இந்தி, ராஜஸ்தானியில் நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும்போது தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன்? - கே. சந்துரு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:21

கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், "உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட  வேண்டும்; தீர்ப்புகளின் நகல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். "பல்வேறு மொழிகளைக்  கொண்டது நம் நாடு. தீர்ப்பின் முக்கியமான, நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது'' என்றும் சுட்டிக்காட்டினார். இந்திய மக்களில் பெரும்பான்மையினரது கருத்தின் வெளிப்பாடாக நாம் இதைக் கருதலாம். ஆனால், அப்படிப்பட்ட நடைமுறைக்கு உண்டான  திறவுகோல் அவர் கையிலேயே இருக்கிறது!

தமிழகம் முன்னெடுத்த விவாதம்

இராசசுதான், உத்தர பிரதேசம் இந்த இரு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதாடுவதற்குத் தடையில்லை.  மேலும், அவர்களது மாநில மொழிகளிலேயே வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் வசதி உண்டு. ஒருவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி  தனது தீர்ப்பை ஆங்கிலத்தில் பகர நேர்ந்தால், அதனுடைய மொழிபெயர்ப்பை அந்தந்த மாநில மொழியில் மொழிபெயர்த்து நகல் வழங்க வேண்டும் என்று சட்டம்  உள்ளது.

நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் ஆட்சிமொழிகளில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாகவே தமிழ்நாடு வலியுறுத்திவருகிறது.
நாட்டிலேயே முன்னோடியாக 2006-ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழையும் கூடுதல் ஆட்சிமொழியாக ஆக்குவதற்கான  நடவடிக்கையை முன்னெடுத்தது. இதற்காக ஆளுநரை அணுகும் முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரினார் கருணாநிதி. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்னிலையில் கூடிய அனைத்து நீதிபதிகள் கூட்டம் ஒருமனதாக அதற்கு ஆதரவு அளித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2)-ன் கீழ், "ஒரு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் ஆட்சி மொழியாக அந்தந்த மாநிலத்தின் மொழி பயன்படுத்தப்பட வேண்டும்'' என்றால்,  அம்மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அறிக்கை வெளியிட வேண்டும். விளைவாக, மத்திய அரசின் கைக்கு இத்தீர்மானம் சென்றது. மத்திய  அரசு தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. அன்றைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு அனுமதி தர  மறுத்துவிட்டார். "இப்போதைய நடைமுறையில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வேறு மாநிலத்திலிருந்து வருகிறார். தவிர, பல நீதிபதிகள் ஊர் மாற்றத்தில்  பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் சூழல் இருக்கிறது. ஆகையால், இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது'' என்பது அப்போது காரணமாகச் சொல்லப்பட்டது. அடுத்து,  வங்கம் இதே போன்ற கோரிக்கையை முன்வைத்தது. அதுவும் நிராகரிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்துக்கு முரண்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படியான மறுப்பு அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானது என்பதாகும். மக்களின் நலன் கருதி இப்படியான
மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியம் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது, "இந்தியாவின் ஆட்சிமொழி ஆங்கிலம் என்பது 15 வருட காலத்தில் மாற்றப்பட்டு, இந்தி ஆட்சிமொழியாகும்'' என்று  கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், "நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆட்சிமொழியாக ஆங்கிலமே நீடிக்கும்'' என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மாநில மொழிகளைப்  படிப்படியாக பயனுக்குக் கொண்டுவரும் வகையில் பிரிவு 348(2) பின்னர் உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு அந்தச் சட்டப் பிரிவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆட்சிமொழியாக இருப்பினும் அந்தந்த மாநில மொழிகள்
துணை ஆட்சிமொழிகளாகத்தான் இருக்க முடியும். அதைக் கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சட்டப் பிரிவின் நோக்கம்நிறைவேற்றப்பட வேண்டியதற்கான காரணம், மாநில மொழிகளும் உயர் நீதிமன்றங்களில் கூடுதல் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட  வேண்டும் என்பதும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை அந்தந்த மாநில அரசு உருவாக்க வேண்டும் என்பதும்தான்.

ஏன் வேண்டும் மாநில மொழி?

அந்தந்த மாநில மொழிகள் கூடுதல் ஆட்சிமொழிகளாக உயர் நீதிமன்றங்களில் பயன்பாட்டுக்குவருவது ஒரு பக்கத்தில் வழக்காடிகள் வழக்குகளைப் புரிந்து
கொள்வதோடு மறுபுறம் ஆட்சி அமைப்பை ஜனநாயகப்படுத்தவும் வழிவகுப்பதாகும். இதனால் எவ்வகையிலும் நீதிமன்றங்களில் ஆங்கிலப் பயன்பாடு குறைந்துவிடாது.  தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டால் அதன் மொழிபெயர்ப்பு மாநில மொழிகளிலும் கிடைக்கும். தலைமை நீதிபதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் பதவி  வகித்தபோது "இதுகுறித்து முயற்சி எடுப்பேன்'' என்று கூறினார். என்றாலும் பலன் ஏதுமில்லை.

தமிழுக்கான நெடிய போராட்டம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சார்ந்து மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 1956-ம் வருடத்திய ஆட்சி அலுவல் மொழிச் சட்டத்தில்  1976-ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அச்சட்டத்தில் 4-பி என்ற புதிய பிரிவு நுழைக்கப்பட்டது. அதன்படி அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் கட்டாய  ஆட்சிமொழியாக்கப்பட்டது. இப்பிரிவு சட்டப்படி நடைமுறைக்கு வரும் முன்னரே, ஒரு முன்சீப் தமிழில் தனது தீர்ப்பை அளித்தார். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

"தமிழ் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே இப்படித் தீர்ப்பளித்தது தவறு'' என்று கூறி அத்தீர்ப்பை 1978-ல் ரத்துசெய்தது உயர் நீதிமன்றம். கருணாநிதி அரசு 1976-ல் கொண்டுவந்த சட்டத் திருத்தம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆறாண்டுகள் கழித்து 1982-ல் அதை அமலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்து  அரசாணை கொண்டுவந்தது எம்ஜிஆர் அரசு. இதையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. "தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுவருவது அரசமைப்புச் சட்டத்துக்கு  விரோதமானது'' என்று வாதாடினார் இந்த வழக்கைத் தொடர்ந்த ராஜஸ்தானிய வழக்கறிஞர் ரங்கா. இது சம்பந்தமான வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.சீனிவாசன்  அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்குகளைத் தள்ளுபடிசெய்து, "தமிழ் ஆட்சிமொழியாக இம்மாநிலத்தில் இருப்பதால் அதை நீதிமன்றங்களிலும் அமல்படுத்தும்  சட்டத்திருத்தம் செல்லும்'' என்று 21.4.94-ல் தீர்ப்பளித்தனர்.

பிறக்கும் முன்னரே புதைக்கப்பட்ட சிசு

இதற்கு இடையிலேயே இன்னொரு கொடுமையும் நடந்தது. இவ்வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே கர்நாடக நீதிபதி கே.ஏ.சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1.7.93-ல் நியமிக்கப்பட்டார். தமிழில் தீர்ப்பளிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு கேட்டு, தமிழில் சரியான பரிச்சயமில்லாத நீதிபதிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி இருந்தனர். அவற்றின் தனித்தன்மையைப் பரிசீலித்து தகுதிக்கேற்ப விதிவிலக்கு அளிக்காமல் 5.1.94 அன்று தலைமை நீதிபதி கே.ஏ.சுவாமி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

அதாவது, "கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களது விருப்பப்படி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்புகளை அளிக்கலாம்'' என்பதே சுற்றறிக்கையாகச்  சென்ற அந்த உத்தரவின் சுருக்கம். தமிழ்நாட்டு அரசின் அலுவல் மொழிச் சட்டத்துக்கு விரோதமானது அது. தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழிக் கொள்கையை  அச்சுற்றறிக்கை குழி தோண்டிப் புதைத்துவிட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட உயிர்

நீண்ட காலத்துக்குப் பின் நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு இந்தத் தமிழ்க் கனவைத் தோண்டி மீட்டெடுத்தது. 2016-ல் உயர்
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்துசெய்து, கீழமை நீதிமன்றங்களில் கட்டாயத் தமிழ்ப் பயன்பாட்டை நிலைநாட்டினர் இந்த நீதிபதிகள். ஆனால், அவ்வழக்கில் ஒரு சென்னை வழக்கறிஞர் மேல் முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, உயர்  நீதிமன்றத்தின் சீராய்வு மனு தீர்ப்புக்கும் தடை விதித்தது. இந்த வழக்கில் தங்களையும் பிணைத்துக்கொள்ள இதுவரை தமிழக அரசு முன்வராதது இங்கே அவசியம்  குறிப்பிட வேண்டிய துயரக் கதை.

மத்திய ஆட்சியில் உள்ளவர்களும், உச்ச நீதிமன்றமும் மக்கள் நலனுக்கு நேர் விரோதமாக இப்படிச் செயல்படுவது வருத்தத்துக்குரியது. இரு விசித்திரமான சூழல்களை  நாம் மாற்றி அமைக்க வேண்டும். முதலாவது, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக உயர் நீதிமன்றங்களில் மாநில மொழி உரிமை மறுக்கப்படுவது. இந்தியும், ராஜஸ்தானியும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் முழங்கப்பட்டுவரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழிகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு மறுக்கப்படுவது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட  விரோதச் செயல்பாடு!

இரண்டாவது, தமிழே ஆட்சிமொழி என்று மாநில அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சொந்த மொழி மறுக்கப்படுவது. சட்ட அரங்கிலும் அரசியல் அரங்கிலும் மாற்றத்துக்கான குரல்கள் ஓங்கி ஒலிப்பதே இதற்கான தீர்வாக அமையும்! ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை தன்னுடைய பிரதாப முதலியார் சரித்திரத்தில் குறிப்பிட்டது இங்கு நினைவுகூர்வது  பொருத்தமாக இருக்கும்.

"கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள்.  அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவதுபோல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்?  குருடன் கூத்துப் பார்க்கப் போனதுபோலவும், செவிடன் பாட்டுக் கேட்கப்போனது போலவும் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்!''

-முன்னாள் நீதிநாயகம்,கே.சந்துரு,
சென்னை உயர் நீதிமன்றம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.