தமிழர் தேசிய முன்னணி தலைவராக பழ. நெடுமாறன் - தேர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:06

தமிழர் தேசிய முன்னணியின் மாநிலக் குழுவான தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டம் தஞ்சை சைலசா திருமண மண்டபத்தில் 10-01-2018 அன்று காலை 11 மணிக்கு  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர், இளைஞர், மாணவர் அணிகளின்அ மைப்பாளர்கள்கலந்துகொண்டனர். 

தமிழர் தேசிய முன்னணியின் கட்சித் தேர்தல்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு இறுதியாக மாநிலத் தலைவர், பொருளாளர் மற்றும் 14 செயற்குழு உறுப்பினர்கள்,  தணிக்கைக் குழு, சொத்துப் பாதுகாப்புக் குழு, தேர்தல் குழு ஆகியவற்றுக்கான தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையாளர் பா.  இறையெழிலன் தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளரின் சிறப்பு அனுமதி பெற்று பழ. நெடுமாறன் முதலில் பேசும்போது, "மறைந்த மூத்த துணைத் தலைவர் சேலம் மு. பாலசுப்பிரமணியம், மறைந்த மூத்த பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் ஆகியோருக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து  நின்று அமைதி காக்குமாறு வேண்டிக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "கடந்த நாற்பதாண்டு காலமாக தமிழ்த் தேசியப் பதாகையை உயர்த்திப் பிடித்து அடக்குமுறைகளை இன்முகத்துடன் ஏற்றும்,  பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் எனது தோள் கொடுத்து துணை நின்று இன்றுவரையிலும் இனிமேலும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் மூத்த  தோழர்களுக்கும், இளைய தோழர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட அளவில் கட்சியின் தேர்தல்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இப்போது மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. நமது அமைப்பின்  சட்டத்திட்டத்திற்கிணங்கவும், சனநாயக முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கு எனது  வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய பொறுப்புகளை ஏராளமான இளைஞர்கள் ஏற்றிருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சியை  அளிக்கிறது.

தலைவர் பொறுப்பில் உள்ள எனக்கும், மாநில நிர்வாகிகள் பலருக்கும் வயதாகிவிட்டது. மாநில அளவில் பொறுப்புகளை ஏற்கும் தகுதி படைத்த இளைஞர்கள்  ஏராளமாக உள்ளனர். தமிழ்த் தேசிய நெடும் பயணத்தைத் தொடர்ந்து நடத்தவும், நமது இலட்சியத்தை நோக்கி வெற்றிகரமான பாதையில் அழைத்துச்செ ல்லவும்  அவர்கள் முன்வர வேண்டும். மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதிமிக்க தோழர்கள் பலர் உள்ளனர். இல்லை என்று கூறினால் தக்கவர்களை உருவாக்காத  குற்றத்திற்கும், பழிக்கும் நான் ஆளாவேன்.

ஓய்வு எடுப்பதற்காகவோ, ஒதுங்கிக்கொள்வதற்காகவோ இவ்வாறு நான் கூறவில்லை. வாழ்க்கை நெடுகிலும் களப் போராளியாகவே வாழ்ந்துவரும் எனக்கு ஓய்வு  என்பது ஒருபோதும் இல்லை. தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்த் தேசியர்களுக்கான வழிகாட்டியாகத் தொடர்ந்து திகழ்வேன். தமிழ்த்  தேசியம் தழைக்கவேண்டும்; வெல்லவேண்டும். என்னுடைய வாழ்நாளிலேயே அது நடைபெற்றால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். ஆனால், தமிழ்த் தேசியத்தை  நிலைநிறுத்தும் மகத்தான பணியில் ஒரு தொடர் ஓட்டக்காரனுக்கு இருக்கும் உள்ளத்திண்மை எனக்கும் உள்ளது. தொடர் ஓட்டத்தில் முதலில் கையில் குச்சியுடன்  ஓடுபவன் வட்டம் சுற்றிவந்து அடுத்து நிற்பவனிடம் அந்தக் குச்சியைக் கொடுப்பான். அவன் ஓடி அவனுக்கடுத்தவன் கைக்கும் - இறுதியாக அவனும் ஓடி  எட்டிப்பிடிக்கவேண்டிய எல்லையைத் தொட்டு வெற்றிக்கனியைப் பறிப்பான். இத்தகைய உள்ளப்பாங்கு நமது தோழர் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். தமிழ்த் தேசியப் பதாகையை உயர்த்திப் பிடித்து தொடர்ந்து ஓடத்தக்க உள்ளத்திண்மைப் படைத்த ஆளுமைகளுக்கு நம்மிடையே பஞ்சம் இருப்பதாக நான் கருதவில்லை.  தமிழ்த் தேசிய இலட்சியத்தைக் கடந்த நாற்பதாண்டு காலமாக உள்ளத்தில் தாங்கியும், உரத்தக்குரலில் முழங்கியும், அதற்காக எண்ணற்ற அடக்குமுறைகளை ஏற்றும்  இனியும் ஏற்கவும், நான் மட்டுமல்ல, இங்குக் கூடியிருக்கும் நம்முடைய தோழர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தனியொரு தலைவனை நம்பி எந்தவொரு இயக்கமும், கட்சியும் இருக்கக் கூடாது. தத்துவத்தை நம்பி மட்டுமே இயக்கமும், கட்சியும் இயங்கவேண்டும். என்றும்  வற்றாத உயிரூற்றாக நமது அமைப்புத் திகழவேண்டுமானால் புதிய ஆளுமைகள் தொடர்ந்து பொறுப்பேற்கவேண்டும். இல்லையெனில் நமது அமைப்பு சிறு  குட்டையாகத் தேங்கிவிடும்.

பல்வேறு சாதனைகளைச் செய்த பெருமை நமக்கு உண்டு. 1981ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் கூலி உயர்வுக்காகப் போராடிய விவசாயத் தொழிலாளர்களை  நக்சலைட்டுகள் எனக் குற்றம் சுமத்தி மோதல் சாவுகள் என்ற பேரில் அப்பாவிகளை சுட்டுக்கொன்றது காவல்துறை. அப்போது அம்மாவட்டத்தில் சுற்றுப்பயணம்  செய்து உண்மைகளைக் கண்டறிந்து வந்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக்கூறி காவல்துறையின் அட்டூழியத்தை அம்பலப்படுத்தி அதற்கு  முற்றுப்புள்ளி வைத்த பெருமை நமக்கு உண்டு.

1983ஆம் ஆண்டு சூலை மாதம் கொழும்பு நகரில் 3,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள இனவெறியர்கள் கொன்றுக்குவித்தபோது தமிழகம் கொந்தளித்தது.  அப்போது 5,000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை அணிதிரட்டி மதுரையிலிருந்து இலங்கையை நோக்கித் தியாகப் பயணத்தை நாம் மேற்கொண்டபோது  தமிழகமெங்கும் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் ஈழத் தமிழர் பிரச்சினை காட்டுத்தீ எனப் பரவியது.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, 13 தமிழகத் தமிழர்கள், 13 ஈழத் தமிழர்கள் ஆகியோர் மீது பொய்யான குற்றம்  சுமத்தப்பட்டு 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அனைத்துத் தமிழ்த் தேசிய  அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவினை அமைத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை  செய்யப்பட்டனர். 3பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகளைத் தவிர  வேறு எந்தக் கட்சியும் 26 தமிழர்களின் பிரச்சனையில் தலையிடவோ, உதவவோ முன்வரவில்லை. மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை தமிழகம் தழுவிய  இயக்கமாக நடத்தியும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், ஏழுபேரின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறோம்.

காவிரிப் பிரச்சனை உள்பட தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கன்னட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியபோது, அவர்  முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று குரல் கொடுத்ததோடு காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேசி கன்னட நடிகர் இராஜ்குமாரை மீட்டு இரு  மாநிலங்களிலும் இனக்கலவரம் உருவாகாமல் தடுத்த பெருமையும் நமக்கு உண்டு.

வீரப்பன் அவர்களுக்கு உணவளித்தார்கள், உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 120க்கும் மேற்பட்ட மலைவாழ் தமிழ் மக்களை கர்நாடக அரசு கைது செய்து  ஒன்பதாண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை செய்தபோது அவர்களின் வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று விடுதலைபெற  வழிவகுத்தப் பெருமையும் தமிழ்த் தேசியர்களுக்கே உண்டு.

தமிழீழத்திலிருந்து கண், கை, கால் போன்ற உடலுறுப்புகளை இழந்து உயிர்தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்தவர்கள் மீது பொய்யான குற்றம் சுமத்தி தேசியப்  பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் கொடும் சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைகளுக்கு ஆளானபோது தேசிய மனித உரிமை  ஆணையத்தில் முறையிட்டு அவர்கள் விடுதலைப் பெறுவதற்கு வழிவகுத்தப் பெருமையும் தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு.

விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு வந்த கப்பலை நடுக்கடலில் மறித்து, கிட்டு உட்பட 9பேர் உயிரிழக்க இந்தியக் கடற்படையே காரணமாக இருந்தது. அக்கப்பலின்  மாலுமிகளான 7 தமிழர்களைக் கைது செய்து விசாகப்பட்டினம் சிறையில் அடைத்தது. அவர்களுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அவர்களை  மீட்டெடுத்தப் பெருமையும் தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு.

1990ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து "தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு' ஒன்றினை அமைத்து ஈழத்த மிழர்களுக்கு  ஆதரவாகப் போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினோம். அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டபோது உயர்நீதிமன்றத்தில் போராடி அந்தத் தடைகளைத்  தகர்த்தோம். அப்போது எந்த அரசியல் கட்சியும் நம்முடன் இணைந்து போராட முன்வரவில்லை.

1993ஆம் ஆண்டு தடாச் சட்டத்தில் என்னைக் கைது செய்தார்கள். ஆனால், நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது.  

2001ஆம் ஆண்டில் தஞ்சையில் நாம் நடத்தவிருந்த தமிழர் தன்னுரிமை மாநாட்டிற்குத் தடை விதித்து நம்முடைய தோழர்கள் பலரையும் பெருஞ்சித்திரனார்,  சாலையார், சாலினி அம்மையார் போன்ற தமிழறிஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்முடைய தோழர் முருகேசன் உட்பட மூவர் மீது தேசியப்  பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் போராடி அவர்களை விடுதலை செய்ய வைத்ததோடு மாநாட்டினையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.

2003ஆம் ஆண்டில் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து "உலகத் தமிழர் பேரமைப்'பினை உருவாக்கினோம். அதன் தொடக்க மாநாட்டுக்குத்த டை  விதிக்கப்பட்டபோது அதையும் உடைத்தெறிந்து மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினோம். உலகத் தமிழர்களை ஒன்றுபட வைத்தோம்.

தமிழ்த் தேசியம் பேருருவம் எடுப்பதைக்கண்டு அஞ்சிய திராவிட ஆட்சி என்னையும், நமது தோழர்களையும் பொடாச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தமிழர் தேசிய இயக்கத்திற்குத் தடை விதித்தது. இன்றளவும் அந்தத் தடை நீடிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தடைக்கெதிராக நாம் தொடுத்த வழக்கு இன்னமும்  நடக்கிறது.

"தமிழீழம் சிவக்கிறது' "காவிய நாயகன் கிட்டு' என்ற தலைப்புகளில் நான் எழுதிய நூல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னமும் அந்தத்  தடை நீடிக்கிறது.

கடந்த நாற்பதாண்டுக் காலமாக நமது தோழர்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார்கள். தமிழர்களின் உரிமைகளைக் காக்க நாம்போ ராடியதற்காக  அடக்குமுறைகளையும், சிறைவாசங்களையும் இன்முகத்துடன் ஏற்றோம். தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்ல எல்லாவிதமான ஈகங்களுக்கும் தயாராக  இருக்கும் படைவீரர்களைக் கொண்டதுதான் தமிழர் தேசிய முன்னணியாகும் என்பதை மத்திய - மாநில அரசுகள் உணரவேண்டும்.  இந்துத்துவா பாசிசம் தனது காலடித் தடத்தைத் தமிழகத்தில் பதிக்கத் துடிதுடித்து நிற்கிறது. சிவப்புக்கம்பளம் விரித்து அதனை வரவேற்கத் திராவிடக் கட்சிகள் போட்டிபோடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியர்கள்தான் அவர்களை எதிர்த்துத் துணிவோடு போராடமுடியும். நம்மைவிட்டால் வேறு யாரும் அதைச்  செய்வதற்கு முன்வரப் போவதில்லை என்பதை உணரவேண்டும். அதற்காக முன்னிலும் பன்மடங்கு வீறுகொண்டு நாம் செயல்பட ஆயத்தமாகவேண்டும்.

இந்துத்துவா பாசிசம் நம்மை மட்டுமல்ல, அனைத்து மொழிவழித் தேசிய இனங்களையும் அடியோடு அழிப்பதற்குக் காத்திருக்கிறது. "ஒரே நாடு பாரதம்; ஒரே மொழி சமற்கிருதம்' என்பதுதான் அவர்களின் உள்நோக்கமாகும். 

இந்தியாவில் மொழிவழித் தேசிய இனப்பிரச்சனைக் கூர்மை அடைய இந்துத்வா சிதறும். இந்தச் சிதறலிலிருந்து தமிழ்த் தேசியம் மேலெழுந்து வெற்றிப்பெறும்.  ஆனால், அதற்கான அடக்குமுறைகளை உறுதியோடு சந்திக்கவும், செய்யவேண்டிய தியாகத்தைச் செய்வதற்கும் நம்மை நாமே தயார்செ ய்துகொள்ள வேண்டும்.  நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தொண்டு, துன்பம், தியாகம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியர்கள் ஓர் அணியாகத் திரளவேண்டும். பொறுமை,  பெருந்தன்மை, தொலைநோக்கு ஆகியவற்றுடன் அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் அரவணைத்துக்கொண்டு நாம் முன்செல்ல வேண்டும்.

இளையத் தலைமுறையினர் தலைமைப் பொறுப்பை ஏற்று மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும். அவர்களுக்குத் துணை நிற்கவும்,  வழிகாட்டவும் நானும் மற்றும் மூத்தத் தோழர்களும் என்றும் தயாராக இருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமைப் பொறுப்பையும் நான் சுமந்து கொண்டிருக்கிறேன். தமிழீழத்தில் படுகொலைக்கு ஆளான நமது  உறவுகளின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைக் கட்டிக்காக்கவேண்டிய பெரும் பொறுப்பும் எனக்கு உள்ளது. எனது சுமையைப் பகிர்ந்துகொள்ள இளையத் தலைமுறை முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்' என உருக்கமுடன் பேசினார்.

தீர்மானங்கள்

இதைத் தொடர்ந்து, பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை அறிந்து முடிவு செய்வதற்காக மாவட்ட வாரியாகத் தோழர்களை மாநிலத் தேர்தல்  ஆணையாளர் இறையெழிலன், பழ. நெடுமாறன் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை அறிந்தனர்.

அதன்பிறகு, நடைபெற்ற மாநில நிர்வாகிகளின் கூட்டத்தில் இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் கூடிப்பேசி தெரிவித்த முடிவுகளுக்கிணங்க கீழ்க்காணும்  தீர்மானங்கள் பேரவைக் கூட்டத்தில் முன்மொழிந்து வழிமொழியப்பட்டன.

தீர்மானம்-1

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பதவிக்கு பழ. நெடுமாறன் அவர்களின் பெயரைப் புலவர் இரா. மதிவாணன் அவர்கள் முன்மொழிய தமிழ்வேங்கை  அவர்கள் வழிமொழிந்தார். இத்தீர்மானத்தைத் தேர்தல் ஆணையாளர் பேரவையில் முன்வைத்தபோது பேரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

தீர்மானம்-2

பொருளாளர் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு, தணிக்கைக்குழு, சொத்துப்பாதுகாப்புக்குழு, தேர்தல் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களை அனைவரிடமும்
கலந்தாய்வு செய்து நியமனம் செய்யும் அதிகாரத்தைத் தலைவருக்கு வழங்குவது என்ற தீர்மானத்தை சி.சி. சாமி முன்மொழிந்தார். திருமதி. சாய்ரா  வழிமொழிந்தார். இந்தத் தீர்மானத்தையும் பேரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

தேர்தலைச் சிறப்பாக நடத்துவதற்கு உதவிய அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் பா. இறையெழிலன் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொன். வைத்தியநாதன் நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.