27-11-2017 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சை - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றபோது தலைவர் பழ. நெடுமாறன், துணைத்தலைவர்கள் ம.பொன்னிறைவன், பேரா. சி. இராமமூர்த்தி, சா. இராமன், எஸ்.ஜி.கே. நிஜாமுதீன், செயலாளர் - நாயகம் ந.மு. தமிழ்மணி, செயலாளர்கள் எஸ். செளந்தரபாண்டியன், ஜோ. ஜான்கென்னடி, து. குபேந்திரன், பி. வரதராசன், மு. சந்திரன், அறக்கட்டளை உறுப்பினர் வ. தீனதயாளன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சி. முருகேசன், எம்.ஆர். மாணிக்கம், தி.மா. பழனியாண்டி, பொன். வைத்தியநாதன், வைகறைவாணன், செ.ப. முத்தமிழ்மணி, பேரா. சிலம்பு நா. செல்வராசு, இரா. இளமுருகன், அருட்தந்தை பாலு, புலவர் இரத்தினவேல், க. தெய்வசிகாமணி, மறை. தி. தாயுமானவன், பேரா. த. மணி, கா. தமிழ்வேங்கை, மரு. கண்ணன், முனைவர் சு. தமிழ்வேலு, முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பே. லோகநாதன், சாமி. கரிகாலன், பா. இறையெழிலன், சுப. உதயகுமாரன், இரா. முரளிதரன், சி. அறிவுறுவோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் செயலாளர் - நாயகம் ந.மு. தமிழ்மணி வரவேற்றார். செயலாளர் ஜான்கென்னடி 2013 முதல் 2017 வரையிலான ஐந்தாண்டு கால வரவு-செலவு திட்டம் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றை விளக்கினார்.
தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வைப்பு நிதியாக ரூ. 2கோடி திரட்டவேண்டும், மாவட்டந்தோறும் உள்ள தமிழர் அமைப்புகளையும், வெளிநாடுகளில் இயங்கிவரும் தமிழர் அமைப்புகளையும் உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைப்பது குறித்தும் மற்றும் முற்றத்தில் நூலகம், திறந்தவெளி கலை அரங்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம்
உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்கக் காலத்திலிருந்து அதன் வளர்ச்சிக்கு பெருந்துணையாக விளங்கிய மருத்துவர் பொன். சத்தியநாதன் (ஆத்திரேலியா), உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினராகத் திகழ்ந்த திரு. கலைச்செல்வன் (மியான்மர்), முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சிற்பங்களுக்குத் தனது ஓவியங்களின் மூலம் உயிரூட்டிய ஓவியர் வீர. சந்தனம், ஆட்சிக்குழு உறுப்பினரான பேரா. இரா. பத்மானந்தன் ஆகியோரின் மறைவிற்கு இந்த ஆட்சிக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
மறைந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
தீர்மானங்கள்
1. 18-05-17 அன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் ஆட்சிக்குழு, நிர்வாகக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டபடி அமைக்கப்பெற்ற ஆட்சிக்குழு, பொறுப்பாளர்குழு ஆகியவற்றுக்கு இந்த ஆட்சிக் குழு ஒப்புதல் அளிக்கிறது.
2. முள்ளிவாய்க்கால் நிரந்தர வைப்பு நிதியாக ரூ. 2 கோடி திரட்டுவது என இக்குழு முடிவு செய்கிறது. இந்த நிதிக்கு அள்ளித்தர முன்வருமாறு உலகத் தமிழர்களை ஆட்சிக்குழு வேண்டிக்கொள்கிறது. மேலும் நிதித் திரட்டும் பணியினை முனைப்புடன் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொறுப்பாளர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரமைப்புடன் இணைந்துள்ள தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோரை இக்குழு வேண்டிக்கொள்கிறது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பவர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வைப்பு நிதிக்காக ரூ. 10,000/-ம் நன்கொடையும், அமைக்கப்படவிருக்கும் நூலகத்திற்கு குறைந்த அளவு 100 நூல்களும் வழங்குதல் வேண்டும். இவ்வேண்டுகோளை அனைவரும் தவறாது கடைப்பிடிக்குமாறு ஆட்சிக்குழு வேண்டிக்கொள்கிறது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் தலைவரிடம் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வைப்பு நிதி வழங்கினர்.
துணைத்தலைவர் பேரா. சி. இராமமூர்த்தி - ரூ. 1 இலக்கத்திற்கான காசோலை செயலர் செளந்தரபாண்டியன் - ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலை
கீழ்க்கண்டவர்கள் நிதியளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
துணைத் தலைவர் து. குபேந்திரன் - ரூ. 25ஆயிரம் ஆட்சிக்குழு உறுப்பினர் செ.ப. முத்தமிழ்மணி- ரூ. 50ஆயிரம் செயலர் மு. சந்திரன்- ரூ. 25 ஆயிரம் மற்றும் 500 நூல்கள்
அனைவருக்கும் செயலாளர் - நாயகம் ந.மு. தமிழ்மணி நன்றி கூறினார். |