பழியைத் துடைப்பீர் - அறத்தைக் காப்பீர்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:05

இந்தியத் நீதித் துறை வரலாற்றிலும் மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பிலும் இதுவரை நிகழாத இரு நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன.

இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூவர் கொண்ட ஆயத்திற்குத் தலைமை தாங்கிய நீதியரசர் கே.டி. தாமஸ் 18-10-17 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளார். அக்கடிதம் இப்போது 17-11-17 அன்று வெளியாகியுள்ளது.

"1991ஆம் ஆண்டிலிருந்து 26 ஆண்டு காலமாக சிறையிலிருந்து வரும் 7 பேரின் பிரச்சினையைப் பெருந்தன்மையுடன் அணுகி அவர்களின் எஞ்சிய கால தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க முன்வருமாறு வேண்டிக்கொண்டுள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "2016ஆம் ஆண்டு இந்த 7 பேருக்கும் தண்டனையை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு செய்துள்ள முடிவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தடை பெற்றுள்ளது. இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு நீங்களும், ராகுல், பிரியங்கா ஆகியோரும் வேண்டுகோள் கடிதம் எழுதுவதின் மூலம் மத்திய அரசு இதற்கு இணங்கக்கூடும்.

மனித நேய அடிப்படையில் நீங்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். இவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கிய நீதிபதி என்கிற முறையில் இப்போது இவர்களுக்குக் கருணை காட்டுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டில் காந்தியடிகள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே 14 ஆண்டு காலம் சிறைவாசத்திற்கு பின் 1964ஆம் ஆண்டில் மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார் என்பதையும் இக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளில் இருவருடன் தான் கருத்து மாறுபாடு கொண்டதையும் அவர் வெளியிட்டுள்ளார். நளினிக்கு ஆயுள் தண்டனை அளிக்கலாம் என்று தான் கூறியதை மற்றவர்கள் ஏற்கவில்லை எனவே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

புகழ்பெற்ற ஒருவரின் கொலை வழக்கு என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது விசாரணைநடத்திய நீதி ஆயத்தின் கருத்தாக இருந்திருக்கலாம். புகழ்பெற்ற ஒருவரின் கொலை வழக்காக இது இல்லாமல் இருந்திருந்தால் எத்தகையத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும் என்பதை என்னால் கூற முடியவில்லை. 

பேரறிவாளன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்குத் தண்டனை அளிப்பது குறித்து நீதிபதிகளுக்குள் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. மரபு வழியிலான சாட்சியச் சட்டத்தின்படி ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றை உறுதி செய்யும் வகையில் மற்றொரு சாட்சியம் இருக்க வேண்டும். ஆனால், மற்ற இரு நீதிபதிகளும் இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆனாலும், அவர்களை எனது வீட்டிற்கு அழைத்து பல முறை விவாதித்து எனது கருத்தை அவர்களை ஏற்கச் செய்வதற்கு முயன்றேன். தடாச் சட்டத்தின் கீழ் இந்த வாக்குமூலம் பெறப் பட்டிருப்பதால் அது முக்கியமான சாட்சியமாகும் என்று அவர்கள் கூறினர்.

தீர்ப்பளித்தப் பிறகு பல மூத்த நீதிபதிகள் இந்த தீர்ப்பு தவறானது என என்னிடம் கூறினர்.''

அதற்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்தப் பேட்டியில் "சி.பி.ஐ.யின் விசாரணையில் மிகப் பெரிய தவறுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 40 இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கூறியது. இந்தப் பணம் யார் கொடுத்தது என்பதைப் பற்றி சி.பி.ஐ. கண்டுபிடிக்கத் தவறியுள்ளது. இந்திய குற்றவியல் நீதிமுறையில் மன்னிக்க முடியாத பெரும் குறைபாடு உள்ளது என்பதை இதன் மூலம் நான் நம்புகிறேன்.

அந்த நாளில் இது பெருந் தொகையாகும். இவர்களுக்கு பின்னணியில் நிதி வசதி நிறைந்த வலிமையான சக்திகள் உள்ளன. அப்படியானால் இந்த பணம் வந்தவிதம் எப்படி? யார் கொடுத்தது? என அரசு வழக்கறிஞர் அட்லாப் அகமதுவிடம் கேட்டேன். புலன் விசாரணைத் தலைமை அதிகாரி கார்த்திகேயனிடம் கலந்து பேசிவிட்டுக் கூறுவதாகச் சொன்னார். ஆனல் மறுநாள் அந்த உண்மையைக் கண்டறிய முடியவில்லை என பதிலளித்தார். இதைக் கண்டு நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். என்னுடைய கவலையை மற்ற இரு நீதிபதிகளிடம் தெரிவித்தேன். இறுதித் தீர்ப்பு வழங்கும் போது சி.பி.ஐ.யின் தவறுகளைச் சுட்டிக்காட்டலாம் என அவர்கள் கூறினார்கள். ஆனாலும் சி.பி.ஐ. குறித்து இறுதித் தீர்ப்பில் குறை கூறுதலோ, பாராட்டுதலோ செய்வது முறையாக இருக்காது எனக் கூறினேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், மூவரில் ஒருவரான நீதிபதி டி.பி. பாத்வா தனது தீர்ப்பில் விசாரணை அதிகாரி கார்த்திகேயனுக்கு முழுமையான பாராட்டைத் தெரிவித்திருந்தார். இது பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாக வெளியாயிற்று. இதன் மூலம் புலன் விசாரணைக்குறித்து உச்சநீதிமன்றம் திருப்தியடைந்திருக்கிறது என்ற கருத்தோட்டம் பரவுவதற்கு வழி ஏற்பட்டுவிட்டது.

ஆனால், மூத்த நீதிபதியாக நான் இருந்த காரணத்தினால் என்னுடையத் தீர்ப்பை வாசித்தப்பிறகே அவர் தனது தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில் இத்தகைய மாற்றத்தைச் செய்திருப்பார் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் எனது தீர்ப்பிலும் மாற்றம் செய்திருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

முன்னாள் நீதியரசர் கே.டி. தாமஸ் அவர்கள் தெரிவித்த அதிர்ச்சிகரமான செய்திகளைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவில் முக்கிய அதிகாரியாக இருந்த தியாகராசன் தான் செய்த முக்கியமான தவற்றினை ஒப்புக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

பேரறிவாளனை புலன் விசாரணை செய்தவர் தியாகராசன் ஆவார். அப்போது 17 வயது சிறுவனாக இருந்த பேரறிவாளன் வாங்கிக்கொடுத்த பேட்டரிதான் கொலையாளி தனுவின் குண்டில் பொருத்தப் பட்டிருந்தது என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. ஆனால், சிவராசன் பேட்டரி வாங்கிவரச் சொன்னபோது, ஏன் என்பதும், எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதும் தனக்குத் தெரியாது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவர் கூறியதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். அதைப் பதிவு செய்திருந்தால் அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டிருப்பார்'' என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரிதான் கொலையாளியின் குண்டில் பொருத்தப்பட்டிருந்தன என்பதும் ஊகமே தவிர. அது நிரூபிக்கப்படவில்லை. 26 ஆண்டுகள் கழித்தாவது தியாகராசன் இந்த உண்மையை உச்சநீதிமன்றத்தில் கூற முன்வந்துள்ளது வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடித்தளத்தையே அசைத்துள்ளது.

மிக முக்கியமானதொரு கொலை வழக்கில் புலன் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்பதும் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு உதவியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. உச்சநீதி மன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயத்தின் தலைவராக இருந்தவரும், சிறப்பு புலனாய்வுக்குழுவின் முக்கிய அதிகாரியாக இருந்தவரும் வெளியிட்டுள்ள உண்மைகள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.

ஏற்கெனவே ராஜீவ் படுகொலையின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம் முக்கியமான கேள்வியை எழுப்பியது. சந்திரசாமிக்கு உள்ள சர்வதேசத் தொடர்புகளின் பின்னணியில் ராஜீவ் கொலையில் அவருக்கு உள்ள பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், ராஜீவ் படுகொலையில் வெளிநாட்டு சக்திகளின் பங்கு இருந்திருப்பது உறுதிப்படுவதாகவும் அது குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த அம்சங்களை ஆராய்வதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அடியோடு தவறிவிட்டது எனவே இது குறித்து முழுமையான மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியது. அதற்கிணங்க பல்நோக்கு விசாரணை குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்தக் குழு 17 ஆண்டு காலம் கடந்தும் தனது புலனாய்வை முடிவு செய்து இறுதி அறிக்கையை இன்னமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை முத்திரையிடப்பட்ட உறை ஒன்றை தடா நீதிமன்றத்திற்கு அனுப்பி வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதோ அல்லது வெற்று உறையா என்பதோ யாருக்கும் தெரியாத மர்மமாகும்.

இது குறித்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.

முன்னாள் நீதியரசர் கே.டி. தாமஸ், முன்னாள் புலன் விசாரணை அதிகாரி தியாகராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள உண்மைகள் ஜெயின் ஆணையத்தின் ஐயத்தை உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றைப் போக்க வேண்டிய சிறப்பு விசாரணைக் குழு 17 ஆண்டு காலமாக காலங் கடத்துவதைப் பார்க்கும் பொழுது உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காகவே இவ்வாறு செய்கிறது என்ற ஐயம் எழுவது இயற்கை.

உச்சநீதிமன்றம் மற்றும் சி.பி.ஐ. ஆகியவற்றின் மீது படிந்துள்ள பழிகளைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசிற்கு உண்டு. அதன்படி எத்தகைய குற்றமும் செய்யாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய முடியாமலும், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை அளிக்க முடியாத நிலையிலும் மத்திய அரசு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. அறத்தை நிலைநாட்டும் வகையில், மத்திய அரசு "26 ஆண்டு காலமாக சிறையில் வாடும் எழுவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் "பழியைத் துடைத்து அறத்தைக் காப்பது அரசின் கடமையாகும்'' என வள்ளுவர் கூறியதை நிலை நாட்ட முன்வருவது மத்திய அரசின் கடமையாகும்.

நன்றி: தினமணி 18-11-2017

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.