"இனப்படுகொலைக்கு பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே” என்ற கூற்றிற்கு இணங்க இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசால் புரியப்படும் இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லலாக மட்டுமே இருக்க முடியும் என்பதே சரியானது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுத் தொன்மையைக் கொண்ட இலங்கையின் பூர்வகுடி மக்களான தமிழர்கள் செழிப்பான பண்பாட்டை கொண்டுள்ளதுடன் செம்மொழியான தமிழ் மொழியைத் தாய்மொழியாகவும், வளமான இலக்கிய செழுமையையும் கொண்ட வளா;ச்சியடைந்த தனித்தும் மிக்க தேசிய இனத்தவர்களாவர். இவர்கள் அரசமைப்புடன் கூடிய நீண்ட வரலாற்றை தம் தாயகமான தமிழீழத்தில் கொண்டவர்கள்.
பல்வகையான சிறப்பியல்புகளைக் கொண்ட இத்தேசிய இனம் உலக வரலாற்றில் ஒரு முக்கிய பண்பாட்டு அலகாகும். அதனை அழித்தொழிப்பதற்காக சிங்கள - - பெளத்த ஆதிக்க அரசு பலவகைகளிலும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வொடுக்குமுறையானது படுகொலைகளுடன் கூடிய சமூக அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைச் சார்ந்தது. இத்தகைய இனப்படுகொலையில் இருந்து விடுதலை பெற தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய அடிப்படையில் பொதுவாக்கெடுப்பை கோரும் உரிமை உடையவர்கள்.
எனவே சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு வாயிலாக தமது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை ஈழத் தமிழ் மக்களுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து 23 தேசிய இனங்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்று இறைமையுள்ள அரசுகளை அமைத்துள்ளன. இதில் கிழக்கு ஐரோப்பாவில் 20 நாடுகளும் ஆப்பிரிக்காவில் 2 நாடுகளும், ஆசியாவில் ஒரு நாடும் உள்ளன. இத்தகைய வழியில் ஈழத் தமிழர்களும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பின் வாயிலாக தமது தலைவிதியை நிர்ணயிக்க சர்வதேச சமூகம் ஆவன செய்யவேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நியாயபூர்வமான அரசியல் தீர்வு காணப்படுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளும், மற்றும் இந்தியாவும் அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். ஆனால் அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த நல்லாட்சி அரசாங்கம் தான் கூறிக்கொண்ட அனைத்து வாக்குறுதிகளுக்கும் மாறாக போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது. சர்வதேச விசாரணைக்கு எவ்வகையிலும் இடமில்லை என்று இலங்கையின் குடியரசுத் தலைவர் பலமுறை உறுதிபட கூறியுள்ளார்.
போர்க்குற்றத்தின் பெயரால் முன்னாள் வன்னிக்கான இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூர்யாவிற்கு எதிராக தென்அமெரிக்க நாடுகளில் வழக்குகளை மனிதஉரிமைகள் குழுக்கள் தாக்கல் செய்திருக்கும் போது அந்த இராணுவத் தளபதிக்கு எதிராகவோ வேறு எந்த இராணுவத் தளபதிகளுக்கு எதிராகவோ, இராணுவ வீரர்களுக்கு எதிராகவோ உலகில் உள்ள எந்தொரு நாடும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் என மைத்திரிபால சிறிசேன செப்படம்பர் மாத தொடக்கத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து இனப்படுகொலைக்கான எத்தகைய நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன் அரசியல் தீர்வும் சாத்தியமற்றது என்ற நிலை தெளிவாகி உள்ளது. மேலும் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியல் தீர்வோ, வடக்கு-கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட சமஷ்டிமுறையற்ற தீர்வோ தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாகாது.
இந்நிலையில் பிரிந்து செல்வதைத் தவிர வேறு தீர்வு ஈழத் தமிழ் மக்களுக்கு இல்லை என்பதினால் அதன் சுயநிர்ணய அடிப்படையிலான பொதுவாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டியதே ஜனநாயக வழிமுறையாக உள்ளது. இந்த ஜனநாயக வழிமுறையை பிரயோகித்து தமிழ் மக்களுக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உண்டு.
தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமமானது.
ஐநா பெருமன்றமே...
நீதி தாருங்கள். தாமதிக்காமல் நீதி தாருங்கள்.
தமிழரின் தாகம்
தமிழீழ தாயகம்
நன்றி வணக்கம் |