குமரிக் கரையில் கதறும் குடும்பங்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 12:02

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ளது. இக்கடற்கரை நெடுகிலும் 308 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. கடல் சார் மீன்பிடித்தலில் நான்காவது இடத்தையும் (12.9%) உள்நாட்டு மீன் பிடித்தலில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழகத்தில் 5,180 ச.கி.மீட்டர் பரப்பில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மண்டபம், கன்னியாகுமரி போன்றவை முக்கிய மீன்பிடித் துறைமுகங்களாகும்.
தமிழ்நாட்டில் இராமேசுவரம் முதல் ஆந்திர மாநிலத்தின் கஞ்சம் வரையிலும், ஜüலை முதல் அக்டோபர் வரையிலும் மீன்பிடிக் காலமாகவும், சோழ மண்டலக் கரையில் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை மீன்பிடிக் காலமாகவும் உள்ளது.

ஆனால், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை, ஆழிப்பேரலை, புயல், சூறாவளி, பெருமழை ஆகியவற்றால் அடிக்கடிப் பேரழிவிற்கு உட்படும் பகுதியாகும். சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமான பூம்புகார் கடலால் கொள்ளப்பட்ட செய்தியை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. ஏறத்தாழ 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுள் மூழ்கிய பூம்புகார் நகரத்தின் பகுதிகளை மேனாட்டு கடல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த நாளிலிருந்து இன்று வரை கடல் ஓரக் கிராமங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவது தொடர் நிகழ்ச்சியாகியிருக்கிறது.

சிறந்த கடலோடிகளான நெய்தல் நில மக்கள் கிழக்கே சீனா வரையிலும், மேற்கே கிரேக்கம், எகிப்து, ரோமாபுரி வரையிலும் கப்பல்களைச் செலுத்தி தமிழக வணிகர்களின் செல்வம் பெருகக் காரணமாக இருந்துள்ளனர். அதைப்போல இயற்கைப் பேரழிவுகள் நேரும் போதெல்லாம் நெய்தல் மக்களான மீனவர்கள் சொல்லொணாத துயருக்கும், இழப்புக்கும் ஆளாகின்றனர்.

1964 திசம்பரில் வீசிய புயலால் எழுந்தப் பேரலைகள் தனுஷ்கோடியை அடியோடு அழித்தன. இராமேசுவரத்தோடு தாய் நிலத்தை இணைத்த தொடர்வண்டிப் பாலத்தையும் அதன் மீது சென்றுகொண்டிருந்த தொடர் வண்டியையும் கடல் கொள்ளை கொண்டது. 2000 பேருக்கு மேல் மாண்டனர். இந்த அழிவிலிருந்து தனுஷ்கோடி இன்னமும் மீண்டெழவில்லை.

13 ஆண்டுகளுக்கு முன்னர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் அதிகாலையில் இப்போதைய தலைமுறையினர் அறிந்திராத ஆழிப்பேரலை வங்கக் கடலோரத்தைத் தாக்கியது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட நகரங்களில் வாழ்ந்த மீனவ மக்களில் பலரின் உயிர்களைப் பறித்ததோடு அவர்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்தது. ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தோ, காணாமலோ போனார்கள்.

இப்போது வீசிய ஓக்கிப் புயல் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக 70 கி.மீ. நீண்ட கடற்கரையையும், 44 மீனவ கிராமங்களையும் கொண்ட குமரி மாவட்டம் ஏறத்தா சிதைந்துவிட்டது. மீனவர்கள் மட்டுமல்லர், ரப்பர், தென்னை, வாழை, மா, பலா, நெல் பயிரிட்ட விவசாயிகளும், மலைவாழ் மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்திருக்கிறார்கள். புயல் ஓய்ந்துவிட்டாலும் அதன் விளைவாக உருவான துயரம் இன்னமும் நீடிக்கிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் மாயமாகிவிட்டார்கள். சிலர் பிணங்களாக கரை ஒதுங்கியுள்ளனர். மற்றும் சிலர் இலட்சத்தீவுகள், மகாராட்டிரம், குசராத் போன்ற மாநிலங்களில் கரை ஒதுங்கி உயிருடன் மீண்டிருக்கிறார்கள். கடற்கரையில் கண்ணீரும் கம்பலையுமாக மீனவப் பெண்களும் குழந்தைகளும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் காலம் காலமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் அறைகூவல்களை எதிர்கொண்டும், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமலும் இந்த மீனவர்கள் பிடிக்கும் கடல் மீன்களின் ஏற்றுமதியின் மூலம் பெரும் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால், இயற்கைப் பேரிடர் குறித்த முன்னறிவிப்பு எதுவும் இவர்களுக்குக் குறித்த காலத்தில் கிடைப்பதில்லை. 15 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை சில வேளைகளில் அதற்கு மேலாகவும் கடலில் தங்கி 1500 கி.மீ. தூரம் வரை சென்று தங்கள் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சுனாமி, புயல், சூறாவளி பற்றிய அறிவிப்புகள் கிடைப்பதில்லை.

அத்தகைய மீனவர்களிடமுள்ள தொடர்புக் கருவிகள் பருவ நிலை சீராக இருந்தால் 100 கி.மீ. தூரம் வரை அவர்களோடு தொடர்பு கொள்ள முடியும். கைப்பேசிகளாலும் கரைக்குத் தொடர்பு கொள்ள முடியாது. மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொடர்புக் கருவிகளுக்குரிய மறுஒலிப்பு கோபுரங்கள் பல இடங்களில் அமைக்கப்படாததால் பயனற்றுக் கிடக்கின்றன. உடனடியாக மறு ஒலிப்பரப்பு கோபுரங்களைக் கடற்கரை நெடுகிலும் அமைத்து அவை மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் தொடர்பு கருவிகள் செயல்படத்தக்க நிலையை விரைந்து உருவாக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை குறித்த தேசியக் கொள்கையில் கடல் சார்ந்த பேரழிவுகளுக்கு இடமில்லை என்பது அதிர்ச்சித் தரும் செய்தியாகும். நிலப் பகுதியில் நடைபெறும் பேரழிவுகள் குறித்து மட்டுமே இக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பேரிடர் கொள்கையில் கடல் சார் பேரழிவு இடம் பெறும் வகையில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் அடிக்கடி பெரும் சீரழிவுக்குள்ளாகும் மீனவர்களுக்கு அரசு உதவ முடியும்

ஓக்கிப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு உதவவும். மீன் வலைகள், படகுகள், கட்டுமரம், விசைப் படகுகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை மீட்டுருவாக்கம் செய்யவும் பயிரிழப்பிற்கு ஆளான விவசாயிகளுக்கு உதவவும் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்த மலைவாழ் மக்களுக்கு உதவவும் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகவும், ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்காகவும் தமிழக அரசு சார்பில் ரூ.9,302 கோடி கேட்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையினை உடனடியாக வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு உதவுவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும்.

மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழில் அறியாதவர்களும், கடலையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வரும் மீனவர்களை கடல் பழங்குடி மக்களாக அறிவிக்க மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

ஓக்கிப் புயலுக்கு முன்பாகவும், பின்பாகவும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் முற்றிலுமாக உரிய காலக் கட்டத்தில் செயல்படத் தவறிவிட்டது. நவம்பர் 29ஆம் தேதியன்று மாலையில்தான் புயல் வரப்போவதைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் குமரி மாவட்ட மீனவர்கள் அதற்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எனவே, புயல் பற்றிய எச்சரிக்கை அவர்களுக்கு எட்டவில்லை. தேசியப் பேரிடர் மேலாண்மை குறித்து தெளிவான வழிகாட்டும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில அரசும் பேரிடர் மேலாண்மைத் திட்டம் வகுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரக்கோணத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மைப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. புயல் போன்ற பேரிடர் காலத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்காக இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓக்கிப் புயல் பற்றியச் செய்தி கிடைத்தவுடன் இந்தப் படை விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஹெலிகாப்டர் மூலம் கடலுக்குச் சென்று மீனவர்களை எச்சரித்திருக்க வேண்டும். புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. ஆனால், எல்லாமே காலந்தாழ்த்து நடைபெற்றன. இந்தியக் கடற்படையையும், கடலோரக் காவல்படையையும் மட்டுமே நம்பி செயல்படவேண்டிய நிலையில் நாம் இருந்துள்ளோம். ஆனால், தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் தவறியது என்பது வெட்ககரமானதாகும்.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி செய்திகளைச் சேகரிக்கும் துறையில் மிகவும் முன்னேறியுள்ள நமது நாட்டில் ஓக்கிப் புயலுக்கு முன்பு மீனவர்களுக்கு உரிய எச்சரிக்கை அளிக்கவும் புயலுக்குப் பின்பு ஆழ்கடலில் சிக்கித் தவித்த மீனவர்களைக் காக்கவும் நமது அறிவியல் உதவவில்லை என்பது என்றென்றும் வேதனை தரும் துயரமானதாகும்.

2004ஆம் ஆண்டு மூண்டெழுந்த ஆழிப்பேரலையில் உயிர் தப்பி மீண்டவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகளே இன்னும் முற்றுப்பெறவில்லை. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மறு வாழ்வுத் திட்டங்கள் இலக்குகளை எட்டவில்லை.

2017ஆம் ஆண்டில் ஓக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உதவுவதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படுமா? அவர்களுக்கு மறுவாழ்வு கிட்டுமா? என்ற கேள்விகளுக்கு மத்திய-மாநில அரசுகள் விடையளிக்க வேண்டும்.

ஆழிப்பேரலை, புயல், சூறாவளி, பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் எப்படிச் செயல்படுவது என்பதற்கான அடிப்படை விழிப்புணர்வை இன்னமும் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படவில்லை. தமிழகக் கடற்கரையோரங்களில் வாழும் மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி அதற்கேற்ற மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் பேரிடர்களால் உயிரிழப்பையும், வாழ்வாதார அழிவையும் தடுக்க முடியும்.

நன்றி: தினமணி 27-12-2017

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.