இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல்வேறு மொழி வழித் தேசிய இனங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. ஆங்காங்கு வாழ்ந்த பண்டைய மக்களுடன் கலப்பெய்தியுள்ளனர். ஆனால் அமெரிக்க நாட்டைப் போல அங்குக் குடியேறிய எல்லா மொழிவழித் தேசிய இனங்களும் சிறிது சிறிதாகக் கலந்து அமெரிக்க தேசிய இனமாக உருவானதைப் போல இந்தியாவில் அனைத்து இனங்களும் கலந்து இந்தியத் தேசிய இனம் உருவாகவில்லை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து ஆங்கிலேயரின் ஆட்சி ஏற்பட்ட காலம்வரை இந்தியா ஒரு நாடாக ஒரு போதும் உருவாகவில்லை. பல மன்னர்களால் ஆளப்பட்ட பல நாடுகளாக விளங்கின. ஆரியர் முதல் ஆங்கிலேயர் வரை பல அன்னியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தபோதும் இந்தியா ஒரு நாடாக உருவாகவில்லை. கடைசியாக வந்த ஆங்கிலேயர்கள்தான் தங்கள் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பல பகுதிகளையும் ஒன்றிணைத்தனர்.
கி.பி. 1773ஆம் ஆண்டில் கிழக்கு இந்தியக் குழுமத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியை பிரிட்டன் கைப்பற்றிய, போது இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, அரசியல், சமூகஇயல், மொழி, பண்பாடு ஆகியவை குறித்து அவர்களுக்கு முழுமையாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. மேலோட்டமாக மட்டுமே அறிந்திருந்தனர். இந்தியத் துணைக்கண்டமானது பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களையும், மலைச் சாதியினரையும், எண்ணற்ற சாதிகளையும் கொண்ட ஒரு நாடு என்பதை ஆங்கிலேயர்கள் உணரவோ ஒப்புக்கொள்ளவோ இல்லை.
பலமொழி பேசும் தேசிய இனங்களுக்குத் திட்டவட்டமான நில எல்லை, வரலாறு, இலக்கிய வளம், பொதுப் பழக்க வழக்கங்கள், பொதுவான பண்பாடு, சமூக மரபுநிலை போன்ற தெளிவான வரையறுக்கப்பட்ட அம்சங்கள் உள்ளன என்பதை இவர்கள் அறியவில்லை.
எனவே இந்தியாவில் ஆட்சியை நிறுவியபோது மேற்கண்ட அம்சங்களை மனதில் கொள்ளவில்லை. 562 சுதேச மன்னர்கள் ஆண்ட பகுதிகளைத் தனித்தனியாக, ஆனால் தங்கள் மேலாதிக்கத்திற்கு உட்பட்டு ஆள அனுமதித்தனர். தங்களின் வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய துறைமுக நகரங்களான சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவற்றை மையங்களாகக் கொண்டு எஞ்சிய இந்தியாவில் மூன்று பெரும் மாகாணங்களை உருவாக்கினார்கள். இந்த நிர்வாக அமைப்புகளுக்குள் பல மொழி பேசும் மக்கள் உள்ளடக்கப்பட்டனர். ஒரே கூண்டுக்குள் பல்வேறு மிருகங்களை அடைத்து வைத்தது போல இந்த மாகாணங்கள் அமைந்தன.
சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களைக் கொண்ட பகுதிகள் சேர்க்கப்பட்டன. தென்னிந்தியாவிலிருந்த ஐதராபாத், மைசூர், குடகு, திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகிய சுதேச சமஸ்தானங்கள் இம்மாகாணத்திற்குள் சேர்க்கப்படாமல் தனித்து விடப்பட்டன. பம்பாய் மாகாணத்தில் மராட்டியம், குசராத், சிந்தி, பஞ்சாபி மொழிபேசும் பகுதிகளும் இந்தி பேசும் பழைய மத்திய மாகாணப் பகுதியும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன.
கல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட வங்காள மாகாணத்தில் வங்கம், ஒரியா, பீகாரி, அசாமி, இந்தி பேசும் பழைய ஐக்கிய மாகாணப் பகுதி ஆகியவை சேர்க்கப்பட்டன.
இந்த நிர்வாக ஏற்பாட்டின் மூலம் இந்தியா ஒரு நாடு; அதில் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற நிலையை உருவாக்க முயற்சி நடந்தது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தாவில் இருந்த சில ஆங்கிலேயர்கள் கிழக்கிந்தியத் திட்டம் என்ற பெயரால் இந்தியாவில் பல்வேறு பண்பாடுகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
1785ஆம் ஆண்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேயர் கல்கத்தாவில் "ஆசியக் கழகம்' (அண்டிச்tடிஞி குணிஞிடிஞுtதூ) எனும் ஒரு அமைப்பை நிறுவினார். பகவத்கீதை, கீதோபதேசம், சாகுந்தலம், மனுஸ்மிருதி, கீத கோவிந்தம் ஆகிய சமஸ்கிருத நூல்களை இந்த அமைப்பு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது. இவற்றைத்தான் சமஸ்கிருதப் பண்பாடு என்றும் இந்தியப் பண்பாடு என்றும் ஜோன்ஸ் கூறினார். அவர் விதைத்த இந்த சிந்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது.
கி.பி. 1847 முதல் 1874 முடிய மாக்சுமுல்லர் என்னும் ஜெர்மானியர் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சமசுகிருதமும் ஐரோப்பிய மொழிகளும் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை வெளியிட்டார்.
ஜோன்ஸ், மாக்சுமுல்லர் ஆகியோர் இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதமே மூலமொழி எனத் தவறாகக் கருதினார்கள். சமஸ்கிருதத்தின் அடிப்படையில் உருவான பார்ப்பனீயப் பண்பாட்டைப் பாரதப் பண்பாடாக வர்ணித்தார்கள். இவர்களுக்குத் தமிழ் மொழியைப் பற்றியோ, தமிழர்கள் குறித்தோ மற்றும் பிற திராவிட மொழிகள் குறித்தோ எதுவும் தெரியாது. எனவே சமஸ்கிருதத்தின் பெருமை உலகெங்கும் பரவ இவர்கள் காரணமாயினர்.
தமிழ் மற்றும் அதன் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைக் கூறுகளைக் கண்டறிந்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' எனும் ஆய்வு நூலை இங்கிலாந்தைச் சேர்ந்த கிருத்துவப் பாதிரியாரான டாக்டர் கால்டுவெல் (1856) இயற்றினார். அ
வருக்குக்கூட மிகப்பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியம் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் எதுவும் தெரியாது. அவர் அதை அறிந்திருப்பாரானால் அவருடைய ஒப்பிலக்கண ஆராய்ச்சி மேலும் முழுமையும், செழுமையும் பெற்றிருக்கும். வில்லியம் ஜோன்ஸ் காலத்திற்கு 70 ஆண்டுகளுக்குப் பிற்பாடு கால்டுவெல்லின் ஆய்வு வெளியாயிற்று என்பதை நாம் இங்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். "Nச்tடிணிணச்டூடிண்ட் தீடிtடணிதt ச் Nச்tடிணிண டிண ஐணஞீடிச்" எனும் நூலில் ஜி. அலோசியஸ் குறிப்பிட்டுள்ளதை நாம் இங்கு ஒப்பு நோக்கலாம். "ஆரியம், இந்தோ ஆரியம், சமஸ்கிருதம், சனாதனதருமம், சாதி இந்துக்கள் மற்றும் இந்தியர் என்ற சொற்கள் அனைத்தும் பண்பாட்டுத் தேசியத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டன. சமஸ்கிருதம், வேதகால மரபு, பார்ப்பனியம் ஆகியவற்றின் அடிப்படையிலே பாரதப் பண்பாடு உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவில் வாழும் ஆரிய இன மக்களின் ஒரு பிரிவினரே இந்தோ-ஆரியர்கள் என்ற கருத்தும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ஆரிய இனத்தின் இரு பிரிவுகளாக ஐரோப்பியரும், பார்ப்பனிய மேல் சாதியினரும் கருதப்பட்டனர். கிரேக்க மொழியின் சகோதர மொழியாகச் சமஸ்கிருதம் கருதப்பட்டது. தர்மசாத்திரங்கள் அனைத்தும் இந்தியப் பண்பாட்டின் சின்னங்கள் என்றும் இவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவிலுள்ள மற்ற மொழிகளும் பண்பாடுகளும் உருவாக்கப்பட்டன எனவும் கூறப்பட்டது.
பிறக்கப்போகும் பாரதப் பண்பாட்டின் ஆன்மா இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது. இந்தப் பண்பாடு பரவி தழுவி நிற்கும் நாடு ஆரிய வர்த்தம், பாரதவர்ஷம், இந்துஸ்தான், இந்தியா என அழைக்கப்பட்டது. வேத பார்ப்பனியம் மதக்கலாச்சாரச் சின்னமாகக் கருதப்பட்டது. இதன் மூலம் மட்டுமே துணைக் கண்டத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
வேத பார்ப்பனியம் இந்தியத் தேசியமாக உருவெடுப்பதே இந்திய நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான ஒரே அம்சமாகக் கருதப்பட்டது. வேத பார்ப்பனியம் ஒரு தத்துவமாக உருவெடுத்து அடிமை நாட்டைச் சூழ்ந்து ஏக இந்தியத் தேசியமாக மாற்றுவதற்கு முயன்றது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் அன்னிய ஆதிக்கத்தை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பல வேறு தேசிய இன மக்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில் காங்கிரசுக் கட்சி மொழிவழி மாநிலக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட செயற்கை மாநிலங்களைக் கலைத்து இயற்கை வழிப்பட்ட மொழிவழி மாநிலங்களை அமைப்பதற்கான உறுதிமொழியினைக் காங்கிரசு வழங்கியது. அதற்கு முதற்படியாக காங்கிரசுக் கட்சி மொழிவழி மாநில அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகள் பல்வேறு தேசிய இன மக்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது.
நாடு விடுதலை பெற்ற பிறகுக் காங்கிரசுத் தலைமையின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் திடுக்கிட வைப்பதாகும். பலமான மத்திய அரசு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலங்கள் மத்திய ஆட்சிக்கு உட்பட்ட குறைந்த அளவு அதிகாரங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டன. மொழிவழி மாநிலங்கள் அமைப்பதன் மூலம் தேச ஒற்றுமை சிதறுண்டு போகும் என காங்கிரசுத் தலைமை கூறத் தொடங்கிற்று. இந்தியத் தேசியவாதிகளின் இந்தக் கருத்தை இந்து தேசியவாதிகளும் ஆதரித்தனர். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்த பல்வேறு தேசிய இன மக்களும் போராடத் தொடங்கினார்கள். விடுதலைப் போராட்டத்தை எப்படி அன்னிய ஆட்சி ஈவு இரக்கம் இல்லாமல் ஒடுக்கியதோ அதைப்போல பல்வேறு தேசிய இன மக்களின் போராட்டங்களையும் இந்திய அரசு ஈவு இரக்கமின்றி அடக்க முனைந்தது. ஆனாலும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தது கண்டு மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமை இந்திய அரசுக்கு ஏற்பட்டது.
மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அவற்றுக்குரிய அதிகாரங்களை அளிப்பதற்கு இந்திய அரசு பிடிவாதமாக மறுத்தது. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன்னால் ஏக இந்தியா என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம், மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்த பிறகு அவற்றுக்குப் பொருந்தி வரவில்லை. இதன் விளைவாக மத்திய-மாநில மோதல்கள் அதிகமாயின. இந்திய அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக மாநிலங்களுக்கிடையேயும் மோதல்கள் வெடித்தன. பல்வேறு மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சனைகள், எல்லைப் பிரச்சனைகள் போன்றவை மூண்டெழுந்தன. இவற்றைத் தீர்க்கும் வகை தெரியாமல் இந்திய அரசு திணறியது. இன்றும் திணறிக் கொண்டிருக்கிறது.
இந்திய தேசியவாதிகளுக்கும் இந்து தேசியவாதிகளுக்குமிடையே அதிக வேறுபாடு கிடையாது. பல அம்சங்களில் இருவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே இந்த இரு தரப்பினரும் எப்படியெல்லாம் இணைந்தும் மாறுபட்டும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்து தேசிய முதலாளித்துவத்தை ஆதரிப்பதிலும் அதனுடைய உதவியைப் பெற்றுக் கொள்வதிலும் இந்திய தேசியவாதிகளுக்கும் இந்து தேசியவாதிகளுக்குமிடையே வேறுபாடில்லை.
விடுதலைப் போராட்ட காலத்தில் சுதேசி மன்னர்களை இரு தரப்பினரும் எதிர்க்கவில்லை. சமஸ்தான மக்கள் நடத்திய உரிமைப் போராட்டங்களை இருவருமே ஆதரிக்கவில்லை.
இந்து சமுதாயத்தில் நிலவும் சாதிக் கொடுமை, தீண்டாமை போன்றவற்றை எதிர்த்துப் போராட இருவருமே முன்வரவில்லை. மண்டல் குழு அளித்த பரிந்துரைகளைக் காங்கிரசு அரசு கிடப்பில் போட்டது. இந்துத்வாவாதிகள் வெளிப்படையாக எதிர்த்தார்கள்.
காங்கிரசுக் கட்சி உதட்டளவில் சோசலிசம் பேசியது. பா.ஜ.க. காந்திய சோசலிசம் பேசுகிறது. அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் காங்கிரசு அரசுக்கும் பா.ஜ.க. அரசுக்கும் வேறுபாடில்லை.
பலமான மத்திய அரசு என்னும் கோட்பாட்டை காங்கிரசுக் கட்சிக் கடைப்பிடித்து மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்தது. பா.ஜ.க. அரசும் அப்படியே செய்தது. தேசிய இனப் போராட்டங்களை இராணுவம் மூலம் காங்கிரசு ஒடுக்கியது. பா.ஜ.க. அரசும் அதைப் பின்பற்றியது.
சமற்கிருதம் அரியணையில் அமரும் சூழ்நிலை வரும்வரை இந்தி அந்த இடத்தை வகிக்கும் என்ற கருத்தோட்டத்தில் இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கும் இடையே எத்தகைய வேறுபாடும் கிடையாது.
மார்க்சீயத்தை எதிர்ப்பதில் இரு தரப்பினருக்குமிடையே எத்தகைய வேறுபாடும் எந்தக் கால கட்டத்திலும் இருந்ததில்லை.
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது' என்ற பழமொழியைப் போல் இந்தியத் தேசிய உருவாக்க முயற்சி இந்து பாசிச உருவாக்கத்தில் முடிந்துள்ளது.
ஒரே தேசம் - பாரத வர்ஷம் ஒரே மொழி - சமற்கிருதம் ஒரே பண்பாடு - பாரதப் பண்பாடு ஒரே மதம் - இந்து மதம்
என்ற வெறியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனிய இந்துத்வா துடிக்கிறது.
இந்தியப் பெருமுதலாளிவர்க்கமும் பார்ப்பனிய நோக்கத்திற்குத் துணையாக நிற்கிறது. மக்கள், மொழி, பண்பாடு குறித்தெல்லாம் இவர்களுக்குக் கவலை இல்லை. இந்தியா ஒரே நாடாக இருப்பது சந்தை நோக்கில் இவர்களின் சுரண்டலுக்கு இன்றியமையாதது ஆகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பலமொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்துவிடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டை சிதைத்துவிடும் என இந்துத்வாவாதிகள் கருதுகின்றனர்.
தனித்தனித் தேசங்களாக அமைந்தால் தங்களின் சந்தை சுருங்கிப் போகுமே என்ற கவலையினாலும், பலமான மத்திய அரசு இருந்தால் அதனிடம் அனுமதி பெற்றால் போதும். ஆனால் தனித்தனி தேசங்கள் உருவானால் ஒவ்வொன்றிடமும் அனுமதி பெற வேண்டும் என்கிற நிலையும் பெரு முதலாளித்துவத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே அவர்களும் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக் கூச்சலைக் கிளப்புகிறார்கள்.
எனவே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருப்பதிலும், பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனப் பண்பாட்டை நிலைநிறுத்துவதிலும் இந்தியா முழுவதையும் தங்கள் வேட்டைக்காடாக்கிக் கொள்வதிலும் பார்ப்பனரும் பனியாக்களும் இணைந்து செயற்படுகின்றனர். இந்த நோக்கத்திற்குக் காங்கிரசையும், பா.ஜ.க.வையும் மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே உருவாகாத, உருவாக்க முடியாத இந்தியத் தேசியம் என்பது ஒரு கற்பிதம். ஒரு போதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. இந்த மாயையை அடியோடு தகர்த்தெறிந்தால் ஒழிய மொழி வழி தேசிய இனங்களுக்கு வாழ்வும் இல்லை. எதிர்காலமும் இல்லை என்பதை உணரவேண்டும்.
நன்றி: சிந்தனையாளன் பொங்கல் மலர்--2018 |