இந்திய மருத்துவக் கழகம் கலைப்பு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டம் மருத்துவத் துறையைத் தனியார் மயமாக்க முயற்சி? - மரு. ஜி.ஆர்.இரவீந்திரநாத் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:29

இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.ஐ.) - பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பான  மசோதாவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் தாக்கல்செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவர்களும் அரசு மருத்துவர்களும் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் பின்னிருக்கும் நோக்கம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய மருத்துவ மருத்துவக் கழகம் சட்டம் (எம்.சி.ஐ.) 1933-ன்படி, இந்திய மருத்துவக் கழகம் 1934-ல் உருவாக்கப்பட்டது.1956-ல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, இது சட்டரீதியான, தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாக ஆனது. மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்து, நாடு முழுவதும் சீரான கல்வித் தரத்தைப் பேணுவது; புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது போன்றவை இந்திய மருத்துவக் கழகத்தின் பணிகள். இந்தச் சூழலில், இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது என்றும், மருத்துவக் கல்லூரிகளைப் போதிய அளவுக்கு உருவாக்க நடவடிக்கை  எடுக்கவில்லை என்றும், மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவில்லை என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி, அதை ஒழிக்க முயல்கிறது மத்திய அரசு. அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவது அரசின் திட்டம்.

டாக்டர் ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், இந்திய மருத்துவ கவுன்சிலை
ஒழித்துவிட்டு, மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவருவதாகக் காரணம் சொல்கிறது மத்திய அரசு. உண்மையில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவந்து, உரிய மாற்றங்களைச் செய்யத்தான் டாக்டர் ரஞ்சித் ராய் செளத்ரி குழு பரிந்துரைத்தது; இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழிக்க வேண்டும் என்றல்ல!

யதேச்சாதிகாரத்துக்கு வாய்ப்பு

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகள் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால், இவற்றை நிவர்த்திசெய்வதற்குப் பல்வேறு ஆலோசனைகள் பல்வேறு அமைப்புகளால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலில் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரும் மருத்துவர்கள். இதில் பெரும்பாலா னோர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் மருத்துவ ஆணையத்தில் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 5 பேர் மட்டுமே இருப்பார்கள். தலைவர் உட்பட இதர 20 உறுப்பினர்களும் நியமன உறுப்பினர்களே. ஆணையத்தின் தலைவரைத் தவிர, மற்றவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி. அதுமட்டுமல்ல, ஆணையத்தின் தலைவரை நீக்குகின்ற அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கும். எனில், இது யதேச்சாதிகாரத்துக்கும் முறைகேடுகளுக்கும் அல்லவா வாய்ப்பளிக்கும்?

மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதாகக் கூறிக்கொண்டு, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு  "நீட்' நுழைவுத் தேர்வை இந்த ஆணையமே நடத்தும் என்கிறது புதிய மசோதா. இது என்னென்ன விளைவுகளுக்கு வித்திடும் என்பது நமக்குத் தெரியும். இந்தஆணையத்தில், மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை. அதிகாரமற்ற நிலையில், வெறும் ஆலோசனைக் குழுவில் மட்டுமே மாநிலப் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் இருப்பார்கள். அவர்கள் பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகள்தான்.

இந்த ஆணையம் தொடர்பான கொள்கைகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். மாநில அரசுகள் இந்த மருத்துவ ஆணையத்தின்
விதிகளை அமல்படுத்தியே தீர வேண்டும் என்றெல்லாம் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ சேவையிலும் மருத்துவக் கல்வியிலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று ஒலிக்கும் குரல்கள் நியாயமானவை.

இரட்டை நிலைப்பாடு

மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், திறமையான மருத்துவர்களைப் போதிய அளவு உருவாக்கவுமே இந்த ஆணையம் எனும் வாதமும் ஏற்கத்தக்கதல்ல.  மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கி, கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம்  செலுத்த வேண்டும். சொல்லப்போனால், இந்தப் பணியை முறையாகச் செய்யவிடாமல், இந்திய மருத்துவ கவுன்சிலைத் தடுத்துவந்ததே மத்திய அரசுதான். போதிய  அடிப்படை வசதிகள் இல்லை என இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரிகளுக்கெல்லாம், மத்திய அரசே நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது.  மத்திய - மாநில அரசுகள் போதிய அளவில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதே இதற்குத் தீர்வாகும்.

மருத்துவ நெறிமுறைகள் (Medical Ethics) காணாமல் போனதற்கு, இந்திய மருத்துவ கவுன்சிலைக் குறை சொல்கிறது மத்திய அரசு. ஆனால், மருத்துவ  நெறிமுறைகள் மறைந்துவிட்டதற்குக் காரணம் மருத்துவக் கல்வியும், மருத்துவமும் தனியார்மயமானதும், வணிகமயமானதும்தான். அதைக் கட்டுப்படுத்தாத மத்திய  அரசு, பெருநிறுவனங்களின் கரங்களில் மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் மேலும் ஒப்படைக்கும் வகையில் தேசிய நலக் கொள்கையை  (2017)கொண்டுவந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவே இந்தப் புதிய மருத்துவ ஆணையம் என்கிறது மத்திய அரசு. இதற்கெனத் தனியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
உள்ளது. அதற்குப் போதிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியை இந்த அரசு 25% குறைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு லாபம்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியை மருத்துவ ஆணையம் செய்யும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் உள்ள 40%-க்கும் குறைவான மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றே இம்மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளின் கட்டண நிர்ணயக் குழுக்கள், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 100% இடங்களுக்கும் கட்டணங்களை நிர்ணயித்துவருகின்றன. இந்நிலையில், அதைப் பாதிக்கும் வகையில் இம்மசோதா உள்ளது. இது தனியார் கல்லூரிகளுக்கே சாதகமாகும். தவிர, மருத்துவ ஆணையம் இல்லாமலேயே, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். அதை மத்திய அரசு செய்யாதது ஏன்?

புதிய மசோதாவின்படி, மருத்துவ மாணவர்கள் உள்ளுறை மருத்துவர்களாகப் பயிற்சியை முடித்த பிறகு, தேசிய உரிமத் தேர்வு (National Licentiate Testt) எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவராகப் பதிவுசெய்ய முடியும். அந்தத் தேர்வே, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும் என்கிறது இம்மசோதா.

எல்லாவற்றையும் தாண்டி, ஆயுர்வேதம், யுனானி, யோகா, சித்தா, ஓமியோபதி மருத்துவம் பயின்றவர்களும் நவீன மருத்துவத்தின் மருந்துகளைப் பயன்படுத்தலாம்  எனவும், அவர்கள் இணைப்புப் படிப்பு மூலம் நவீன மருத்துவத்தைப் படிக்கலாம் எனவும், அம்மருத்துவத்தில் முதுநிலை மருத்துவம் பயிலலாம் எனவும் இம்மசோதா  கூறுகிறது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

மேலும், தனியார் தொழில் நிறுவனங்கள் லாப நோக்கோடு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு உதவும் வகையிலும், வெளிநாட்டு தனியார் மருத்துவப்  பல்கலைக்கழகங்களையும் வெளிநாட்டு மருத்துவர்களையும் தங்குதடையின்றி அனுமதிக்கவும் மருத்துவ ஆணையம் வழிவகுக்கும் என்று பரவலாக அச்சம்  எழுந்திருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இம்மசோதா அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் உரிய நியாயம் கிடைக்குமா என்று இந்திய  மருத்துவ உலகம் காத்திருக்கிறது!

- நன்றி: தி இந்து 4-1-18

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.