1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ருசியாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த அத்தனை தேசிய இனங்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது. மார்க்சு கனவுகண்ட சோசலிச சமுதாயத்தைச் சோவியத் நாட்டில் உருவாக்கிக் கொடுத்தது. அது மட்டுமன்று; ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் ஊட்டி அவர்களைக் கிளர்ந்தெழ வைத்தது.
உலகெங்கும் அடிமைப்பட்டுக்கிடந்த நாடுகளின் மக்கள் கொதித்தெழுந்து புரட்சி செய்வதற்குரிய தூண்டுகோலாக அக்டோபர்ப் புரட்சி திகழ்ந்தது. அஞ்சி நடுங்கும் கோழைகளாகவும் அடிமைத்தனத்திற்கு உரியவர்களாகவும் இருந்த மக்களிடையே அஞ்சாமையையும், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் அது ஊட்டியது. ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் சிக்கிச் சீரழிந்த நாடுகள் தங்களின் விடுதலைப் போராட்டத்திற்குச் சோவியத் நாட்டின் தார்மீக அல்லது நேரடியான ஆதரவு பெற முயன்றன. அந்நாடுகளின் அடிமைத்தளைகளைத் தகர்த்தெறியச் சோவியத் நாடு உதவியது. அக்டோபர்ப் புரட்சிக்குப் பின்னர்ப் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திடமிருந்து ஆப்கானிசுதான் விடுதலை பெறுவதற்கும். ஏகாதிபத்திய வல்லரசுகளின் பிடியிலிருந்து ஈரான், சீனா, துருக்கி நாடுகள் விடுதலை பெறுவதற்கும் சோவியத் நாடு உதவியது. அராபிய நாடுகள் விடுதலை பெறவும் சோவியத் நாடு உதவியுள்ளது.
தேசிய இனப்பிரச்னை
சோவியத் நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனவாத எதிர்ப்புக் கொள்கைகளால் மட்டும் இந்திய மக்கள் கவரப்படவில்லை. தேசிய இனப் பிரச்சினைக்கு லெனின் கண்டுள்ள தீர்வு இந்திய மக்களை வெகுவாக ஈர்த்தது. பல்வேறு தேசிய இனமக்களைக் கொண்ட நாடான சோவியத் நாட்டில் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை எல்லாத் தேசிய இனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளதைக் கண்ட இந்திய மக்கள் வியப்படைந்தனர். மிகச் சிறுபான்மையாக உள்ள பல்வேறு தேசிய இன மக்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கச் சோவியத் நாட்டில் அரசியல் சட்டப்பூர்வமான உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதுவும் இந்திய மக்களைத் திகைக்க வைத்தது.
அக்டோபர்ப் புரட்சிக்குப் பிறகு 10 ஆண்டுக் காலத்தில் சோவியத் நாட்டிலுள்ள சகல தேசிய இனங்களும் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரத் துறைகளில் பெற்றிருந்த விரைவான வளர்ச்சியை நேரில் கண்ட - நேரு, தாகூர் போன்றவர்களைத் திகைக்க வைத்தது. சோவியத் நாட்டிலுள்ள ஆசியப் பகுதியைச் சேர்ந்த தேசிய இனங்கள் மிகவும் பிற்பட்ட நிலையிலிருந்தன. ஆனால் அக்டோபர்ப் புரட்சிக்குப் பிறகு அந்த இனங்கள் அடைந்த முன்னேற்றம் இந்திய மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
புரட்சிகர அறிவிப்புகள்
சோவியத் புரட்சியையொட்டி வெளியிடப்பட்ட சோவியத் அரசின் அறிவிப்பு ஒவ்வொன்றும் இந்திய விடுதலை வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டின. 1917 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி சோவியத் அரசு வெளியிட்ட சமாதானத்திற்கான பிரகடனமும், நில உரிமைகளுக்கான பிரகடனமும், நவம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட ருசிய மக்களின் உரிமை பற்றிய பிரகடனமும் நவம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட ருசியாவிலும் கிழக்கு நாடுகளிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு விடப்பட்ட வேண்டுகோளும் இதைப் போன்ற சோவியத் அரசின் மற்ற அறிவிப்புகளும் இந்தியப் புரட்சியாளர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்தன.
ஈரான், ஆப்கானிசுதான், துருக்கி, சீனா போன்ற அண்டை நாடுகளின் சுதந்திரத்தை மதித்துச் சோவியத் நாடு செய்துகொண்ட உடன்பாடுகள் அனைவரையும் திகைக்கவைத்தன. இந்த நாடுகளின் மீது ஜார் ஆட்சி கொண்டிருநத எல்லைகளுக்கு அப்பாற்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் முழுவதுமாகச் சோவியத்நாடு விட்டுக்கொடுத்தது.
"ருசிய மற்றும் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த உழைப்பாளி வர்க்க முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியான அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "பாரசீகர்கள், அராபியர்கள், துருக்கியர்கள், இந்தியர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தங்களை அழுத்திக் கொண்டிருக்கும் அடிமை நுகத்தடிகளை அகற்றித் தங்களுடைய நாட்டிற்குத் தாங்களே உரிமையாளர்களாக மாற வேண்டும்.''
இந்திய விடுதலைக்கு ஆதரவு
இந்தியாவில் தேசிய உணர்வு வளர்ந்தோங்கி வருவதையும் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் இந்த அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது. "ஐரோப்பியத் திருடர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டுவரும் இந்தியாவில்கூட புரட்சிக்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் தங்களுக்கு சோவியத் நாடு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்திய மக்கள் பெற்றனர்.
1918ஆம் ஆண்டு சூன் மாதம் சோவியத் குடியரசின் வெளியுறவுத்துறை ஒரு முக்கியமான அறிவிப்பைச் செய்தது. இந்தியாவைப் பற்றிய நீல நூல் (ஆடூதஞு ஆணிணிடு) ஒன்றினை இது வெளியிட்டது. ஜார் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்த ருசியத் தூதுவர்கள் சேகரித்த பல விவரங்கள் இந்நூலில் கூறப்பட்டிருந்தன. இந்த நூலுக்கான முன்னுரையை கே.எம். டிராயநோஸ்கி (கூணூணிதூச்ணணிதிண்டுதூ) என்பவர் எழுதியுள்ளர். அவர் தமது முன்னுரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தருவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பொதுவான நிலைமைகள் குறித்தும் அதனுடைய வளங்களை அடியோடு சுரண்டுகிற பிரிட்டிசாரின் போக்குப் பற்றியும் சுதந்திர இயக்கத்தின் வளர்ச்சி குறித்தும் அம்முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் எழுதியுள்ளதாவது - "மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாக நமது நாடு மாற்றப்படக்கூடிய அபாயம் இருந்தது. இந்த நிலைமையை எதிர்த்துப்போராடிய நாம் துரதிருஷ்டம் வாய்ந்த இந்திய மக்களோடு கைகோர்த்துப் போராட வேண்டியவர்களாக உள்ளோம். அவர்களின் தலை விதியும் நம்மைப் போன்றதேயாகும். ஒரு பொது எதிரியை வீழ்த்தும் நோக்கத்துடன் நாம் ஒன்றுபட வேண்டும். இந்தியாவில் ஏற்படும் புரட்சி உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுதந்திர இந்தியா இல்லாமல் உலகில் அமைதி இல்லை. கிழக்கிந்திய நாடுகளின் வளங்களைச் சுரண்டி மேற்கு நாடுகள் கொழிக்கும் காலம் வரையில் மேற்கு நாடுகளில் சமுதாயச் சீரழிவை யாரும் தடுக்கப்போவதில்லை. கிழக்கு நாடுகளில் மேற்கு நாடுகள் நடத்திவரும் சுரண்டலுக்கு இந்தியாவே நடுநாயகமாக உள்ளது. எனவே கிழக்குப் பகுதியில் புரட்சிக்கான முதல் தளமாக இந்தியாவே விளங்க வேண்டும். ருசியப் புரட்சியாளர்களாகிய நாமும் சர்வதேச சோசலிஸ்டுகளும் இந்தியாவில் புரட்சி மூளுவதற்கான ஏற்பாடுகள் கண்டு மகிழ்ச்சி அடைந்து அதற்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் நமது சக்தி அனைத்தையும் திரட்டி உதவுவது நமது கடமையாகும்.''
தலைவர்கள் வரவேற்பு
அக்டோபர்ப் புரட்சியின் இலட்சியங்களையும், புரட்சிகரமான போராட்ட முறைகளையும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்துகொண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் கூட, திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால் போன்ற தலைவர்களும், பாரதி, ரவீந்திரநாத் தாகூர், இக்பால், பிரேம்சந்த் போன்ற கவிஞர்களும் இளம் சோவியத் குடியரசினை உளமாற வாழ்த்தி வரவேற்றனர். 1920-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதியன்று "யங் இந்தியா'' பத்திரிகையில் "ஆயுதபலத்தின் மூலம் போல்சுவிசத்தை நசுக்க முயல்வது என்பது வீணான முயற்சியாகும்'' என்று காந்தியடிகள் எழுதினார்.
ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் தேசபக்தியினால் உந்தப்பட்டுப் போராட்டத்தில் குதித்த இளைஞர்களை அக்டோபர்ப் புரட்சி வெகுவாக ஈர்த்தது. லெனின் தலைமையில் ருசிய மக்கள் நடத்திய புரட்சி அடைந்த வெற்றி இளைஞர்களைப் புரட்சிகரவாதிகளாக்கிற்று. அவர்கள் காந்தியடிகளையும் லெனினையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினார்கள். அத்தகைய புரட்சிகரமான இளைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும் போராட்டக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்கியவருமான எஸ்.ஏ.டாங்கே, "காந்தியும் லெனினும்' என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அதன் முன்னுரையில் -
"1919-ஆம் ஆண்டில் காங்கிரசு இயக்கத்தில் நான் சேர்ந்தேன். மாணவர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்தினோம். நாடு கடத்தப்பட்டு இருந்த லாலா லஜபதி ராய் இந்தியா திரும்பியபோது அவருக்குப் பெரிய வரவேற்பு அளித்தோம். இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படித் திலகர் அவர்களை வேண்டிக் கொண்டோம். இப்படிக் காங்கிரசு இயக்கத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதன் தலைமை வகுத்த பல்வேறு கொள்கைகளில் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. எனவே, புதிய பாதை காண விரும்பினேன். ருசியப் புரட்சியும் அதையொட்டிச் சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. எனவே, ருசியப் புரட்சியின் அடிப்படைத் தத்துவம் குறித்து நான் அறியத் தொடங்கினேன். அதன் விளைவாகக் காந்தியும் - லெனினும் என்ற இந்த நூலை எழுதினேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியில் உலகப் பார்வையுடன் இயங்கியவர்களில் சவகர்லால் நேரு முதன்மையானவர். காந்தியடிகள் முதல் அனைத்துத் தலைவர்களும் உலக விவகாரங்களைப் பற்றி நேருவின் கருத்தையே ஏற்றுக்கொண்டனர். நேருவிற்கு உலகக் கண்ணோட்டம் ஏற்பட வழிவகுத்த நிகழ்ச்சி. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற அக்டோபர் புரட்சியேயாகும். இது குறித்து அவரே பின்வருமாறு விளக்குகிறார்.
"1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் விளைவாக உருவான உந்து சக்தி புதிய வரலாற்றினைப் படைத்துள்ளது. யாராலும் அதைப் புறக்கணிக்க முடியாது. இந்தியாவில் உள்ள நாம் அதை அலட்சியம் செய்ய முடியாது. ருசியா நம்முடைய அண்டை நாடாகும். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பாதிக்குமேலாக விரிந்து பரந்துள்ளது. எனவே அதை ஒதுக்கித் தள்ளுவது என்பது இயலாத ஒன்றாகும். மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரால் உருவாக்கப்பட்ட கம்யூனிசச் சக்கரம் ஐரோப்பா முழுவதிலுமே சுழன்று கொண்டிருக்கிறது. ருசியாவில் ஏற்பட்ட புதிய சமுதாயத்தை மக்கள் மேலும் மேலும் வரவேற்றுக்கொண்டுள்ளனர். ஆசிய நாடுகளில் ஒரு முக்கிய விழிப்புணர்வை இது ஏற்படுத்தியுள்ளது'' என்று நேரு 1919ஆம் ஆண்டில் குறிப்பிட்டார்.
அக்டோபர் புரட்சி குறித்தும், சோசலிசத் தத்துவம் குறித்தும், படித்த மக்கள் மட்டுமே ஓரளவு அறிந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் பாமர மக்களும் அவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள வழிவகை செய்தவர்கள் பகத்சிங்கும் அவருடையத் தோழர்களுமேயாவர்.
ருசியா செல்ல பகத்சிங் திட்டம்
1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்கு முற்பட்ட இந்தியப் புரட்சியாளர்களில் பெரும்பாலோர் மத அடிப்படையிலான புரட்சிக்காரர்களாகவே இருந்தனர். இவர்கள் அனைவருமே விதிவிலக்கு இன்றி கடவுள் மற்றும் மத நம்பிக்கைக் கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், பகத்சிங்கும் அவரது தோழர்களும் விடுதலைப் போராட்டக் களத்திற்கு வந்தபிறகு, இந்தியப் புரட்சிகர அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் உருவாயின. பகத்சிங் புரட்சிக்காரராக மட்டும் இருக்கவில்லை. தீவிரமான நாத்திகராகவும் இருந்தார். மார்க்சு, லெனின், ட்ராட்சுகி போன்றோரால் இயற்றப்பட்ட நூல்களை ஊன்றிப் படித்து தெளிந்தார்.
1926ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய நவசவான் பாரத் சபா என்னும் புரட்சிகர அமைப்பு தனது நோக்கமாக "இந்தியாவில் விவசாயிகள் - தொழிலாளர்களின் முழுமையான சுதந்திரக் குடியரசை நிறுவுவதே'' என அறிவித்தது. 1928ஆம் ஆண்டு செப்டம்பரில் பலவேறு மாநிலங்களைச் சேர்ந்த புரட்சியாளர்களைக் கொண்ட கூட்டம் ஒன்றை பகத்சிங் கூட்டினார். இக்கூட்டத்தில் இந்துத்தான் சோசலிசக் குடியரசு இராணுவம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சோசலிசக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த புரட்சிக்காரர்களை இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை.
1917ஆம் ஆண்டு அக்டோபரில் ருசியாவில் நடைபெற்றதைப்போன்று ஒரு புரட்சியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதே இந்த அமைப்பின் திட்டமாக இருந்தது.
மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக இந்த அமைப்பு மற்றொரு இரகசியத் திட்டத்தைத் தீட்டியிருந்தது. ருசியப் புரட்சியின் அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்வதற்காக பகத்சிங்கை ருசியாவிற்கு அனுப்புவது என்பதே அத்திட்டமாகும்.
ஆனால், மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு வழக்கில் பகத்சிங்கும் அவருடைய தோழரும் கைது செய்யப்பட்டதனால் இத்திட்டம் தடைப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், நீதிபதியிடம் பகத்சிங்கும் தோழர்களும் ஒரு தந்தியைக் கொடுத்து கம்யூனிஸ்டு அகிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொண்டனர். அத்தந்தியில் "மாபெரும் மேதை லெனின் பிறந்த நாளில் அவரது கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். ருசியா மேற்கொண்டுள்ள பெரிய சாதனை வெற்றிபெற வாழ்த்துகிறோம். சர்வதேச தொழிலாளி வர்க்க குரலுடன் எமது குரலும் சேர்ந்து ஒலிக்குமாக. பாட்டாளி வர்க்கம் வாகை சூடும். முதலாளித்துவம் முறியடிக்கப்படும். ஏகாதிபத்தியம் ஒழிக.'' இச்செய்தியைப் பார்த்ததும் நீதிபதி மட்டுமல்ல, வெள்ளை அரசும் அதிர்ச்சியடைந்தது.
பகத் சிங் இறுதி மூச்சு அடங்கும் வரையில் தீரமிக்க புரட்சிக்காரராகவே விளங்கினார்.
காங்கிரசில் மாற்றம்
ருசியப் புரட்சியின் விளைவாகக் காங்கிரஸ் கட்சிக்குள் ஏராளமான மாற்றங்கள் உருவாயின. 1905 - ஆம் ஆண்டு முதல் 1907 - ஆம் ஆண்டு வரை ருசியாவில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் இருந்து தனது ஒத்துழையாமை இயக்கத்திற்கான கருவைக் காந்தியடிகள் பெற்றார். இதைப் பற்றிக் காந்தியடிகள் பின்வருமாறு எழுதினார். "1905-ஆம் ஆண்டு முதல் 1908-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மனுப்போடும் கட்டத்தைத் தாண்டி எதிர்ப்புக் களத்தில் அடியெடுத்து வைத்தது.'' ருசியாவில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களின் மூலம் ஜார் ஆட்சியை அந்நாட்டுத் தொழிலாளர்கள் ஸ்தம்பிக்க வைத்ததைப் பார்த்த திலகர் மகாராஷ்டிரத்திலும் வ.உ.சிதம்பரனார் தமிழ்நாட்டிலும், விபின் சந்திரபால் வங்காளத்திலும் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார்கள். இதையொட்டி இம்மாநிலங்களில் சுதேசி இயக்கங்கள் உருவாயின.
சுய ஆட்சி - பொறுப்பாட்சி (ஹோம் ரூல்) எனக் காங்கிரஸ் தலைவர்கள் அக்டோபர்ப் புரட்சிக்கு முன்பு வரை கூறிவந்தனர். "சுயராச்சியம் எனது பிறப்புரிமை'' என்று முழக்கமிட்ட திலகர் கூட சுயராச்சியம் என்பதை வெறும் டொமினியன் தகுதி என்ற கருத்தில்தான் கூறினார். அக்டோபர்ப் புரட்சிக்குப் பிறகே, சுயநிர்ணய உரிமை என்பது காங்கிரசுக் கட்சியின் குறிக்கோள் ஆயிற்று.
மொழிவழி மாநிலம்
1920 - ஆம் ஆண்டு காந்தியடிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்ற பிறகு ருசியாவின் ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கு என்று ஒரு குடியரசை அமைத்துக் கொண்டிருப்பதையும் அந்தத் தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் ஒன்றியமாகத் திகழ்வதையும் கண்ட காந்தியடிகள், காங்கிரசுக் கட்சியிலும் அதையே பின்பற்றினார். பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பல்வேறு மொழி பேசும் மக்களையும் கூட்டாக இணைத்துத் தமது நிர்வாக வசதிக்காகவும் சுரண்டல் வசதிக்காகவும் மாநிலங்களை உருவாக்கியிருந்தது. காந்தியடிகள் ஒவ்வொரு மொழிவாழ் மக்களுக்கும் ஏற்ற வகையில் காங்கிரஸ் கட்சியைத் திருத்தி அமைத்தார்.
எடுத்துக்காட்டாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சென்னை மாகாணத்தில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட்டு இருந்தன. சென்னை மாகாண காங்கிரசு என்று ஒட்டுமொத்தமாக இருந்த ஒரு அமைப்பைக் காந்தியடிகள் திருத்தி அமைத்தார். தமிழ்நாடு, ஆந்திரம் போன்றவைகளுக்குத் தனித்தனிக் காங்கிரசுக் கிளைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் ருசியாவைப் போல மொழிவழித் தேசிய இனங்களை காங்கிரசு கட்சி அங்கீகரித்தது.
1917-ஆம் ஆண்டு அக்டோபர்ப் புரட்சி ஒரு மகத்தான உண்மையை இந்திய விடுதலை வீரர்களுக்கு உணர்த்திற்று. தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பங்குகொள்ளாமல் எந்தப் புரட்சியும் முழுமையாக வெற்றிபெற முடியாது என்பதுதான் அந்த உண்மையாகும். படித்த மக்கள் மத்தியில் மட்டுமே இயங்கி வந்த காங்கிரசுக் கட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தன்பால் ஈர்க்க வேண்டும் என்ற சிந்தனையைப் பெற்றது. இதன் விளைவாகத் தொழிலாளர்கள், விவசாயிகள் இயக்கங்கள் தோன்றின. சோசலிச லட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளும் காங்கிரசுக் கட்சிக்குள் தோன்றின.
உலகக் கண்ணோட்டம்
அக்டோபர்ப் புரட்சியின் விளைவாகக் காங்கிரசு கட்சிக்குள் உலகக் கண்ணோட்டம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை மட்டுமல்ல உலகெங்கும் உள்ள ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படையையும், அத்தனை நாடுகளோடும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்ற உண்மையையும் உணர்ந்த காங்கிரசுக் கட்சி சர்வதேச மாநாடுகளில் பங்கெடுக்கத் தொடங்கியது.
1927ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிரசெல்சு நகரில் அடிமைப் படுத்தப்பட்ட நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் பிரதிநிதியாக சவகர்லால் நேரு கலந்து கொண்டார். இம்மாநாட்டில் 37 நாடுகளைச் சேர்ந்த 137 அமைப்புகள் பங்கேற்றன.
"அனைத்து வடிவங்களிலான சுரண்டல்களிலிருந்து இந்தியா விடுபடுவதும் முழுமையான விடுதலை பெறுவதும், உலகம் முழுவதிலு முள்ள அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் விடுதலையை நோக்கிய முக்கிய நடவடிக்கையாகும்'' என நேரு இம்மாநாட்டில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச லீக் அமைக்கப்பட்டது. இம்மாநாட்டில் பங்கேற்றப் பிறகுதான் நேரு சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் இந்தியா திரும்பியதும் சென்னையில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் முதன்மை வாய்ந்த இரு தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.
"முழுமையான விடுதலையே காங்கிரசு கட்சியின் இலட்சியமாகும்'' என்ற தீர்மானமும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான சர்வதேச லீக் அமைப்பில் காங்கிரசுக் கட்சியை இணைக்க வேண்டும் என்ற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ருசியாவிற்கு அருகே இருந்த பல்வேறு ஐரோப்பிய நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் அக்டோபர்ப் புரட்சியைப் பற்றிச் சரியான மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர். மாறாக, அந்தப் புரட்சியையே கொச்சைப்படுத்தியும், செய்திகளைத் திரித்தும் பொய்மைச் செய்திகளைப் பரப்பினர். புதிதாகப் பூத்துச் சோசலிச மணம் பரப்பிக்கொண்டிருந்த சோவியத் நறுமண மலரைக் கசக்கி எறியத் துடித்தனர். அதற்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் படை திரட்டின.
இந்தியாவில் இருந்த பிரிட்டிசு அரசு இந்திய மக்களிடம் அக்டோபர்ப் புரட்சியைப் பற்றிய உண்மையான செய்திகள் பரவிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டியது. செய்திகள் திரித்துக் கூறப்பட்டன. வெளியிலிருந்து உண்மையான செய்திகள் வரவிடாமல் தடுக்கப்பட்டன. அந்த நாளில் இந்தியாவில் உள்ள பத்திரிகைகளுக்குச் செய்திகளைத் தருவது ராய்ட்டர் என்னும் செய்தி நிறுவனமேயாகும். இந்நிறுவனம் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான செய்திகளை மட்டுமே கொடுத்து வந்தது.
பாரதி கண்ட யுகப்புரட்சி
இதற்கிடையில் பாரதி, ருசியாவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளைப் பற்றித் தொடர்ந்து கவனித்து உண்மையை உணர்ந்து அவ்வப்போது சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.
1917-ஆம் ஆண்டு அக்டோபர்ப் புரட்சி வெடித்தெழுந்து உலகையே குலுக்கிய போது அதனை சரியான முறையில் இனம் கண்டு கணித்தவர் பாரதியேயாகும். பல்வேறு பத்திரிகைகளின் மூலமும், நண்பர்கள் மூலமும் அவருக்கு தொடர்ந்து கிடைத்த செய்திகளை அலசி ஆராய்ந்து தொலை நோக்குடன் பார்த்து தீர்க்கமான முடிவு கண்டு உலகிற்கு அறிவித்தவர் பாரதி.
லெனின் தலைமையில் மூண்டெழுந்து வெற்றி பெற்ற அக்டோபர்ப் புரட்சி ருசியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளின் எதிர்காலத்தையே தலை கீழாகத் திருத்தியமைத்தது. நாகரிக உலகை அடிமைகொள்ளப் புறப்பட்ட பாசிச வல்லரக்கனை வீழ்த்திய பெருமை அக்டோபர் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்த சோசலிச நாடான சோவியத் நாட்டிற்கே உண்டு.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் நாடு வல்லரசாக எழுந்தது. அதன் விளைவாக உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்கள் நம்பிக்கையும், எழுச்சியும் பெற்றனர். அவர்களின் வாழ்வில் விடிவெள்ளி முளைத்தது.
ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் காலனி நாடுகளாக பன்னெடுங் காலம் திகழ்ந்து சுரண்டப்பட்ட ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகள் தங்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிந்து விடுதலைக் கொடியை உயர்த்திப் பிடிக்கத் துணையாக நின்றது சோவியத் நாடே ஆகும்.
இத்தகைய பல தொடர் மாற்றங்களை உலக நாடுகளில் ஏற்படுத்தப் போகும் புரட்சியாக அக்டோபர் புரட்சியை தனது தொலை நோக்கால் இனங்கண்ட பாரதி அதை யுகப் புரட்சி எனப் பாடியுள்ளார். கல்லின் மீது பொறிக்கப்பட்ட சொல் போல பாரதியின் யுகப் புரட்சி என்ற சொல் உலகத்தார் உள்ளங்களில் பதிந்துவிட்டது. நேற்றும் இன்றும் நாளையும், என்றென்றும் உலகம் உள்ளளவும் மறையாது; புரட்சி உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.
புத்துலக சிற்பி லெனின் கட்டமைத்த சோவியத் ஒன்றியம் கலைந்திருக்கலாம். ஆனால், அவர் ஏற்றி வைத்த அக்டோபர் புரட்சி என்னும் அசலதீபம் என்றென்றும் அணையா விளக்காக நின்று புரட்சி ஒளிக்கதிர்களைப் பரப்பி மானுட சமுதாயத்தை வாழ்விக்கும்.
(பழ. நெடுமாறன் எழுதிய "காலத்தை வென்ற காவிய நட்பு' என்னும் நூலிலிருந்து சில பகுதிகள்) |