உயர்தரமான எஃகு தயாரிப்பில் உலக அளவில் புகழ் வாய்ந்தது சேலம் உருக்காலையாகும். தமிழ்நாட்டின் பெருமை மிகுந்த அடையாளமாக அது திகழ்ந்து வருகிறது.
சேலம் எஃகு ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் அதன் அருகிலேயே கிடைக்கின்றன என்பது சிறப்பானதாகும். தரமான இரும்புத் தாது இம்மாவட்டத்திலேயே கிடைக்கிறது. இந்த இரும்புத் தாது குறைவான அளவுக்கு சல்பர் மற்றும் பாஸ்பரஸ் கொணடிருப்பதால் சிறந்த உயர் தரமான எஃகு இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. எஃகு உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லும், டோலமைட்டும் சேலம் மாவட்டத்திலேயே கிடைக்கின்றன.
கருநாடகத்தில் டோர்நகல் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள எஃகு ஆலைக்குத் தேவையான இரும்புத் தாது கோஸ்பெட்டிலிருந்தும், சத்தீஸ்கர், ஆந்திர மாநிலம் ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லும் வரவேண்டியுள்ளது.
அதைப்போல ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்குத் தேவையான இரும்புத் தாது சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்தும் நிலக்கரி தாமோதர் பள்ளத்தாக்கிலிருந்தும், சுண்ணாம்புக்கல், டோலமைட் ஆகியவை மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலிருந்தும் வரவேண்டியுள்ளது.
துர்காப்பூர், பொக்கரா போன்ற எஃகு ஆலைகளுக்கும் அதற்குத் தேவையான மூலப்பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. ஆனால், சேலம் எஃகு ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் அதன் அருகிலேயே கிடைக்கின்றன.
இந்த ஆலை 2.2 இலட்சம் டன் தகடு மற்றும் பட்டைகளையும், 70 ஆயிரம் டன் எவர்சில்வர், 75 ஆயிரம் டன் மற்ற சிறப்பு எஃகு பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகும். இத்தகைய சிறப்புமிக்க இந்த எஃகு ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளும் கேட்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த ஆலையை அமைக்கத் தேவையான நிலத்தையும், விரிவாக்கத் திட்டப்பணிகளுக்காக ரூ.2005 கோடியையும் தமிழக அரசு அளித்துள்ளது. மூலதன மானியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மானியம், மின்சார வரிவிலக்கு போன்றவற்றிற்காகவும் தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது.
பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த போது சேலம் எஃகு ஆலைத்திட்டம் வகுக்கப்பட்டது. அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்குப் பதில் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சி நடைபெற்றது.
தலைவர் காமராசர் உடனடியாக கம்யூனிஸ்டுத் தலைவர் பி. இராமமூர்த்தி அவர்களை அழைத்துத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டுபோய் அப்போதைய தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து சேலம் எஃகு ஆலைத் திட்டத்தை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துமாறு கூறினார். அவ்வாறே அவர்களும் செய்தனர். அதன் பிறகு தலைமையமைச்சரை காமராசர் சந்தித்து இத்திட்டத்தை நிறைவேற்றுமாறு கூறினார். அதன் பிறகே இத்திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுப் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு 1981ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலையை ஒருபோதும் தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. மத்திய அரசு அதைத் தொடர்ந்து இயக்க விரும்பவில்லை என்று சொன்னால் தமிழக அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும். அதற்குரிய பணத்தை தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்து அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று ஆதரவு அளித்து நிறைவேற்றவேண்டும் |