இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் புதிய அரசியல் யாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையமும் மற்றும் பல்வேறு நாடுகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாளில் அரசியல் யாப்பு அவையை அமைக்கும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அரசியல் யாப்பு அவை கூடி அரசியல் யாப்பு வழிகாட்டும் குழு ஒன்றை தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைத்தது.
கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து இக்குழு வெளியிட்ட அரசியல் யாப்பின் நகல் தமிழர்களின் உரிமைகளைச் சிறிதளவுகூட ஏற்கவில்லை. அரசியல் சட்டம் பிரிவு 1 மற்றும் 2 ஆகியவற்றில் "இலங்கை என்றென்றும் பிரிக்கப்படமுடியாத ஒரே நாடாகத் திகழும். பிரிவினையைத் தடுக்கும் பல சிறப்புப் பிரிவுகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தச் சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு'' என்று கூறப்பட்டுள்ளது. எந்த நாட்டின் அரசியல் சட்டமாக இருந்தாலும் அது நீதியான மதிப்பீட்டிற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இந்த மதிப்பீடு காலப்போக்கில் மாற்றம் பெறக்கூடியதாகும். அதற்கேற்ப இச்சட்டம் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக வகுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தின் நகலில் முன் மொழியப்பட்டுள்ளவை உலக சட்ட வரையறைகளுக்கே முற்றிலும் முரணானது. தமிழர்கள் ஒரு தனித்துவ தேசிய இனத்தினர் என்பதையும், தமிழையும் சிங்களத்தோடு ஆட்சி மொழியாக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ளவே சிங்களர் மறுத்ததின் விளைவாகவே தமிழர்களின் தனிநாடு கோரிக்கை எழுந்தது என்பதே வரலாறாகும். புதிய அரசியல் யாப்பு நகலும், தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயலுகிறது.
அரசியல் சட்டம் இரண்டாவது அதிகாரம் பிரிவு 9 "புத்த சமயத்திற்கு முதலிடம் அளிக்கப்படும். புத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டியதும் வளர்க்க வேண்டியதும் அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். அதே வேளையில் மற்ற சமயங்களும் மதிப்புடன் நடத்தப்படும்'' எனக் கூறுகிறது. இலங்கையின் அரச சமயமாக புத்த சமயம் அறிவிக்கப்பட்டதின் மூலம் அச்சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடியரசுத் தலைவராகவும் தலைமையமைச்சராகவும் வரமுடியும் என்பதும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் புத்த சமயத்தின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதும் எழுதப்படாத சட்டமாகும்.
இந்தியாவின் அரசியல் சட்டம் சமய சார்பற்ற நாடாக இந்தியாவை அறிவித்துள்ளது. எனவேதான் இந்தியாவில் சிறுபான்மைச் சமயங்களைச் சார்ந்த முசுலிம்கள் மூவரும், சீக்கியர் ஒருவரும் குடியரசுத் தலைவர்களாகவும், சீக்கியர் ஒருவர் தலைமையமைச்சராகவும் சனநாயக ரீதியில் வர முடிந்துள்ளது. ஆனால், இலங்கையில் பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் இந்த உயர் பதவிகளுக்கு ஒருபோதும் வரவேமுடியாது.
31-10-2017 அன்று நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு வழிகாட்டும் குழு அளித்த இடைக்கால அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு இலங்கை அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன பேசும்போது "புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்ற அனைத்துக் கட்டங்களிலும் புத்த பிக்குகளின் முறையற்ற தலையீடுகள்'' இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். இலங்கை அரசியலில் புத்த பிக்குகளின் ஆதிக்கம் கையோங்கி இருப்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று தேவையில்லை.
அத்தியாயம் 2, 2வது பிரிவின்படி "தமிழ் மக்களின் தாயகமாகக் கருதப்படும் வடக்கு-கிழக்கு மாநிலங்களின் இணைப்பு என்பது வாக்கெடுப்பின் மூலம் முடிவுசெய்யப்படும். அல்லது இணைப்பே ஒருபோதும் கூடாது'' என இருவேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு இந்தியத் தலைமையமைச்சர் இராஜீவ்காந்தியும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவும் செய்துகொண்ட உடன்பாட்டின் படி வடக்கு-கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டது. இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட வேறுசில முக்கியப் பகுதிகளை இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்வதற்காக 1988ஆம் ஆண்டில் 13வது அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் மாகாண சட்டமன்றங்கள் அமைப்பதற்கான சட்டமும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. சிறிய நாடான இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு மாநிலமும் சிங்களர்களுக்கு ஏழு மாநிலங்களும் ஆக மொத்தம் 8 மாநிலங்கள் அமைக்கப்பட்டன. சிங்களர்களுக்கு தனி மாநிலம் தேவையில்லை. இலங்கையின் மத்திய அரசே சிங்கள அரசாக விளங்கும்போது தனியாக ஏழு மாநில அரசுகள் வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப் பட்டன. தமிழர்களுக்கென்று தனியான ஒரு தீர்வை அளிக்க சிங்கள அரசு விரும்பவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஆனால், 2006ஆம் ஆண்டு அக்டோபரில் ஜே.வி.பி. என்னும் சிங்கள தீவிரவாத அமைப்பு உச்சநீதிமன்றத்தில் "நிருவாக உத்தரவு ஒன்றின் மூலமே வடக்கு-கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டன. அரசியல் சட்ட ஒப்புதல் இதற்கு இல்லை. எனவே அரசியல் சட்டப்படி இது செல்லாது'' என வழக்குத் தொடுத்தது. அதை ஏற்று உச்ச நீதிமன்றமும் இந்த இணைப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்ற தீர்ப்பை வழங்கியது. இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக இவ்வாறு செய்யப்பட்டதை ஏன் என்று இந்திய அரசும் தட்டிக் கேட்கவில்லை.
புதிய அரசியல் யாப்பு நகலில் வாக்கெடுப்பின் மூலம் இரு மாநிலங்களும் இணைக்கப்படவேண்டும் என்று கூறுவது பித்தலாட்டமாகும். ஏனென்றால் கிழக்கு மாநிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவிட்டது. கிழக்கு மாநிலத்திலும் வடக்கு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் கிழக்கு மாநிலத்தை ஒருபோதும் வடக்கு மாநிலத்துடன் இணைக்க முடியாது. இரு மாநிலங்களையும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தினால்தான் தமிழர்கள் வெற்றிபெற முடியும். எனவேதான் சிங்கள அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாத சூழலில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்கு வழியில்லை. எனவே இரு மாநில இணைப்பு என்பது ஒரு போதும் நடைபெற இயலாது.
அரசியல் சட்டத்தின் 3வது அத்தியாயத்தில் 17வது பிரிவின்படி "மாநில ஆட்சிக்குட்பட்ட நிலம், இராணுவத்தின் பயன்பாட்டிற்குத் தேவையென தலைமையமைச்சர் ஆலோசனை வழங்கினால் அதை ஏற்றுக் குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இராணுவத்தின் தேவைக்காகவோ அல்லது மத்திய அரசின் தேவைக்காகவோ நிலத்தைப் பறிக்க முடியாது. மாநில அரசின் ஒப்புதலும் நில உரிமையாளர்களின் ஒப்புதலும் தேவை. அது மட்டுமல்ல உரிய இழப்பீடும் சட்டப்படி வழங்கப்பட வேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும். ஆனால், எத்தகைய எதிர்ப்பையும் மதிக்காமல் இராணுவத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் அதிகாரம் இலங்கை அரசுக்கே வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதி நிலம் இராணுவத்தால் கைப்பற்றப் பட்டுள்ளது. இச்செயலை நியாயப்படுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பு நகல் வகுக்கப்பட்டுள்ளது. கொல்லைப்புற வழியாகத் தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் திட்டமாகவே இது அமைந்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியக் காரணமே நிலப்பறிப்பே ஆகும். தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஒருபுறமும் சிங்கள இராணுவத்தின் தமிழர் நிலப்பறிப்பு மற்றொரு புறமும் சொந்த மண்ணிலேயே தமிழர்களை அந்நியப்படுத்தும் செயலாகும். இதை எதிர்த்துத்தான் தமிழர்கள் தொடர்ந்துப் போராடி வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் நிலமோ, அசையாத சொத்துகளோ வாங்குவதை அரசியல் சட்ட ரீதியாக இந்திய அரசு தடை செய்து அம்மக்களின் சொத்துரிமைகளைப் பாதுகாத்துள்ளது. அதே உரிமையை ஈழத் தமிழர்கள் கோரினால் சிங்கள அரசு மட்டுமல்ல இந்திய அரசும் பாராமுகமாக உள்ளது.
மொத்தத்தில் இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் நகல் ஈழத்தமிழர்களின் உரிமைகளை அடியோடு பறிப்பதைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் பல கூறுகளைக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
1972ஆம் ஆண்டிலும், 1978ஆம் ஆண்டிலும் கூட்டாட்சி முறைக்கு எதிராக ஒற்றையாட்சி முறையை வலியுறுத்தும் வகையில் வகுக்கப்பட்ட இலங்கை அரசியல் யாப்புகளை தமிழர்கள் ஏற்கவில்லை. அரசியல் யாப்பு அவையிலும் பங்கேற்கவில்லை. இப்போதும் புளித்துப்போன அதே பழைய கள்ளையே புதிய மொந்தையில் ஊற்றித் தருகிறது சிங்கள அரசு.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவவும் ஏமாற்றவும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்து பறிக்கவும் திட்டமிட்டுப் புதிய அரசியல் யாப்பின் நகல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்கின்றன. எனவே அந்நாடுகளும் ஐ.நா. பேரவையும் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்டு ஈழத்தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றவும் நிலை நிறுத்தவும் முன்வரவேண்டும். இல்லையேல் இலங்கையில் ஈழத்தமிழின அழிப்பு எவ்விதத் தயக்கமுமற்ற தொடர் நடவடிக்கையாகிவிடும்.
நன்றி: தினமணி 06-11-2017 |