வெண்மணி கொடுந்துயரம் - 50 |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:26 |
1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் தமிழக வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத இரத்தக் கறை படிந்த நாளாகும்.
காவிரி பாய்ந்தோடி வளங்கொழிக்கச் செய்யும் தஞ்சை சமவெளி வெண்மணியில் 19 குழந்தைகள் உள்பட 44 பேர் பதறப் பதற தீயில் கருகி மாண்டு மடிந்தனர். ஒரு மூட்டை நெல்லுக்கு ஒரு படி நெல் மட்டுமே உழவுத்தொழிலாளர்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது. மேலும் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடியதைப் பொறுக்க முடியாத நில உரிமையாளர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். ஒரே குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேரையும் உயிரோடு கொளுத்தினார்கள். சாதி ஆணவமும் இதற்குக் காரணமாகும்.
கொத்தடிமைகளாகத் திகழ்ந்தவர்கள், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு போனவர்கள், எதிர்த்துப் பேச வாயற்றவர்கள், போராட்டம் நடத்தும் அளவுக்கு துணிவுபெற்றதைப் பண்ணையாளர்களால் பொறுக்க முடியவில்லை. அதன் விளைவாகத் தொழிலாளர்களை விரட்டி விரட்டித் தாக்கினார்கள். துப்பாக்கிகளால் சுட்டார்கள். அஞ்சி ஓடி ஒரே குடிசைக்குள் தஞ்சம் புகுந்தவர்களை ஈவிரக்கம் இல்லாமல் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.
தமிழகம் மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. சாதி ஆணவமும், ஆதிக்க வெறியும் மிகுந்த பண்ணையாளர்களால் பொசுக்கப்பட்டுப் போன 44 ஏழைகளின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் துயரத்துடன் நினைவுகூரப்படுகிறது. ஆனாலும், ஆதிக்கச் சாதி வெறியும், ஆணவக் கொலைகளும் இன்னமும் தொடர்கின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே வெண்மணி ஈகிகளுக்கு உண்மையான வீரவணக்கம் செலுத்தும் நாளாகும். |