நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும்! முதல்வருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:25 |
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தின் 15% பங்குகளை தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சோசலிசத் திட்டத்தின்படி பொதுத்துறை நிறுவனங்கள் அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகளை சிறிது சிறிதாக தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் அமைந்திருக்கும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் தமிழர்களுக்கே சொந்தமானது. இதை நிலை நிறுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படவேண்டும். 2013ஆம் ஆண்டில் நெய்வேலி நிறுவனத்தின் 5% பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது அப்போதைய முதல்வர் செயலலிதா முன்வந்து அந்தப் பங்குகளை தமிழக அரசை வாங்கச் செய்தார். அதைப்போல இப்போதும் இந்த 15% பங்குகளை தமிழக அரசிடமே மத்திய அரசு விற்க வேண்டும். அந்தப் பணத்தை தவணை முறைகளில் மத்திய அரசு பெற வேண்டும். வேறு எந்த தனியாருக்கும் இந்தப் பங்குகளை விற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன். மறைந்த முதல்வர் செயலலிதா அவர்களைப் பின்பற்றி தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நெய்வேலி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |