முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப இன்னார் & இனியார் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருடனும் நட்புறவு கொண்டு அன்பினை அள்ளிப் பொழிந்தவர் இனிய நண்பர் நடராசன் ஆவார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்ற குறளின் வரிகளுக்கொப்ப நேற்றிருந்த நண்பர் நடராசன் இன்று இல்லை. மார்ச் 18ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அதி தீவிர மருத்துவ பிரிவில் படுத்தப்படுக்கையில் நினைவின்றி இருந்த நிலையில் அவரை நான் பார்த்தேன். மயக்க மருந்து செலுத்தப்பட்டு மயங்கிய நிலையிலிருந்த அவர் காதருகில் நான் வந்திருப்பதை மருத்துவர் உரத்தக் குரலில் கூறினார். அதை அறிந்துகொண்டு அவர் தலையை அசைத்தார். ஆனாலும், விழிகளைத் திறக்கவோ அல்லது வாய் திறந்து பேசவோ இயலாத நிலையில் இருந்தார். அவரின் இந்த நிலையைப் பார்த்துக் கண் கலங்கினேன். ஆனால், 20ஆம் நாள் அன்று அவர் மறைந்துவிட்டார் என அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன் அவருக்கு கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எந்தவிதமான வேண்டாத பழக்கங்களும் இல்லாத அவருக்கு ஏன் இந்த பாதிப்பு என்பது யாருக்கும் புரியவில்லை. தனது துணைவியார் சிறையில் இருக்கவேண்டி நேர்ந்த நிலை அவரது உள்ளத்தைப் பெருமளவு உலுக்கிவிட்டது. ஆனாலும், மிகத் தேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவற்றுக்கான மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள். அவரும் நன்கு உடல்நலம் தேறி வந்தார். அப்போது சிலமுறை சந்தித்தேன். நன்கு பசியெடுக்கத் தொடங்கிவிட்டது என அவர் கூறியபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். சில நாட்கள் கழித்து மாமல்லபுரத்தில் ஓய்வுக்காகத் தங்கியிருந்தார். என் துணைவியாரும், பேத்தியும், நானும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். என் பேத்தியை அழைத்துக்கொண்டு வெளியே உள்ள பூங்காவில் உள்ள குழந்தைகளுக்கான விளையாடும் இடங்களைச் சுட்டிக்காட்டி அவளை மகிழ்வித்தார். நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தோம். இரண்டொரு நாட்களில் சென்னை திரும்பிவிடுவதாக அவர் கூறினார். சென்னை வந்ததும் சந்திப்பதாகக் கூறிவிட்டு விடைபெற்றோம். இரண்டு நாட்கள் கழித்து திடீரென தொலைப்பேசி மூலம் எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டிருப்பதாக அவர் கூறியபோது திடுக்கிட்டுவிட்டேன். ்இந்த உடல்நிலையில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா? வேண்டாம். நானே வருகிறேன்” என்று கூறினேன். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவரை வரவேற்றேன். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுவிடைபெற்றார். அதுவே அவருடன் கடைசியாகப் பேசியது என்பதை உணராமல் போனேன். அரசியல் ரீதியாக எங்களுக்குள் வேறுபட்ட நிலைப்பாடுகள், கருத்துக்கள் இருந்தபோதிலும் அவற்றுக்கு அப்பாற்பட்ட நட்புறவு எங்களுக்குள் இறுதிவரை நிலவியது. நட்பு மட்டுமன்று, என்னிடம் அளவுகடந்த மதிப்புக் கொண்டிருந்தார். அவர் நடத்திய நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அவற்றில் என்னை முதன்மைப்படுத்தியே நடத்தினார். நான் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் அவர் நடத்தியதில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியாகத் திகழ்ந்தார். மொழிப் போராளியாகத் தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து இறுதிவரை மொழி, இன உணர்வுமிக்கத் தமிழனாக வாழ்ந்தார். ஈழத் தமிழர் பிரச்சனையில் நாங்கள் இருவரும் மிக நெருங்கிப் பழகினோம். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு போராட்டம் ஒன்றில் அவரும் கலந்துகொண்டு என்னுடன் சிறைப் புகுந்தார். அவர் சார்ந்திருந்த கட்சியின் நிலைப்பாடு முதலில் வேறு மாதிரியாக இருந்தாலும் மெல்லமெல்ல அக்கட்சியின் தலைமையை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திருப்பியதில் அவருக்குப் பெரும் பங்கு இருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு அவர் உருவாக்கிய கட்சி பிளவுப்பட்டது. ஒரு கட்டத்தில் அதை ஒன்றுபடுத்தி, இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்டுக்கொடுத்த செயல் மறவர். அதைப் போல அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அவருக்கு இருந்த நெருங்கிய நட்பின் விளைவாக கூட்டணிகளை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். தன்னை ஒருபோதும் முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் திரைக்குப் பின் இருந்து எல்லாவற்றையும் அவரே செய்தார் என்பது மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். பதவிகளில் அமர பிறருக்கு ஏணியாக இருந்து உதவினாரே தவிர, அவர் ஒருபோதும் எவ்விதமான அதிகாரப் பதவியையும் வகிப்பதில் நாட்டம் கொள்ளவில்லை. அகில இந்திய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் அவருக்கிருந்த நெருக்கமான நட்புறவை தனது சொந்த நலனுக்காக அவர் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏறத்தாழ 11/2 இலட்சம் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது தமிழகமே கொந்தளித்தது. பல போராட்டங்கள் வெடித்தன. எல்லாவற்றிலும் அவர் பங்குகொண்டார். தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் படுகொலை போல ஒரு நிகழ்ச்சி இதுவரை நடந்ததில்லை. இந்தக் கொடுமையை வருங்காலத் தமிழர்கள் உணரவேண்டும். ஒருபோதும் மறக்கக் கூடாது. எனவே அந்த நினைவை அழியாமல் நிலைநிறுத்தும் வகையில் நினைவுத் தூண் அமைப்பதென உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்தது. 2&6&2010 அன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அவரே தலைமை தாங்கினார். நினைவுத் தூண் நிறுவும் திட்டத்தை விரிவாக்கி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாவதற்கு அவரே காரணமாவார். முற்றம் அமைய நிலம் கொடுத்ததோடு அதை எழுப்புவதற்குப் பெருந்துணை புரிந்தார். கலை உணர்வுமிக்க அவர் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் கண்ட நினைவுச் சின்னங்களைப் படமெடுத்துக் கொண்டுவந்து என்னிடம் அளித்தார். முற்றம் உருவாக்கத்தில் அவரது கலையுணர்வு பெரும் பங்கு வகித்தது. முற்றத்தைக் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயிற்று. இந்த மூன்று ஆண்டுகளில் இடைவிடாமல் தொடர்ந்து முற்றத்திற்கு வருகை தந்து வேலைகளை சரி பார்ப்பார். சிற்பிகளையும் மற்றும் கட்டடத் தொழிலாளர்களையும் ஊக்குவிப்பார். முற்றத்தின் திறப்பு விழாவினை 2013 ஆம் ஆண்டு நவம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் சிறப்பாக நடத்த அவரும், நானும் மற்றும் தோழர்களும் திட்டமிட்டிருந்தோம். ஆனால், வரலாற்றில் என்றும் அழியாத திருப்புமுனை நிகழ்ச்சியாக திறப்புவிழா அமையவேண்டும் என விரும்பினார். ஆனால், அரசு தரப்பிலிருந்து அதற்குத் தடை பிறப்பிக்கப்படலாம் என்ற நிலை உருவானபோது உடனடியாக உயர்நீதி மன்றத்தில் முறையிட்டு திறப்புவிழாவிற்கான அனுமதியைப் பெற்றோம். ஆனால், அரசு தரப்பில் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணைப் பெறக்கூடும் என்ற ஐயம் என் உள்ளத்தில் எழுந்தது. திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்களே இருந்தன. நவம்பர் 6ஆம் தேதி அதிகாலை தஞ்சையில் உள்ள அவரது இல்லத்திற்கு விரைந்து சென்றேன். தூக்கத்தில் இருந்தவரை எழுப்புமாறு கூறினேன். பதற்றத்துடன் அவர் எழுந்து வந்தார். அவரிடம் எனது ஐயத்தை விளக்கிக் கூறி உடனடியாக இன்றே திறந்துவிடலாம் என நான் கூறியபோது முதலில் அவர் தயங்கினாலும் பிறகு உடனடியாக ஏற்றுக்கொண்டார். அவசரஅவசரமாக என்னுடன் புறப்பட்டு முற்றத்திற்கு வந்தார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் தலைமை தாங்க நான் முற்றத்தைத் திறந்து வைத்தது ஒரு வியப்பூட்டும் வரலாற்று நிகழ்ச்சியாகும். நாங்கள் எதிர்பார்த்தது போலவே உச்சநீதிமன்றத்தில் தடை ஆணைப் பெற செய்யப்பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. திறப்புவிழா நடைபெற்றுவிட்ட ஒரு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அன்று நாங்கள் இருவரும் முற்றத்தைத் திறந்து வைத்திருக்காவிட்டால் இன்றுவரை திறக்க முடியாமலேயே போயிருக்கும். 2012ஆம் ஆண்டில் அவரது 70ஆவது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற போது மலேசியா வாழ் தமிழர்கள் இயக்குநர் சினேகன் மூலம் அவருக்கு 70பவுன் சங்கிலியை அணிவித்ததோடு, மகிந்திரா ஙீக்ங-500-ஙி8 என்னும் மகிழுந்தையும் அவருக்கு வழங்கினார்கள். அடுத்த கணமே பொற்சங்கிலியையும், மகிழுந்தின் சாவியையும் மேடையில் அமர்ந்திருந்த என் கைகளில் திணித்து இது முற்றத்திற்குத்தான் என்று கூறினார். கூடியிருந்த கூட்டம் முதலில் திகைப்படைந்தாலும் பிறகு பெரும் ஆரவாரத்துடன் பாராட்டியது. மேடையில் அதை மறுக்க இயலவில்லை. மறுநாள் மகிழுந்தையும், பொற்சங்கிலியையும் எடுத்துக்கொண்டு அவருடைய இல்லத்திற்குச் சென்று "மலேசியத் தமிழர்கள் உங்கள் மீது கொண்ட பேரன்பின் காரணமாக உங்களுக்கு அளித்தப் பரிசை நான் ஏற்பது முறையாக இருக்காது. அதை உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறேன்" என்று கூறியபோது அவர் பிடிவாதமாகப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அந்த மகிழுந்து இன்னமும் முற்றத்தில் உள்ளது. அவருக்கு அணிவிக்கப்பட்ட பொற்சங்கிலியை விற்று அந்தப் பணத்தை முற்றத்தின் நிதியில் சேர்த்தோம். அவரின் கொடை உள்ளத்திற்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும். 2015ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாடு நடைபெற்றபோது அவருக்கு தமிழ்க் கலைமாமுகில் என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தோம். ஆண்டுதோறும் தஞ்சையில் பொங்கல் விழாவினையும், நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரர் பூலித் தேவர் நினைவுநாள் விழாவினையும், எட்டையபுரத்தில் பாரதி விழாவினையும் தனது சொந்த செலவில் நடத்தி மகிழ்ச்சியடைவார். சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் இந்த விழாக்களில் பங்குகொண்டு அவர் அளிக்கும் அறுசுவை விருந்தினை வயிறார உண்டு மகிழ்ந்து உளமாறப் பாராட்டிச் செல்வார்கள். இந்த ஆண்டும் பொங்கல் விழாவை நடத்த அவர் விரும்பியபோது நானும், மற்றவர்களும் இந்த உடல் நிலையில் அது வேண்டாம் எனக் கூறினோம். அப்போது அவர் கூறியது இன்றும் எனது உள்ளத்தில் துயரத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ்ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பொங்கல் விருந்திற்காகக் காத்திருப்பார்கள். அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்றுதான் கருதுகிறேன்” என்றார். தனது உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் விருந்தோம்புவதையும், ஏழை மக்களின் பசியாறு வதையும் கடைப்பிடிக்க நினைத்தார். செல் விருந்தோம்பி வரு விருந்திற்காகக் காத்திருப்பவர் நண்பர் நடராசனாவார். நட்பு பாராட்டுவதிலும் அவருக்கு இணை யாரும் கிடையாது. வெளியே தெரிந்தும், தெரியாமலும் அனைவருக்கும் உதவுதல் அவரோடு ஒட்டிப் பிறந்த ஒன்றாகும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்னும் வாக்கிற்கேற்ப வாழ்ந்தவர் அவர். உலகம் முழுவதிலும் அவருக்கு நண்பர் குழாம் உண்டு. அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று நண்பர்களுடன் அளவளாவித் திரும்புவார். அந்த நண்பர்கள் தமிழகம் வரும்போது விருந்தோம்பிப் போற்றுவார். இத்தகைய சீரிய பண்பு நலன்கள் நிறையப் பெற்ற என்னுடைய இனிய நண்பர் நடராசன் அவர்களின் மறைவு எனது உள்ளத்தில் என்றும் ஆறாத புண்ணாக வருத்திக்கொண்டே இருக்கும். அவர் மறைந்த போது சென்னையிலும், தஞ்சையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மலர் வணக்கம் செலுத்தினார்கள். கட்சி சாதி, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் திரண்டனர். அதிகாரப் பதவி எதுவும் வகிக்காத ஒருவர் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பென்பது அவரைப் புரிந்து கொள்ளாதவர்களையும் புரிந்துகொள்ள வைத்திருக்கும். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாகவும், துணையாகவும் இறுதிவரை இருந்த அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் சார்பில் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பிற்கும், மதிப்பிற்கும் அழியாத சான்றாக இது திகழ்கிறது. தஞ்சையில் அவர் இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் துயரத்துடன் பின் தொடர்ந்தார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவரது உடல் சிறிதுநேரம் வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், முற்றத்திற்கு எதிராக உள்ள அவரது குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு நான் தலைமை வகித்தேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு புகழாரம் சூட்டினார்கள். தமிழர் வரலாற்றில் என்றும் நிலையான இடத்தையும், ஒருபோதும் மறையாத நினைவையும் ஊட்டிக்கொண்டே இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரில் விதைக்கப்பட்டுள்ள மொழிப் போராளி முனைவர் ம. நடராசன் அவர்கள் முற்றத்தின் காவலராக என்றும் திகழ்வார். நண்பர் முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவினால் வருந்தும் அவரது துணைவியார் திருமதி. சசிகலா அம்மையார் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
|