இன்று ஈழ மண் எமது என்று நாம் உரிமை கொண்டாடுவதற்கான அத்தனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி விரிவாக நான் சொல்லத் தேவையில்லை. செய்திகளில் நீங்களே படித்திருப்பீர்கள். உங்கள் உறவுகளின் ஊடாக அறிந்தும் இருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாக சென்று பார்த்தும் வந்திருப்பீர்கள்.
இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன? செய்யக் கூடியது ஏதேனும் உள்ளதா? அதுவும் இத்தனை மைல்கள் தள்ளி நின்று நம்மால் என்ன செய்ய முடியும்?
இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காணும் முன், அதாவது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முன், நாம் தீர்மானிக்க வேண்டியது நமது செயல்கள் எதை நோக்கி இருக்க வேண்டும். அதாவது, நம் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்.
நமது இலக்கு என்ன?
இங்கு கூடியுள்ள நம்மை நோக்கி நமது இறுதி இலக்கு என்ன என்று கேட்கப்பட்டால் நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் "தமிழீழம்' என்றுதான் கூறுவோம். ஆனால் தனிப்பட்ட முறையில் "தமிழீழத்திற்கான சாத்தியம் இன்னமும் உள்ளது என்று நம்பவா செய்கிறீர்கள்?' என்று கேட்டால்.. "தெரியவில்லை.. இல்லை..' என்று தெளிவற்ற பதில்களையேகேட்க முடிகிறது.
2009-க்கு முன் தமிழீழம் என்ற கனவு நமக்கு மிக அருகில் இருந்தது. கைக்கு எட்டிவிட்டாற் போல் இருந்தது. ஆனால் 2009-இல், இதோ இந்த நாளுக்குப் (முள்ளிவாய்க்கால் நினைவு தினம்) பின்.. திடீரென அனைத்தும் கைநழுவியது போல் உணர்ந்தோம். தமிழீழம் இனி சாத்தியமே இல்லை என்று "நம்ப'த் தொடங்கினோம். அது வரை, எதிர்காலம் நம் நாட்டில், என்று புலம் பெயர்ந்த நாடுகளில் வேர் விடாமல், நாட்டிற்குத் திரும்புவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டு இருந்த நாம், 2009-க்கு பின் இனி நம் எதிர்காலம் இங்கே தான் என்று நம்பினோம். இதுதான் நம் நாடு என்று வாழவும் தொடங்கி விட்டோம். இடையில், நம் கனவையும் கடந்த காலத்தையும் மறக்க இயலாமல் இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொண்டு நம் குற்ற உணர்வை ஆதங்கத்தைத் தணித்துக் கொள்கிறோம்.
இதை நான் நிச்சயம் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் இதுதான் இன்றைய உண்மை நிலை. ஏனெனில் நமக்கு விழுந்த அடி அத்தனை மோசமானது. அத்தனை பலமானது. அதிலும் கைக்கு எட்டும் நிலையில் தட்டிவிடப்பட்ட வலி மிகக் கொடியது. அந்த அடியும் வலியும் நம்மை தடுமாறச் செய்துள்ளது. அது இயற்கைதான். இவ்வளவு பெரிய அழிவிலிருந்து.. இவ்வளவு பெரிய உளவியல் தாக்குதலிலிருந்து நாம் மீள்வது அத்துணை எளிதானது இல்லைதான்.
தமிழீழம் சாத்தியமா இல்லையா என்ற கேள்விக்குப் போவதற்கு முன் தமிழீழம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கே நாம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஏன் நமக்கு தமிழீழம் வேண்டும்?
இறந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான உண்மையான அஞ்சலி அதுதான் என்ற உணர்வுப்பூர்வமான காரணத்தைக் கடந்து, நடைமுறையில் நமக்கு தமிழீழம் என்பது ஏன் தேவையாக உள்ளது?
ஏன் இங்கு சீனர்கள் தலைமுறை தலைமுறையாக வாழவில்லையா? எத்தனையோ நாடுகளிலிருந்து எவ்வளவோ பேர் இங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்கிறார்களே.. அதே போல் நாங்களும் வாழ்ந்து விட்டுப் போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நாளை சீனர்களுக்கு இந்த நாட்டில் சிக்கல் என்றால் அதை கேள்வி கேட்க சீனா என்ற ஒரு நாடும் அதன் அரசாங்கமும் வரும். உங்களுக்கு ஒன்று என்றால் கேள்வி கேட்க சிறிலங்காவோ இந்தியாவோ வருமா?
நமது தொன்மையான நிலமான, நமது மூதாதையர் பல ஆயிரம் காலங்கள் வாழ்ந்த நிலமான, நமக்கு எல்லாவித உரிமைகளும் உள்ள நிலமான ஈழத்திலிருந்தே நாம் வெளியேற்றப் படுவோமானால் வேறு எந்த நிலம்தான் நமக்கு நிரந்தரமானது?
நாம் நம் கிளைகளை உலகெங்கும் பரப்பலாம். ஆனால் வேரூன்றி நிற்க நம்கென ஓர் இடம் வேண்டும். அதுதான் தமிழீழம்.
அதை எவ்வாறு அடைவது?
தமிழீழத்தை அடைவது என்பது செங்குத்தான மலை மீது ஒரு பெரும் கற்பாறையை உருட்டிச் செல்வது போன்றதுதான். 1970-களின் இறுதியில்இ யக்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் நம் மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அந்தப் பாறையை மலையின் அடிவாரம் வரை சிரமப்பட்டு உருட்டி வந்துவிட்டார்கள். இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபின் நம் தலைவர் மலை உச்சியை நோக்கி பாறையை உருட்டத் தொடங்கினார். எத்தனையோ போராளிகளின் வீரத்தின் தியாகத்தின் துணையுடன் அவர் ஏறத்தாழ உச்சி வரை உருட்டி வந்து விட்டார். உச்சியை நெருங்கும் போது அவர் மீதான தாக்குதல் அதிகமானது. அந்த நிலையில்தான் அவர் ஓர் உரை நிகழ்த்தினார். 2008-ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் புலம் பெயர் தமிழர்களை, குறிப்பாக இளைஞர்களை நோக்கி அவர் வேண்டுகோள் விடுக்கிறார். இனி பாறையை உச்சிக்குக் கொண்டுச் செல்வது உங்கள் பொறுப்பு என்கிறார்.
அவர் கணித்தது போல, பாறையைத் தொடர்ந்து அவரால் உருட்ட முடியாத நிலை 2009 மே மாதம் ஏற்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்னரே நான் அழைப்பு விடுத்து விட்டேன். நிச்சயம் அதை புலம் பெயர் மக்களும் இளைஞர்களும் தொடர்வார்கள் என்று நம்பினார். ஆனால் என்ன நடந்தது? அவரால் தொடர்ந்து உருட்ட முடியாத நிலை ஏற்பட்ட உடன் அய்யோ போயிற்றே என்று கதறினோமே ஒழிய ஓடோடிச் சென்று அந்தப் பொறுப்பை ஏற்க நம்மில் எத்தனை பேர் முன் வந்தோம்?
2009 வரையில், ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் அந்த பாறையை உருட்ட நாமும் கைக் கொடுத்தோம். குறைந்த பட்சமாக சுற்றி நின்று உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தோம். நாம் அனைவரும் அவருடன் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருக் கட்டத்திலும் உறுதிப் படுத்தினோம். அந்த நம்பிக்கையில்தானே அவர் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்தார்? என்னால் ஒரு வேளை மேலே உருட்டிச் செல்ல முடியாமல் போனால், அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்று முன் செல்லுங்கள். பாறையை கீழே வழுக்கி விழ விட்டு விடாதீர்கள் என்று வேண்டினார்? ஆனால் நாம் என்ன செய்தோம்? அவரால் முன்னே நகர்த்த முடியாத நிலை வந்த உடன் நாமும் கை விட்டு விட்டு விலகி நிற்கிறோம். ஏறத்தாழ உச்சி வரை அவர் கொண்டு வந்து விட்டார். இன்னும் கொஞ்சம் தூரம்தான். ஆனால் அந்த கொஞ்ச தூரத்தை கடக்க இயலாமல் நாம் நம்பிக்கையற்று நிற்கிறோம்.
தமீழத்திற்கான போராட்டம் 2009-க்கு முன் 60 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில் முதல் 30 ஆண்டுகள் இலங்கையைத் தாண்டி தமிழகத்தில் கூட யாருக்கும் இப்போராட்டம் குறித்தோ, இந்தச் சிக்கல் குறித்தோ தெரியவில்லை. அடுத்த 30 ஆண்டுகள் தமிழகம் அறிந்தப் போராட்டமாக இது மாறியது. தமிழகம்போ ராட்டத்திற்கு துணை நின்றது. 2009-க்கு பின் உலகறிந்தப் போராட்டமாக இது மாறி நிற்கிறது. அய். நா. அவையில் ஆண்டு தோறும் பேசப்படும் சிக்கலாக அது உருவெடுத்து இருக்கிறது. அந்த உயரத்திற்கு இப்போராட்டத்தைத் தலைவர் கொண்டு சென்றுள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இந்த உயரத்தை அடைய செய்துள்ளனர். அதை பயன்படுத்திக் கொண்டு முன் சென்று இறுதி இலக்கை அடைவதை விட்டுவிட்டு சோர்ந்து கிடப்பது எப்படி சரி? நம்பிக்கை இழப்பது எப்படி சரி?
சொல்லப் போனால் மிச்ச தூரத்தை கடக்க நாம் நடத்த வேண்டிய போராட்டம் அரசியல் போராட்டமே அன்றி ஆயுதப் போராட்டம் அல்ல. அதாவது உயிரிழப்பற்றப் போராட்டம். அதாவது நாம் உயிரை பணயம் வைக்க வேண்டியதில்லை. கழுத்தில் குப்பி மாட்ட வேண்டியதில்லை. நம் குடும்பத்தைப் பிரிந்திருக்கத் தேவையில்லை. எங்கோ காட்டுக்குள் வாழ வேண்டியதில்லை. நம் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு, வருமானத்தை ஈட்டிக் கொண்டு, எதிர்காலத்திற்குச் சேமித்துக் கொண்டு, சராசரியான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டே போராடலாம். இத்துணை வசதியானப் போராட்ட களத்தில் தான் நம்மை தலைவர் விட்டுச் சென்றுள்ளார். அந்தக் களத்தில் போராட நமக்கு தேவை நம்பிக்கையும் உறுதியும் மட்டுமே! ஆனால் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இல்லாதது இவை இரண்டும் மட்டுமே.
இங்குதான் சிங்களப் பேரினவாதம் உண்மையில் வெற்றி கண்டுள்ளது. போர்க் களத்தில், முள்ளிவாய்க்காலில் நம் மக்களை கொன்று அது எந்த வெற்றியையும் ஈட்டவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய இழப்பைக் கண்டு கொதித்து எழாமல் சோர்ந்து நம்மை விழ வைத்ததில்தான் அது வெற்றி கண்டுள்ளது. தமிழீழம்இ னி சாத்தியமில்லையோ என்ற அய்யத்தை நம் மனதில் விதைத்து வளர்க்கிறது. அதற்கான உரமாக, போர்க் குற்றங்களைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு நம்மை அதைப் பற்றி மட்டுமே பேச வைக்கிறது.
இவ்வளவு பெரிய அழிவு நடந்து விட்டது. இதற்கு மேல் நடக்க என்ன இருக்கிறது. இனி சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வது எந்த விதத்திலும்எ ங்களுக்கு பாதுகாப்பானது இல்லை. அதனால் எங்களுக்கு ஒரு நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று நாம் கேட்டு விடுவோமோ என்ற அச்சத்தில்தான், அவர்கள் தொடர்ந்து போர்க் குற்றங்களை விசாரிக்கிறோம்.. சிறிலங்காயை தண்டிக்கப் போகிறோம் என்று கடந்த 8 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். இந்த காலம் நீடிக்க நீடிக்க தமிழீழம் என்ற கோரிக்கை நீர்த்து போய், வலுவிழந்து போய், போர்க் குற்றங்களுக்கு தண்டனை வழங்கினால் போதும் என்ற நிலைக்கு நாம் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் ஆவல்.
2009-ஆம் ஆண்டு சிறிலங்கா அரசின் "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை'யைப் பாராட்டி அய். நா. மனித உரிமைகள் அவை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் இந்தச் சிக்கலை அவர்கள் அப்படியே கைவிட்டிருக்கலாம். ஆனால் அப்படி விட முடியாமல் இந்த 8 ஆண்டுகளாக பேசும்படியான நிலைமை இருப்பதற்கு காரணம் இரண்டு. ஒன்று தலைவர் நிறுத்திய இடத்திலிருந்து பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு மேலே நகர முடியாவிட்டாலும் பின்னோக்கிச் செல்லாதவாறு தாங்கிபிடித்து நிற்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர். மற்றொரு புறம், நடந்தவைக்கான பதிலை எங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும் என்று தங்களுக்கு உள்ள உயிர் அச்சுறுத்தலையும் மீறி தாயகத்தில் அரசியல் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ள மக்கள்.
இவர்கள் ஏற்படுத்தும் அழுத்தம்தான் உலக நாடுகளையும் அய். நா. வையும் தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் நம் சிக்கலை குறித்து தொடர்ந்து விவாதிக்க வைக்கிறது. நம் அழுத்தம் அதிகமானால் விளைவுகள் நமக்கு சாதகமாக திரும்பும்.
அதற்கு நமக்கு தேவை உறுதியும் நம்பிக்கையும். அதாவது தமிழீழத்தை அடைவோம் என்ற உறுதியும் நம்பிக்கையும்.
அந்த தமிழீழத்தை அடைய நமக்கு முதன்மைத் தடையாக இருப்பது நம்முடைய அவநம்பிக்கைதான். அந்த அவநம்பிக்கையை நாம் வெற்றி கண்டு விட்டால், உலக ஒழுங்கை நமக்குச் சாதகமாக திருப்புவது அப்படி ஒன்றும் கடினமானது அல்ல.
உலக ஒழுங்கு என்பது எப்போதும் ஓரே மாதிரியாகவே இருந்துள்ளது. அதாவது, அரசுகளின் ஆட்சியாளர்களின் நன்மை சார்ந்ததாக. ஒரு நாட்டை ஆதரிப்பது அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கு நன்மையாக இருந்தால் ஆதரிப்பார்கள். இல்லையெனில் தாக்குவார்கள். இவ்வளவுதான். அந்த அரசையும் ஆட்சியாளர்களையும் ஆதரிக்க வைப்பதில், உலக ஒழுங்கை நம் வசமாக மாற்றுவதில்தான் நம் திறன் உள்ளது.
நம் குழந்தைகள் அவரவர் வாழும் நாட்டின் மொழியை நன்கு கற்றுள்ளனர். அதை நம் இனத்திற்கான பலமாக நாம் மாற்ற வேண்டும். அவர்களைக் கொண்டு இந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தினருடன் நட்பு பேணி அவர்களிடம் நம் சிக்கலைத் தொடர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பேசுவதன் மூலமாக மட்டுமே ஒரு கருத்துருவாக்கத்தை நாம் செய்ய முடியும்.நம்மிடம் உள்ள சிக்கல் என்னவென்றால் நாம் நமக்குள் மட்டுமே பேசிக் கொள்கிறோம். அல்லது ஏற்கெனவே நம் சிக்கலை அறிந்தவர்களிடம் மீண்டும் மீண்டும் பேசுகிறோம். அது நமக்கு வசதியாக உள்ளது. எதிர் கருத்தில் உள்ளவர்களிடமோ அல்லது எதுவுமே அறியாதவர்களிடமோ நாம் இது குறித்து பேசுவதில்லை. பணிச் சூழலில் உடன் இருப்பவர்களிடம் பேச நமக்கு தயக்கமாக உள்ளது. அந்தத் தயக்கத்தை உடையுங்கள். நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழாவா? நம் குழந்தைகளின் நண்பர்களாக உள்ள வேற்று இன குழந்தைகளை அழையுங்கள். அவர்களுக்கும் நம் வரலாறை, நம் இழப்பை, நம் போராட்டத்தை, அதிகமாக இல்லாத படி சற்றேனும் சொல்லுங்கள். அவர்கள் பெற்றோரிடம் இயல்பாக சொல்லுங்கள். நம் வீட்டு விழாக்களுக்கு மட்டுமல்ல, மாவீரர் நாளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்கும் நம் குழந்தைகளின் நண்பர்களை, அவர்கள் குடும்பத்தினரை, நம் உடன் பணி புரிபவர்களை அழையுங்கள். தயக்கம் காட்டாமல் அழையுங்கள். வருவதும் வராததும் அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் என்று நீங்களாக முடிவு செய்யாமல் அழையுங்கள்.
அதனால் என்ன பயன் என்று யோசிக்கலாம். நம்புங்கள். இவையெல்லாம் தான் கருத்துருவாக்கத்திற்கான அடிப்படைகள்.ஒரு யூதரை பார்த்தாலே அவர்களுக்கு எதிராக நடத்தப்பெற்ற இனப்படுகொலை நமக்கு நினைவு வருவது போல் நம்மைப் பார்த்தாலே நம் இழப்பு உலகெங்கும் உள்ள அனைவருக்கும் நினைவுக்கு வர வேண்டும். அந்த இழப்பை ஏற்படுத்தியவர்களும் நினைவுக்கு வர வேண்டும். அதுதான் சிறிலங்கா அரசுக்கு நாம் கொடுக்கக் கூடிய உண்மையான உளவியல் நெருக்கடியாக இருக்கும்.
சானல் 4-இன் முதல் காணொளி வெளியிடப்பட்ட போது சந்திரிகாவின் மகன் அவமானமாக உள்ளது என்று கதறினானே.. அந்த அவமானம்தான் சிறிலங்காவுக்கு எதிரான ஆகப் பெரும் ஆயுதம். நாம் இழந்தோம் என்பது நமக்கு அவமானம் அல்ல. அப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றிய சிறிலங்காதான் அவமானப்பட வேண்டும். நாம் அல்ல. அந்த அவமானத்தை உலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்படுத்துவதே நமது இலக்கை நோக்கி நாம் நகர்வதற்கான பெரும் உந்துதலாக இருக்கும். அதை ஏற்படுத்த நாம் தொடர்ந்து பேச வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழர்களைக் கடந்து பிற இனத்தவரிடம் பேச வேண்டும். சாதாரண மக்களிடமும், அதிகாரத்தில் இருப்பவர்களிடமும், அனைவரிடமும் பேச வேண்டும். பேசுங்கள். பேசுங்கள். நமக்காக தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யக் கூடிய ஒரே நன்றிக்கடன் இதுவாகவே இருக்க முடியும்.
தொடர்ந்து பேசுவோம்! தமிழீழத்தை வெல்வோம்! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
(கடந்த மே 18, 2017 அன்று கனடாவில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பூங்குழலி ஆற்றிய உரை) |