உழவர் ஞானசேகரன் படுகொலை: அனைத்துக்கட்சிகள் - விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் பல்லாயிரவர் திரண்டனர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:23

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன், சாத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் விவசாயக் கடன் பெற்றிருந்தார். இக்கடனை வசூலிக்கச் சென்ற வங்கியின் அடியாட்களால் கடந்த 04/11/2017 அன்று தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

வங்கியின் அடியாட்களைக் காப்பாற்றும் நோக்கில் மாவட்டக் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கைப் பதிவு செய்ததைக் கண்டித்தும் கொலை வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளான வங்கியின் கிளை மேலாளர் ஜெயராஜ், அடியாட்களான ராஜா என்கிற ரமேஷ், வெங்கடபதி ஆகியோரைக் கைது செய்யக்கோரியும் ஞானசேகரனின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் 09/12/2017 அன்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்த்தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இரா.காளிதாசு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூன்ரசீத், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், மக்கள் அதிகாரத்தின் மோகன்ராஜ், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மணிகண்டன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி. ஆர். பாண்டியன், ம.தி.மு.க வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் வே.துரைமாணிக்கம், தமிழக மக்கள் கட்சியின் நிறுவனர் நல்வினைச் செல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தைஅரசன், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் செந்தமிழ்க்குமரன், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சியின் முகிலன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செம்பியன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் அ.தமிழன்பாபு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை, புதுவை மாநில அமைப்பாளர் இளமுருகன், கடலூர் மாவட்டத் தலைவர் கீ.செ. பழமலை, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சேலம் சிவப்பிரியன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் திரளானவர்கள் பங்கேற்றனர்.

விவசாயி ஞானசேகரனின் மூத்த மகளும் தமிழர் தேசிய முன்னணியின் விழுப்புரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான த.மங்கையர்க்கரசி நன்றியுரை ஆற்றினார்.

அனைத்துக்கட்சித் தலைவர்கள், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக் கையை மேற்கொள்வது என இப்போராட்டத்தில் ஒருங்கிணைத்த தலைவர் பழ.நெடுமாறன் அவர்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்றனர்.

ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ. 1 இலட்சம் உதவி வேல்முருகன் வழங்கினார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், ஞானசேகரனின் மனைவி இந்திராவிடம் ரூ ஒரு இலட்சம் நிதிஉதவி அளித்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரூ ஐந்தாயிரம், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் ரூ.இரண்டாயிரத்து ஐநூறும் வழங்கப்பட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.