திட்டக்குழுவிற்கு மாற்றாக பா.ஜ.க. அரசினால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் என்னும் அமைப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்குத் பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் என்பவர் "வேளாண்மைத் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.'' என கூறியுள்ளார்.
மக்கள் தொகையில் சுமார் 45% மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறை வேளாண்மைத்துறையாகும். குறிப்பாக கிராமப்புற மக்களின் பெரும்பாலோர் வேளாண்மைத் தொழிலையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மண் வளத்திற்கும் நீர்வளத்திற்கும் ஏற்ப பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றை அந்தந்த பகுதி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பிற மாநிலங்களிலும் அவ்வாறுதான் வேளாண்மை நடைபெறுகிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான வேளாண்மைக் கொள்கையும் செயல் திட்டமும் வகுக்கப்பட முடியாது.
ஏற்கெனவே வேளாண் பயிர்களுக்கு உரிய விலையை முடிவு செய்யும் அதிகாரம் உழவர்களிடம் இல்லை. மத்திய அரசு வசமே உள்ளது. விளைவிப்பவர்களே விலையை முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது முதலுக்கே மோசம் என்பது போல வேளாண்மையையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மத்திய அரசு முயலுகிறது.
நிதி ஆயோக்கின் முதல் கூட்டத்தில் வேளாண்மைத் துறைக்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் கருத்துத் தெரிவித்த எந்த மாநிலமும் வேளாண் துறையை மத்திய பட்டியலுக்கு மாற்றுமாறு கேட்கவில்லை. ஆனாலும் இத்தகைய அறிவுரை வழங்கப்படுவது எதேச்சதிகாரமாகும்.
திட்டக்குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக் 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தலைமையமைச்சர் மோடி இதன் தலைவர். அனைத்து மாநில முதல்வர்களும் இதன் உறுப்பினர்கள். இதன் செயற்பாடுகளுக்காக துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நிதி ஆயோக் செயற்படுத்தும் எனக் கூறப்பட்டது. இதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அர்விந்த் பனகாரியா இரண்டரை ஆண்டு காலத்தில் பதவி விலகிச் சென்றுவிட்டார். மத்திய அரசுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
மத்திய அரசு வகுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பாக நிதி ஆயோக் மாற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களில் தனியாக நிதி ஆயோக் உருவாக்கப்படும் என்பதும் இதுவரை செயல்படுத்தப் படவில்லை. மத்திய அரசில் எந்தக் கட்சி பதவி வகிக்கிறதோ அந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தவேண்டிய ஒரு அமைப்பாக நிதி ஆயோக் மாற்றப்பட்டுவிட்டது.
கடந்த காலத்தில் நேரு அரசினால் அமைக்கப்பட்ட திட்டக் குழு கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைத்த அமைப்பாகக் காலப்போக்கில் மாறிற்று அதைப்போல இப்போது நிதி ஆயோக் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரம்புக்குட்பட்டோ அல்லது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றோ அன்றைய திட்டக்குழுவை நேரு அமைக்கவில்லை. மத்திய அமைச்சரவையின் ஒரு தீர்மானத்திற்கிணங்க திட்டக்குழு அமைக்கப்பட்டது. அரசியல் சட்டப்படி அமைக்கப்படவேண்டியது நிதி ஆணையமே ஆகும். மத்திய அரசின் பரிந்துரையின்படி நிதி ஆணையத்தை குடியரசுத் தலைவர் அமைப்பார். அரசியல் சட்டத்தின் 252ஆவது பிரிவு கடன்களைப் பற்றியும், 272 மற்றும் 275ஆவது பிரிவுகள் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி நிதிப்பங்கீடுகள் செய்யப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.
ஆனால், நிதி ஆணையத்தின் அதிகாரத்தை சிறிது சிறிதாக பறிக்கும் வகையில் திட்டக்குழு செயல்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்களை இது வகுத்தது. மாநிலங்களின் திட்டங்களுக்கான ஒப்புதலையும், மானியங் களையும் கடன்களையும் குறித்து திட்டக்குழுவே இறுதி முடிவெடுத்தது.
அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட நிதி ஆணையம் மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியைவிட அரசியல் சட்ட அங்கீகாரம் இல்லாத திட்டக்குழு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதி அதிகமாக அமைந்தது. இதன் விளைவாக நிதி ஆணையத்தைவிட அதிக அதிகாரம் படைத்த அமைப்பாக திட்டக்குழு மாற்றப்பட்டது. திட்டக்குழு ஒரு ஆலோசனைக் குழுவாக இயங்கவில்லை. பெரும் அதிகாரம் படைத்த அமைப்பாகவும் இந்திய அரசின் ஒரு பகுதியாகவும் உருவானது. மத்திய அரசின் வரிகளையும், திட்டங்களையும் குறித்து இறுதி முடிவெடுக்கும் வல்லமை படைத்ததாக அது மாறியது.
1967ஆம் ஆண்டு வரை மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிப் பொறுப்பை வகித்ததனால் மத்திய-மாநில மோதல்கள் ஏற்படவில்லை. அதற்குப் பின்னர் மத்தியில் ஒரு கட்சியும் மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் நிலை உருவானது. மத்தியில் ஆளுங்கட்சி தனது அரசியல், பொருளாதாரம், சமுதாயக் கொள்கைகளுக்கேற்ப திட்டங்களை வகுத்து மாநிலங்கள் மீது திணித்தது. மாநிலத்தை ஆளும் கட்சி அதனுடைய கொள்கைகளுக்கேற்ப மாநிலத் திட்டக்குழுவை அமைத்து திட்டங்களை வகுத்தது. ஆனால், அந்தத் திட்டங்களை முழுமையாக ஏற்பதற்கு மத்தியத் திட்டக்குழு முன்வரவில்லை. திட்ட அளவீட்டைக் குறைத்தது. இல்லையேல் நிதி தர மறுத்தது.
இவ்வாறு செய்தது சனநாயக ரீதியில் முரண்பட்டதாகும். மத்திய அரசோ அல்லது மாநில அரசோ மக்களால் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளேதான். எனவே, மத்தியில் ஆளுங்கட்சி மாநிலத்தை ஆளும் கட்சியின் திட்டங்களை ஏற்க மறுப்பதும், தான் வகுத்தத் திட்டங்களையே மாநிலங்கள் மீது திணிப்பதும் அப்பட்டமான சனநாயக விரோதப் போக்காகும். இந்தப் போக்கு சனநாயகத்தின் அடித்தளத்தையே அழித்துவிடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
கடந்த காலத்தில் திட்டக்குழு செய்த தவறுகளையும் எதேச்சதிகாரத்தையும் மாற்றுவதற்கும் உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவதற்குமாகத்தான் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டதாக பா.ஜ.க. அரசு கூறியது. ஆனால், நடைமுறையில் எத்தகைய மாற்றமும் இல்லை.
தலைமையமைச்சரைத் தலைவராகவும் மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரே ஒரு முறைதான் கூட்டப்பட்டுள்ளது என்பது இந்த அமைப்பு சனநாயக முறையில் செயல்படவில்லை என்பதற்குரிய தெளிவான எடுத்துக்காட்டாகும்.
மக்களோடு நேரடியான தொடர்பு கொண்ட கல்வி, மக்கள் நலம், பாசனம், சாலை அமைத்தல், வேளாண்மை, கூட்டுறவு, வேலைவாய்ப்பு போன்ற மாநில அரசின் துறைகளுக்குத் தேவையான மானியம், கடன் போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரம் நிதி ஆயோக்கிடம் உள்ளது. இதன் விளைவாக மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏற்கெனவே மாநிலத் துறையில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதின் மூலம் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிட்டது. எடுத்துக்காட்டாக மருத்துவக் கல்வித் துறையில் புகுத்தப்பட்ட நீட் தேர்வும் அதன் மோசமான விளைவுகளும் ஆகும்.
இப்போது வேளாண்மைத் துறையை முழுவதுமாக மத்தியப் பட்டிலுக்கு மாற்றுவது என்பது வேளாண்மையை மட்டுமல்ல அது சார்ந்த நிலத்தின் மீது உள்ள அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு மாற்றும் திட்டமாகும்.
ஏற்கெனவே நிலத்திற்கு அடியில் உள்ள பெரும் கனிம வளங்கள், பெட்ரோலியம், மீத்தேன், கார்போ ஹைட்ரேட் போன்றவற்றை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உண்டு. ஆனால், இவற்றிற்கு மேலாக உள்ள நிலம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் மக்களிடமும் உள்ளன. எனவேதான் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் தங்களின் விளை நிலங்களும், வேளாண்மையும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விடும் என மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, வேளாண்மை மற்றும் நிலத்தின் மீதுள்ள கட்டுப்பாடு தனது வசம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. அதன் விளைவாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மொழியின் அடிப்படையில் மக்களும், அவர்கள் வாழும் நிலமும் சார்ந்துதான் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மொழிகள் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஆக்கப்படவேண்டும். ஆனால், அந்த இடங்களில் எல்லாம் இந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இப்போது வேளாண்மையையும் அதைச் சார்ந்திருக்கும் நிலத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளுமானால் அதன் விளைவாக மொழிவழி மாநிலங்கள் இனி தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுவிடும். இந்தியா முழுமைக்கும் ஒரே மத்திய ஆட்சி போதும் மாநில ஆட்சிகள் தேவையில்லை என்ற திசையை நோக்கி பா.ஜ.க. அரசு நாட்டை நகர்த்துகிறது.
நன்றி : தினமணி |