தமிழினப் பற்றாளர் அமரர் மருதப்பன் நடராசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2018 12:57

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக் கூடியவரான திரு. மருதப்பன் நடராசன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில்  ஆழ்த்தியிருக்கின்றது.

1943ஆம் ஆண்டு  தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், விளார் எனும் கிராமத்தில் பிறந்தவர்  நடராசன்.  இயல்பாகவே தமிழ்மொழியிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.  இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலேயே மொழிப்போர் தீவிரமடைந்திருந்தது. பொங்கு  தமிழுக்கு பங்கம் ஏற்படாதிருக்க தாய்த்தமிழ் மொழியுணர்வோடு  இந்த மொழிப்போரில் தன்னை  இணைத்து, 1965இல்  இந்தி மொழித்  திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் ஏற்படுத்திய மொழி உணர்வு இளைஞர்களின் நெஞ்சங்களில் தொற்றி, தமிழ்நாட்டில் தமிழ்மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த  போராட்டத்தில் மாணவர் தலைவராக முன்னின்று உழைத்தவர்.
இவர் 1975இல் திருமண வாழ்வில் இணைந்துகொண்டார். தமிழினத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் பண்பாட்டின் மீதும் தீராக்காதல் கொண்டவர். தமிழ்ப் பண்பாட்டு விழாக்களைச் சிறப்புற நடத்துவதற்கு உற்சாகத்துடன் ஒத்துழைப்பு வழங்குபவர்.  தற்பெருமையின்றி தமிழுணர்வோடு செயற்பட்டு வந்தவர்.
2009இல் தமிழர்  தாயகத்தில் இலங்கை அரசு நடத்தியது தமிழினப் படுகொலைதான் என, மறைந்த மிழக முதலமைச்சர் செல்வி  ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பின்னணியில் பலமாக இருந்து, ஊக்குவிப்பு வழங்கியவர் அமரர்   ம. நடராசன். அதுமட்டுமன்றி பல நாடுகளுக்குப் பயணித்து, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்து விளக்கியதுடன், தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் எடுத்துரைத்தவர். இதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டவர்.
பல்கலைக்கழகக் கல்வியை முடித்து மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக அரசுப்பணி ஏற்றுக்கொண்ட இவர், பல  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க முன்னின்று பாடுபட்டார். தமிழர்கள் மீதும் தமிழ்மொழி  மீதும் பற்றுக்கொண்டிருந்த காரணத்தால், தமிழர்  தாயக விடுதலைப் போருக்கு ஆதரவு வழங்கினார்.
தாயக விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஒப்புவித்த உயிர்க்கொடையாளர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்கின்ற நினைவிடத்தை அமைப்பதற்கு உலகத்  தமிழர்  பேரமைப்பின்  தலைவர்  ஐயா.   பழ. நெடுமாறன் அவர்களுடன் முன்னின்று உழைத்தார். இவருக்கு உரித்தான நிலத்திலேயே அந்த  நினைவு முற்றம் அமைந்திருக்கின்றது.
இத்தகைய மொழிப்பற்றும் இனப்பற்றும்  கொண்டிருந்த இவரது  மறைவுச் செய்தி தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகவே எண்ணுகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.  தமிழ் உள்ளவரை அன்னாரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.