கவிஞர் இன்குலாபின் "ஒளவை' நாடகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:54

கவிஞர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேராசிரியர் அ. மங்கையின் இயக்கத்தில் இன்குலாபின் "ஒளவை' நாடகம் மேடையேற்றப்பட்டது.

"புத்தி சொல்லும் எந்தப் பெண்ணும் எந்த வயதிலும் பாட்டிதான்'' என்ற ஒற்றை வாக்கியத்துடன், தமிழ்ச் சமூகத்தின் பொது மனத்தில் பதியவைத்து, ஒளவை பற்றி கற்பிக்கப்பட்டிருக்கும் ஒற்றைப்படிமத்தை கலைத்து, சங்க ஒளவையை இனக்குழுப் பண்பாட்டின் பெரும் துடிப்பும் விடுதலையும் கொண்ட பேராற்றலாய்ப் புதுப்பித்துக் காட்டும் அற்புதப் படைப்பு இந்நாடகம்.

கடற்கரையில் சிலை வடிக்கப்பட்டிருக்கும் கோல் ஊன்றிய மூதாட்டியின் ஒளவை. ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர். பெற்றோரிடத்தில் வளராதவர், தமிழ்நாடு முழுதும் திரிந்தவர். பலரைப் பற்றிக் கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரைப் பெரியோராய் மதித்துப் பாடியவர் என்பதே நம் மூளைக்குள் ஒளவையின் உருவமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணத்தைத்தான் அசைத்துப் பார்த்திருக்கிறது கவிஞர் இன்குலாபின் எழுத்தில் உருவாக்கப்பட்ட ஒளவை நாடகம்.

சங்க காலத்து ஒளவையாரும் ஆத்தசூடி பாடிய ஒளவையாரும் ஒரே நபர் அல்லர் என ஆசிரியர் குறிப்பும் இருக்கிறது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பது கல்வியாளர்களின் கருத்தும்கூட, உண்மையில் ஒளவையார்கள் எத்தனை பேர்? ஒன்றிரண்டல்லர்... பல ஒளவைகளைத் தமிழ் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. முதல் ஒளவை என்று, சங்க கால ஒளவையைச் சொல்லலாம். சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பானது. இரண்டாவது ஒளவை, சங்க காலத்துக்கு பிறகு சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள புராண கட்டுக்கதைகளில் வரும் ஒளவை. இந்தக் காலக்கட்டத்தில்தான் திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் போன்றவர்களின் தங்கையாக ஒளவை சித்தரிக்கப்பட்ட கதைகள் உலாவின. மூன்றாவதாக 12 முதல் 14ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த நீதி இலக்கிய காலத்து ஒளவை. திருவிளையாடல் புராணத்தில் "சுட்ட பழம் வேண்டுமா?' என முருகனிடம் கேட்பதாக இவர் சித்தரிக்கப்பட்டதைப் பார்க்க முடியும். நான்காவதாக 14-15ம் நூற்றாண்டு காலத்தில் விநாயகர் அகவல், ஒளவை குறள் போன்றவற்றை எழுதிய சமய இலக்கிய ஒளவை. கடைசியாக 17-18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஒளவையாரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இவர் பாடியதாக ஆயிரக் கணக்கான தனிப்பாடல்கள் உலவுகின்றன. பந்தன் அந்தாதி என்னும் நூலும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது.

சங்க கால ஒளவை, அதியமான் என்னும் மன்னனுடன் தோழமை கொண்டவளாக வருகிறாள். "ஒளவையார்' படத்தில் வரும் ஒளவைப் பாட்டியை விட இந்த ஒளவை மிகவும் இளமையானவள். பேரழகும், பேரறிவும் மிக்கவள். கள் குடித்து, கறி சாப்பிட்டு அதியமானோடு நெருங்கிய தோழமை பாராட்டிய ஒளவை அவள். கவிஞர் இன்குலாப் இப்படிப்பட்ட ஒளவையைத்தான் தனது நாடகத்தில் சித்தரித்துள்ளார்.

அந்தக் கால ஒளவையார் திரைப்படம் பிரமாண்ட படைப்புதான். அது ஒளவையார் பற்றிய செய்திகளை கதையாக்கித் தொகுக்க முயன்று, வெற்றியும் பெற்றுள்ளது.

திரையுலக ஒளவையையும், நீதிநெறி போதிக்கும் ஒளவையையும் திரும்பத் திரும்ப நினைவூட்டும் தமிழ்ச் சமூகம். காதல், அழகு, புத்திக்கூர்மை போன்ற எதிரும்புதிருமான குண நலங்களைக் கொண்டிருந்த சங்க கால ஒளவையை மறந்துவிட்டது. ஒளவை என்ற சொல்லுக்கு "தாய்' என்றுதான் பொருள். ஆனால், இளம் வயதுக்குரிய பெயர் அது. மரியாதைக்காக "ஆர்' விகுதி போட்டு அதை "ஒளவையார்' ஆக்கி, தமிழ்ச் சமூகம் பெருமை கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவை உள்ளனர் என்ற அடிப்படை உண்மையைக்கூட நம் மனங்கள் ஏற்கத் தயங்குவது இதனால்தான்.

அன்றைய நிகழ்வில் ஒளவையைப் புதுப்பித்து மீண்டும் பிரதியாக்கம் செய்ததன் மூலமாகப் பெண்ணிய அரசியலை மிக நுட்பமாகவும், இறுதியில் சமகால அரசியலையும் கலந்து காட்சிகளை அமைத்ததன் மூலம் இன்குலாபும் அ. மங்கையும் நம் நன்றிக்கு உரியவராகிறார்கள்.

- நன்றி "தோழி' இதழ் டிசம்பர்16-31, 2017

"ஒளவை மீது சுமத்தப்படட முதுமையைக் களைவதில் தொடங்கி, ஒடுங்க மறுக்கும் ஒரு பெண்குரலைக் கேட்கச் செய்வதுவரை இந்நாடகம் காட்சிப்படுத்துகிறது. முதுமை இயல்பு, அழகியது. ஆனால் இங்கே முதுமை என்பது ஆடவர் தருமத்தின் பாடமாகப் பார்க்கப்படுவதால் அந்த முதுமை களையப்படுகிறது.

சங்க இலக்கிய வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தைக் காட்டுவதும் இந்நாடகத்தின் நோக்கம். இதன் மூலம் இயல்பு எது. புனைவு எது என்பதைப் புலப்படுத்த முடியும். இப்புலப்படுத்தும் முயற்சியின் ஒரு குறியீடுதான் ஒளவை.

- இன்குலாப்

"இளமை நிறைந்த, வாழ்வின் சுவைகளில் ஈடுபாடுகொண்ட உணர்வுகளைப் பேசுவதற்கு அச்சமடையாத பெண்ணின் பிம்பம் ஆண் ஆதிக்கச் சிந்ததையை அச்சுறுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை. ஒளவையைப் பாட்டியாக்கிய சமூகத்தின் ஆதிக்க முகம் அசிங்கமாக வெளிப்படுகிறது. பாணர் வாழ்வை அடிப்படையாகக் கொண்டதால் சமகால கலைஞர்களின் வாழ்வோடு இது பொருந்துகிறது. இலக்கியத்தில் பெண் எழுத்தின் கண்ணிகளைத் தேட இது ஒரு முயற்சி.''

- அ. மங்கை

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.