளில் உள்ள அரசு அருங்காட்சி அலுவலகங்களிலும், தனியார் அருங்காட்சி அலுவலகங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த கற்சிலைகளும், ஐம்பொன் சிலைகளும் கணக்கில்லாமல் காட்சி தருகின்றன. இவை எப்படி அங்கு சென்றன- கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பற்ற கோயில்களில் இவைகளைத் திருடுவது எளிதாகிறது. அறங்காவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த திருட்டு நடைபெற்றிருக்க முடியாது.
இந்து அறநிலையச் சட்டத்தின் 33ஆவது பிரிவு 3ன் படி கோவில்களுக்குச் சொந்தமான பணமோ, நகைகளோ, சிலைகளோ திருடப்பட்டிருந்தால் தொடர்பான அறங்காவலர்களிடமிருந்து அவற்றைத் தண்டும் அதிகாரம் ஆணையாளருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்த அறங்காவலரின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கோவில்கள் உள்பட இந்து அறநிலையங்கள் நிருவகிக்கப்படும் முறை குறித்து ஆராய்வதற்காக 1960ஆம் ஆண்டு இந்திய அரசு சி.பி. இராமசாமி ஐயர் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. திருச்செந்தூர் கோயில் தணிக்கை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசினால் அமைக்கப்பட்ட நீதியரசர் பால் ஆணையம், கோவில் நகைகள் ஆபரணங்கள் சிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆணையம் ஆகிய ஆணையங்கள் கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்து மிக விரிவாகவும் தெளிவாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. ஆனால் இவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
களவுபோன கோயில் சிலைகளை மீட்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு பல சிலைகளை மீட்ட காவல் துறையின் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் திடீரென மாற்றப்பட்டதும், பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு சிலை மீட்புப் பணியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என ஆணைப் பிறப்பித்ததும் தமிழகக் கோவில்களின் நிருவாகத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
தமிழ்நாட்டுக் கோயில்கள் வழிபடும் தலங்கள் மட்டுமல்ல கோயில்களும், சிற்பங்களும், சிலைகளும், நகைகளும், ஆபரணங் களும், வாகனங்களும் தமிழ்ம க்களுக்கேயுரிய விலை மதிப்பற்ற கலைக் கருவூலங்களாகும். நம்முடைய முன்னோர்கள் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. இதை உணர்ந்து மக்கள் செயல்பட முன்வந்தால் ஒழிய கோவில் கொள்ளைகள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
- நன்றி : "தினமணி' 10-10-2017 |